திக்குவாயிலிருந்து மீளுதல் சில யோசனைகள்
>> Saturday, September 13, 2008
உலகில் இன்று மொத்தம் 45 மில்லியன் மக்கள் திக்குவாய் குறையுடன் இருக்கிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் 10 மில்லியன் இருக்கிறார்கள். இது குறிப்பாக ஆண்களுக்கே அதிகம் வருகிறது. திக்குவாய் உள்ளவர்களில் 80 சதவீதத்தினர் ஆண்களே.
இதில் 65 சதவீதத்தினருக்கு பரம்பரை மூலம் எற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெர்விக்கின்றன.
எது எப்படி இருப்பினும் 5 வயதுக்கு முன்னரே திக்குவாய் தொடங்கி விடுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்காதபோது 10 அல்லது 18 வயதில் இது உச்ச நிலையை அடைகிறது. இது பிற்பாடு நிலையாக இருந்து விடலாம் அல்லது மறைந்து விடலாம்.
திக்கிப் பேசுபவர்களுக்கு தான் என்ன பேச வேண்டும் என்று நன்றாக தெரியும். ஆனால் ஒரு சில கணத்திற்கு அவர்களால் வெளிப்படுத்த முடியாததற்கு காரணம் அறியாமல் திரும்பத் திரும்பக் கூறியதையே கூறுவது, நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது, பேச்சொலியில் நிறுத்தம் ஏற்படுதல். திக்குவாய் பொதுவாக நரம்பியல் நேரம் தவறுதலால் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது பேசும்போது திக்குபவர்கள் எப்போது தான் நினைத்ததை கூறுவது என்பதில் - நரம்பியல் நேரம் தவறுகையால் குழப்பமடைகிறார்கள். பேச்சு என்பது வெறும் நாக்கின் சுழற்சி மட்டுமே அல்ல. பேசும்போது மனம், உடல் மற்றும் மூளை ஒருங்கிணைப்பு இருப்பது அவசியம்.
அனைத்து உடல் செயற்பாடுகள் போலவே பேச்சும் நரம்பு-தசை ஒருங்கிணைப்பால் நிகழ்வதே. மூளையின் மின் ரசாயன செய்திகளை குறிப்பிட்ட தசை குழுவிற்கு அனுப்புவதில் நரம்பு-தசை ஒருங்கிணைப்பு ஈடுபட்டுள்ளது. சில சமயங் களில் உணர்ச்சி நிலைகளில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடியாத சூழ்நிலையில் நரம்பு-தசை அமைப்பு செயல் தடைப்படுகிறது.
இது சாதாரண பேச்சு உள்ளவர்களை விட திக்கு வாய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தடைப்படுகிறது. தனக்கு அச்சமூட்டுவதாக அவர் நினைக்கும் சூழலில் திக்குவாய் உள்ளவர்கள் ஏற் படுத்திக் கொள்ளும் மனத் தடையால் நரம்புகள் ஒத் துழைக்காமல் சுருங்குவதால் பேச்சுத் தடை ஏற்படுகிறது.
உணர்ச்சி நிலையில் ரிலாக்ஸாக இருக்கும்போது திக்குவாய் உள்ளவர்களும் சரளமாக பேசுவதை நாம் பார்க்க முடியும்.
மன அழுத்த சூழ்நிலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. பள்ளியில் அட்டன்டன்ஸ் எடுக்கும்போது, தொலை பேசியில் பேசும் போது, சிலரிடம் அதிகாரமாக பேசும்போது, குழுவில் பேசும் போது, வேலை நேர்முகத் தேர்வின் போது, என்று இவர்களுக்கு நெருக்கடி நிலைகள் அதிகம்.
எனினும் திக்குவாய் குறித்த இன்னொரு அதிசயம் என்னவெனில் இவர்கள் தடையின்றி பாடுவதைக் கூட சில சமயங்களில் நாம் பார்க்கலாம். ஏனெனில் அடுத்த வார்த்தை என்னவென்று முன் கூட்டியே தெரிந்து விடுவதால், நரம்பியல் நேரம் தவறுகை பேச்சில் நிகழ்வது போல் இவர்களுக்கு பாட்டில் ஏற்படுவதில்லை.
உரையாடலின் போது இது போன்ற நன்மை இல்லையாதலால் அடுத்த வார்த்தையை யோசிக்கும் தருணத்தில் பேச்சு தடுமாற்றம் ஏற்படுகிறது, இது திரும்ப திரும்ப நடக்கும்போது பயம் தோன்றி மேலும் திக்குதலை அதிகமாக்குகிறது. மற்றபடி அவர்கள் மற்ற மனிதர்களை போல்தான். சிலர் அதி புத்திசாலிகளாகவும் இருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.
சில மன நோய் நிபுணர்கள் தூக்க மாத்திரைகளை கொடுத்து மன அழுத்தத்தை குறைத்தால் பேச்சு சரளமாக வரும் என்று அத்தகைய மாத்திரைகளை தருகின்றனர். ஆனால் இது பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குவதாக பேச்சுப் பயிற்சி சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
திக்குவாய்க்கு ஹிப்னாடிஸ சிகிச்சையும் பெரிய பலன் களை ஏற்படுத்தவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஹிப்னாடிச மயக்கத்தில் சரளமாக பேசும் திக்குவாய்காரர்கள் மயக்க நிலையில் இருந்து மீண்டதும் திக்கி பேசத் துவங்கிவிடுகின்றனர்.
யோகா மற்றும் தியானம் ஆகியவைகளில் உணர்வு மற்றும் புத்தி சார்ந்த நிலைகளில் மேலதிக சம நிலை ஏற்படுவதால் திக்கு வாய்க்கு இந்த பயிற்சிகளே சிறந்தது. பேச்சு எப்படி இயல் பானதோ திக்குவதும் இயல்பானதே இது பெரிய நோய் என்றெல்லாம் கூறமுடியாது, எனவே சில பல வாழ் முறை நடைமுறை அளவுகோல்களி லேயே இதை தீர்க்க முடியும்.
திக்குவாய் உள்ளவர்களிடம் பேசும்போது நாம் எந்த வித அணுகுமுறையைக் கொள்ள வேண்டும் என்பது கீழ்வருமாறு:
என்ன கூறுகிறார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும் எப்படி கூறுகிறார் என்பது முக்கியமல்ல.
பொறுமையாக கேட்க வேண்டும், அவர்களை அவசரப்படுத்துவது கூடாது.
பேசும்போது இயல்பாக அவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்க்கவேண்டும்.
இவர்களுக்கு பேச்சில் தடையே தவிர சொல்ல வரும் விஷயத்தில் தடை எதுவும் கிடையாது. எனவே அவர்கள் குழப்பமுள்ளவர்கள் என்று கருதுவதை தவிர்க்கவேண்டும். தொலைபேசியில் இவர்கள் பேசும்போது நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் ஃபோன் லைனை துண்டித்து விட வேண்டாம்.
திக்குவாய் உள்ளவர்கள் தங்களை கேட்பவரிடமிருந்து தங்கள் திக்குவாய் கோளாரை மறைக்க விரும்புவது வழக்கம். ஆனால் இதனால் மேலும் பேச்சு தடைகள் அதிகரிக்கவே செய்யும்.
இறுதியாக கூறவேண்டுமானால் திக்குவாய் உள்ளவர்கள் பேச்சு பயிற்சியில் தொடர்ந்து நம்பிக்கையுடன் ஈடுபட்டால் சரளப் பேச்சு கைகூடிவிடும். பொறுமையாகவும் விஞ்ஞான முறைப்படியும் தொழில்பூர்வ மானவர்களின் வழிகாட்டு தலில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிச்சயம் இதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வரமுடியும்.
viduthalai/20080804/news21.html
1 comments:
//எனினும் திக்குவாய் குறித்த இன்னொரு அதிசயம் என்னவெனில் இவர்கள் தடையின்றி பாடுவதைக் கூட சில சமயங்களில் நாம் பார்க்கலாம். ஏனெனில் அடுத்த வார்த்தை என்னவென்று முன் கூட்டியே தெரிந்து விடுவதால், நரம்பியல் நேரம் தவறுகை பேச்சில் நிகழ்வது போல் இவர்களுக்கு பாட்டில் ஏற்படுவதில்லை.//
இது முற்றிலும் உண்மை. பள்ளிக்கூடத்தில் எங்களுடன் உயர் வகுப்பில் பயின்ற ஒரு நண்பர் பேசும்போது மகிவும் அதிகமாக அவருக்கு திக்கும். தொழுகையில் அவர் குர்ஆன் ஓதும்போது மிகவும் சரளமாக தடையின்றி ஓதுவார்.
Post a Comment