ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை? 'ஆரியர்கள் வருகை'. ' முகலாயர்களின் படையெடுப்பு'.
>> Saturday, September 27, 2008
'ஆரியர்கள் வருகை' 'முகலாயர்களின் படையெடுப்பு' என்று பாடப்புத்தகங்களில் சொல்லப்படும் வரலாற்றில் தான் என்று சொல்லிக் கொடுத்து பள்ளிப் பருவத்திலேயே மதத் துவேஷத்தைத் தூவி வளர்க்கிறார்கள்.
இவர்கள் குறிப்பிடும் பெருமைக்குரிய ஆரியர்கள் வருகைதான், இங்கிருந்த பூர்வகுடிகளை சாதி ரீதியாக பிரித்து,அந்த பிரிவினையில் தன்னை கொழுத்து வளர்த்துக் கொண்டு நிற்கிறது
யார் தீவிரவாதி? இஸ்லாமிய தீவிரவாதம்!
உலகம் முழுக்க உள்ள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இன்று அதிக பட்ச பயத்துடன் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவைதான். 'தீவிரவாதம்' 'வன்முறை' என்று தான் நான் கேள்விபட்டிருக்கிறேன். 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று சொல்லுகிறார்களே அது என்ன?
இஸ்லாமியர் செய்கிற தீவிரவாதம் என்று பொருள் சொல்லலாமா? பழிக்குப்பழி; ரத்தத்துக்கு ரத்தம்' என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும் போது, தீவிரவாதத்திற்கு முன்னால் 'இஸ்லாமிய' என்கிற அடைமொழி ஒட்டிக்கொள்வதன் பின்னணி என்ன?
ஒரு இந்துவோ, கிறிஸ்தவரோ தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அவரை 'இந்து தீவிரவாதி' என்றோ, 'கிறிஸ்தவ தீவிரவாதி' என்றோ ஏன் அழைப்பதில்லை?
தீவிரவாதம் என்ற விஷயம் நாடு, இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது' என மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை சொன்னாலும் அது ஏன் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை?
இப்போது உலகம் முழுக்க திரும்ப திரும்பக் கட்டவிழ்க்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களுக்கு என்ன காரணம்?
'பழிக்குபழி ரத்தத்துக்கு ரத்தம்' என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும்போது, தீவிரவாதத்திற்கு முன்னால் 'இஸ்லாமிய' என்கிற அடைமொழி ஒட்டிக் கொள்வதன் பின்னணி என்ன?
சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்பு இந்தியா முழுவதையும் முகலாயர்கள் ஆண்டதாக வரலாறு இருக்கிறது. அதிகாரமும் ஆட்சியும் இருந்தபோதே அவர்கள் நினைத்திருந்தால் மக்களை மிரட்டிப் பணிய வைத்து, இஸ்லாமிய மதத்தைப் பரப்பியிருக்கலாம்.
ஆனால் இன்றைய நடைமுறை உண்மை, முஸ்லிம்கள் இந்தியநாட்டில் வாழும் சிறுபான்மை மதத்தினர் என்பதுதான்!
அதேபோல் ஸ்பெயினிலும் சில நூறு வருடங்களுக்கு முன்பு ஆண்டிருக்கிறார்கள். இன்று ஸ்பெயினில் வாழக்கூடிய முஸ்லிம்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
எந்த முகலாய மன்னரும் இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் ஹஜ்ஜுக்கு புனிதப் பயணம் போனதாக ஒரு சிறிய தகவல் குறிப்பு கூட கிடையாது.
வெள்ளையர்கள் போல நாடு பிடிக்க வந்தவர்கள்தான் முகலாயர்கள். தாஜ்மஹாலையும் கோட்டைகளையும் கட்டினார்களே தவிர,
இஸ்லாமிய மதத்தைப் பரப்ப வந்தவர்கள் என்பதில் வரலாற்று ரீதியான சான்றுகள் எதுவும் இல்லை. அந்த வரலாற்றிலும் கூட, அவுரங்கசீப் ஒரு மோசமான முகலாய மன்னன்.
அவன் இந்துக்களை ஒடுக்கினான்' என்பது போன்ற முகலாய மன்னர்களுக்கு எதிர்மறையான சாயத்தை பூசும் வரலாற்றுத் உண்மையில் அவுரங்கசீப்பீன் அரசவையில் பல முக்கியமான பதவிகளை இந்துக்கள் வகுத்திருக்கிறார்கள்.
------------------------------------------
படிக்கவும்:
அவுரங்கசீப்.... ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி.
ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி!
--------------------------------------------------------
எத்தனையோ இந்துக் கோயில்களுக்கு அவர் நன்கொடை கொடுத்திருக்கிறார். இதை வின்சென்ட் ஸ்மித் என்பவர், 'இந்தியன் ஹிஸ்டரி' என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
மாமன்னர் அசோகரின் ஆட்சிக்கு பிறகு இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்கள் முகலாய மன்னர்கள்தான். 'ஒருங்கிணைந்த இந்தியா' என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியவர்களும் முகலாயர்கள்தான்!
'ஆரியர்கள் வருகை' என்று பாடப்புத்தகங்களில் சொல்லப்படும் வரலாற்றில் தான் 'முகலாயர்களின் படையெடுப்பு' என்று சொல்லிக் கொடுத்து பள்ளிப் பருவத்திலேயே மதத் துவேஷத்தைத் தூவி வளர்க்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் பெருமைக்குரிய ஆரியர்கள் வருகைதான், இங்கிருந்த பூர்வகுடிகளை சாதி ரீதியாக பிரித்து,அந்த பிரிவினையில் தன்னை கொழுத்து வளர்த்துக் கொண்டு நிற்கிறது.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்கிற விஷமமும் இங்கே திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக எத்தனை தூரம் மற்றவர்கள் பாடுபட்டிருக்கிறார்களோ
அதற்குக் கொஞ்சமும் குறையாமல் முஸ்லிம்களும் பாடுபட்டிருக்கிறார்கள். 'முஸ்லிம்கள் மதவெறி பிடித்தவர்கள், மதத்திற்காக எதையும் செய்வார்கள்' என்று சொல்லுபவர்கள், உண்மையான வரலாற்றை தயவு செய்து படித்து விட்டு பேச வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
'இஸ்லாம்' என்ற சொல்லின் அர்த்தமே, ஆண்டவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டு அமைதியை நிலை நாட்டுவது' என்பதுதான்.
'ஜிகாத்' என்று குறிப்பிடுவது நல்லதுக்கும் கெட்டதுக்குமான மனப்போராட்டத்தை.
அமைப்பு ரீதியிலான வன்முறையை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவிலை. ஆனாலும் வரலாற்று நெடுகிலும் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக்க் காட்டுவதன் அரசியல் என்ன?
இந்தியாவில் தலித்துகளை விட மோசமான நிலைமையில் முஸ்லிம்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது "சச்சார் கமிட்டி" அறிக்கை. அதிக அளவில் வசிக்கிறார்கள் என்று சொல்லப்படும் பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சோற்றுக்கே வழியில்லாத பரம ஏழைகளாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்,
ஆம்பூர் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு, எட்டு மணிவரை உழைத்தாலும் அவர்களுடைய ஒருநாள் கூலி பதினைந்து ரூபாய்க்கு மேல் இன்னமும் உயர்ந்து விடவில்லை.
எவ்வளவு கடுமையான உடல் உழைப்புக்கும் இங்கே கிடைக்கக்கூடிய கூலி எந்த வகையிலும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிடப் போவதில்லை என்பதை அறிந்துதான், இதே உடல் உழைப்பை வெளிநாடுகளில் கொட்டினால் நிறைய சம்பாதிக்கலாமே என்று வெளிநாடுகளுக்கு போவதை பலர் விரும்புகிறார்கள்.
காலம்காலமாகப் பதவிகளில் இருந்து சுகம் கண்டவர்கள்தான் அந்தப் பதவியை தக்க வைத்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள்.
ஐஐடி ஒதுக்கீடு விஷயத்தில் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் ஷூ பாலீஷ் போட்டு போராட்டம் நடத்தியதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.
'அவனவன் அவனவன் வேலை செய்தால் போதும்; பட்டத்தையும் பதவியையும் நாங்கள் மட்டுமே அனுபவிப்போம்' என்பதே அந்தப் போராட்டத்தின் நோக்கம்.
எங்கே இவர்களும் மேலே வந்து விட்டால் நம் நிலைமை என்னவாகுமோ என்ற பயம் பீடிக்கத் தொடங்கியதன் விளைவே இந்த
போராட்டங்கள் அனைத்தும்! ஒடுக்கப்பட்ட தலித்துகளும் சிறுபான்மையினரும் நிர்வாகத்துக்கு வந்தால்தான், அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கு விடிவுகாலம் பிறக்கும்.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு தலித்தோ, முஸ்லிமோ பிரதமராக முடியுமா? எந்த காலத்திலும் முடியாது என்பது தான் உண்மை.
இப்படியொரு காலகட்டத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்திருக்கும் 3.5 சத இடஒதுக்கீடு முக்கியமான முன்முயற்சியாக இருக்கிறது. அவசரச் சட்டத்தில் கொண்டு வர ப்பட்ட இந்த ஒதுக்கீட்டையும் கிடைக்காமல் செய்ய சில சக்திகள் முனைப்பாக இருக்கின்றன.
ஒதுக்கீடுகள் கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக் கொள்வதும் இங்கே செய்யவேண்டிய ஒன்று, நன்றாகப் படித்தால் இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு வர வேண்டும்.
ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருந்தால், அதில் ஒருவன் உழைத்தால் போதும்... மற்றவர்கள் அவனுடைய உழைப்பில் வாழலாம் என்கிற மனப்போக்கு இருக்கிறது. மற்ற சமூகங்களில் உள்ளவர்களைப் போல நாமும் படிக்க வேண்டும், நிர்வாகத் துறைகளுக்கு வரவேண்டும் என்ற விருப்பமே பலருக்கு வரவில்லை.
தங்களுக்கு அடிப்படையான தகுதிகளை வளர்த்துக் கொண்ட பிறகு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றிப் பேசுவது தானே சரியாக இருக்கும்? எதற்காகப் போராடுகிறோம் என்று தெரியாமல் போராடுவதில் என்ன நடந்துவிடப்போகிறது? குர்ஆனில் வாசகம் ஒன்று உண்டு.
'உங்கள் மனதில் மாற்றத்தை கொண்டுவராத வரையில் நாங்கள் கொடுக்கின்ற அருட்கொடைகளை மாற்றித்தரப் போவதில்லை'
இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தக்கூடிய வாசகம்!
ஆக்கம்: நாகூர் ரூமி (நன்றி: குங்குமம் 04-10-2007)
--------------------------------------------------------------
ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?
'ஏன் சார் இப்படி நடக்குது? உங்களோட நாங்க படிக்கறதுக்குப் போட்டி போடறோமோ? அரசாங்க வேலைக்கு மல்லுக்கு நிக்கறோமா? அப்புறம் ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?
''இந்தக் கேள்வியை நண்பர் அப்துல்லா என்னிடம் கேட்டார்.
ஏறத்தாழ 14 வருடங்கள் முடிந்தபிறகும் இன்னும் அந்தக் கேள்வியில் இருந்த வருத்தம் எனது நினைவில் உள்ளது.கேட்ட நாள் 1992, டிசம்பர் 6.அன்று மாலை இன்னும் சில இஸ்லாமிய நண்பர்களுடன் எனது வீட்டுக்கு வந்திருந்தார். அவரது உணர்வை என்னுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதலுக்கு எனது பெயரில் 'ராம்' இருப்பதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தி கொடுத்த வருத்தத்தில் இப்படிப் பேசுகிறார் என்பதற்குமேல் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை அப்போது புரியவில்லை. இப்போது சச்சார் கமிட்டியின் ஆய்வு முடிவுகள், அந்த வார்த்தைகளின் முழு பரிமாணத்தைப் புரிய வைக்கின்றன.
சிறுவயது முதல் கற்பித்து வளர்க்கப்படும் பல கருத்துக்களே மனிதர்களிடத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேர் விடுகின்றன. இந்தியா பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் மதத்தினர் சேர்ந்து வாழும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடு; இந்த வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அதன் சிறப்பு என்று பல வருடங்களாக நாம் போதிக்கப்பட்டு வருகிறோம்.
வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லும்போது வேறுபட்ட கருத்தும் வாழ்க்கை முறையும் கொண்டவர்கள் ஒன்றாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், இந்தியாவின் அடிப்படை ஆதாரங்களை ஒற்றுமையுடன் சமமாகப் பகிர்ந்து வாழ்கிறார்கள் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறோம்.
பெரும்பான்மையானவர்களின் அந்த எண்ணத்தில், சச்சார் கமிட்டி அறிக்கை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2005 ஆம் வருடம் மார்ச் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் இந்த ஆய்வுக் குழுவை அமைத்தார். இந்தக் குழு இந்தியாவில் இஸ்லாமியர்கள் கல்வி ரீதியாகவும், சமூக அளவிலும் பொருளாதார நிலையிலும் எப்படி இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்டது.
இந்த அறிக்கை சென்ற வாரம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரபூர்வமாக அந்த அறிக்கை பிரதமரிடம் கொடுக்கப்படுவதற்கு முன்பே ஊடகங்களில் அதன் முக்கிய அம்சங்கள் வெளியாகி விட்டன என்பது வேறு விஷயம்!
பிரிட்டிஷ் காலனி ஆட்சிக் காலத்தில் 1870 களில் மியோ பிரபு உத்தரவின் பேரில் முஸ்லிம்கள் குறித்துக் கணக்கெடுப்பு தொடங்கியது. அதன்பிறகு 1978 இல் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி ஒரு சிறுபான்மை ஆணையத்தை நியமித்தது. மீண்டும் 1980 இல் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, டாக்டர் செய்யது முகமது தலைமையில் சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கு ஒரு கமிஷன் அமைத்தார்.
டாக்டர் செய்யது முகமது வேறு பணிக்காகச் சென்றதும், கோபால்சிங் தலைமையில் இயங்கிய அந்த கமிஷன் தனது அறிக்கையை 1983 இல் அளித்தது.
ஆனால், இதுவரை எந்த அரசும் இந்த அறிக்கை குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதில் வி.பி.சிங், தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜரால் அரசுகளும் அடக்கம் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வரை எத்தனை ஆய்வுகள் நடந்திருந்தாலும், அவை அனைத்தும் ஒரே விஷயத்தைத்தான் அறிக்கையாகக் கொடுத்திருக்கின்றன.
அதாவது கல்வி, அரசுப் பணி, ஆட்சிப் பணி, காவல்துறை, நீதித்துறை, நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை...
இஸ்லாமியர்களின் காவலராகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் ஆட்சி நடத்துகிற மாநிலங்களும் இந்த நிலையில் இருந்து விதிவிலக்காக இல்லை என்பது மேலும் அதிர்ச்சி தருகிறது.
உண்மை நிலைமைகள் இப்படி இருக்கும்போது, இந்திய சமூகம் முழுவதிலும் ஆழமாக ஒரு கருத்து விதைக்கப்படுகிறது. இந்தியாவில் ஓரிரு கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம்களை மனநிறைவடையச் செய்யும் அரசியலை நடத்தி வருகின்றன என்ற பிரசாரம் நடந்து வருகிறது.
ஆனால், உண்மை நிலையோ வேறுவிதமாக இருக்கிறது.
இந்தியா விடுதலை அடைந்த அறுபது ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருந்த பிறகும் முஸ்லிம்களின் நிலை இதுதானா என்ற கேள்வி எழுகிறது.
ஆனால், அரசியல் கட்சிகள் எதுவும் இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான எந்த அவசியமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.
சில தனிமனிதர்களுக்கும் சில பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் சில சலுகைகளைச் செய்துவிட்டு அவற்றை ஒட்டுமொத்தமாக அந்த சமூகத் துக்குச் செய்த பணிகளாக சிலர் சித்திரிக்கிறார்கள். அவற்றையே எதிர் முகாமும் முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளாகச் சுட்டிக் காட்டுகின்றன.
ஆனால், இந்த சில அடையாள நடவடிக்கைகளால் முழு இஸ்லாமிய சமூகமும் பயன்பெறவில்லை என்பதை சச்சார் கமிட்டி தெரிவிக்கும் தகவல் உறுதி செய்கிறது.
மற்ற காங்கிரஸ் அரசுகளைப் போல் இல்லாமல் டாக்டர் மன்மோகன் சிங் அரசு இந்த விஷயத்தில் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஏனெனில் இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அடிப்படையான சில மாறுதல்களில் அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது.
அரசுப் பணிகள் உள்ளிட்ட சமூகத்தின் பல அங்கங்களிலும் முஸ்லிம்களுக்கு 'நியாயமான' பங்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அதை இந்த அரசு உறுதி செய்யும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியிலும் பலர் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு குறித்துக் குரல் எழுப்பி வருகிறார்கள்.
மதரீதியிலான இட ஒதுக்கீடு செய்வதற்கு இந்திய அரசமைப்பு சட்டத்தில் இடமில்லை என்று எதிர்க்குரல்களும் கேட்கின்றன.
இஸ்லாமிய சமூகம் வளர்ச்சியடையாமல் பின்தங்கியதற்கு அந்த சமூகத்தின் அரசியல் தலைமைதான் காரணம் என்று குற்றம் சாட்டுபவர்களும் இருக்கிறார்கள். மைய நீரோட்டத்துடன் கலக்காமல் அவர்கள் தனியாக இருக்கிறார்கள் என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இந்தத் தடைகளையும் தாண்டி முதலில் அவர்களுக்கு உரிய கல்வி வசதி மற்றும் பிற தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஒரு நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் ஜனநாயகப் பண்பையும் அளவிடுவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில் அங்கு சிறுபான்மையினர் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது முக்கியமானது.
இந்தியாவில் அந்தக் காரணி படிப்படியாக எதிர்மறையாகப் போய்க் கொண்டிருக்கிறது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசுப் பணிகளிலும் மக்கள்தொகைக்கு நிகரான இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்காத இந்திய அரசு,
அவர்களுக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதிக சதவிகித இடங்களைக் கிடைக்கச் செய்திருக்கிறது.
ஆம்! சிறைச்சாலைகளில் மட்டுமே அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
இந்த அவலநிலையைப் போக்குவது அரசின் கடமை. இல்லையெனில் அங்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று அரசே நினைப்பதாக அவர்கள் கருதிவிடக் கூடும்! நன்றி: ஜென்ராம் ஜூனியர் விகடன் (03-12-2006)
------------------------------------
படிக்க:>>
இந்து இந்து பயங்கரவாதம் இந்துத்துவா இஸ்லாம்
ஒளரங்கசீப் கம்ப்யூட்டர் கிறிஸ்தவம் சிந்திக்க
சிரியுங்கள் திப்பு சுல்தான் தெரிந்து கொள்ளுங்கள்
பயங்கரவாதம் பிற மதம் பைபிள் மருத்துவம் விடுதலை.காம்