அடித்தா ? அடக்கியா ? அணைத்தா ?
>> Sunday, September 14, 2008
"விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்பது நம் நாட்டு முதுமொழிகளில் ஒன்று.
இதன் பொருள் - குழந்தைகளுக்குள்ளும் ஆற்றல்கள் புதைந்துள்ளன; அந்த ஆற்றல்கள் வாய்ப்புக் கதவுகள் திறக்கப்படும்போதும், தட்டிக் கொடுத்து ஊக்க மாத்திரைகளை ஊட்டச் சத்துகள்போல அவர்தம் பெற்றோர், குடும்பத்தினர் அவர்களுக்குத் தரும்போதும் அவை வெளிப்பட்டு வெற்றிக் கதிர்களாக ஒளிர்கின்றன!
பல பெற்றோர்கள் - குழந்தைகளை நல்ல முறையில் கட்டுப்பாட்டுடன் வளர்க்கவேண்டும் என்ற பேரவாவின் காரணமாக, அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டை அவர்கள்மீது திணித்து, இராணுவத்தில் கடைபிடிக்கும் ஒரு மூளைக் கட்டுப்பாட்டினைப் (Mental Regimentation) போதித்து அடக்கி ஆளவே நினைக்கின்றனர். அதைப் பெருமையாகவும் மற்ற பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்!
அச்சம்! அச்சம்!! அச்சம்!!! தான் அக்குழந்தைகளுக்கு அத்தகைய பெற்றோர்களைப் பார்த்தாலே! அன்பும், பாசமும் ஆளவேண்டிய இடத்தில் அச்சமும், அடக்குமுறைகளுமா அவர்களை ஆளுவது? இது தவறான அணுகுமுறை என்பதை வெகுகாலங் கழித்தே அத்தகைய பெற்றோர்கள் உணர்ந்து வருந்துவர்! பின்னர் வருந்திப் பயன் ஏதுமில்லையே!
குழந்தைகளிடம் பெற்றோர் பாசத்தைப் பொழியவேண்டும் என்னும்போது, அறவே கட்டுப்பாடின்றிக் கடிவாளம் இல்லாத குதிரைகள்போல ஓட - அவர்களை விட்டுவிட வேண்டும் என்று நாம் கூற விரும்பவில்லை!
Spartan Discipline- இராணுவக் கட்டுப்பாட்டுடன் வளர்ப்போம்; எதிர்த்தே பேசமாட்டான் என்பதைவிட, என் எதிரில்கூட வந்து நிற்கவே பயப்படுவான் என் மகன் என்பதைப் பெருமையாகக் கூறி, தம்பட்டம் அடிக்கும் பலரைக் காணும்போதெல்லாம் மிகவும் வருந்தவேண்டும் - அவர்களது தவறான அணுகுமுறைக்காக!
பெற்றோர்களைத் தம் முதல் நண்பர்களாகக் கருதி, மனந்திறந்து, பாசம் பொங்க, நகைச்சுவை கலந்த உரையாடல்களை நிகழ்த்த - பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் வாய்ப்புத் தருவதன்மூலமே, பிள்ளைகளை நல்வழியில் நடந்திடச் செய்ய முடியும்!
அடக்குமுறை - தண்டனை - இவை நாளடைவில் அவர்களது (பிள்ளைகளது) மனதில் ஒரு வகை வெறுப்பையும், குரோத உணர்வையும்தான் உருவாக்கிவரும். அது வைப்பு நிதி (Fixed Deposit) போல் வளர்ந்துவரும்; அவ்வப்போது ஏற்படும் விரிசல்கள், எதிர் நிலைப்பாடுகள், ஒத்துழையாமை இவை தொடர் வட்டிபோல் அத்துடன் வளரவே செய்யும்!
குடும்பத்தில் குழந்தைகளோடு குதூகலமாகச் செலவழித்தல்மூலம், அவர்களுக்குப் பெற்றோர்கள்மீது உண்மையான பாசத்தையும், நன்னம்பிக்கையையும் ஏற்படுத்திட இயலும்!
அடிக்கும் பழக்கம் - அடம் பிடிக்க அவர்களைத் தூண்டவே செய்யும்; எதிர்த்து அடிக்க முடியாதவாறு மனதில் கட்டியுள்ள சங்கிலியால் அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்; அது பிற்காலத்தில் அவர்களை வெறுப்பின் உச்சத்திற்குக் கொண்டு செலுத்தி, எதிரிகளைப்போல் பெற்றோர்களைக் கருதிடவே ஆக்கி விடுகின்றன - விரும்பத்தகாத நிலையை உருவாக்கி விடுகின்றன!
தோளுக்குமேல் உயர்ந்த பின் தோழன் என்ற பழமொழியும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று அல்லவா?
செய்யக்கூடாதவை, பழகக்கூடாதவர்கள் என்பவர்கள்பற்றி - அதற்குரிய காரணங்களை அன்புடனும், பொறுமையுடனும் நம் குழந்தைகள் - பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறினால், அவர்கள் கேட்டுச் சிந்தித்து, நமது பெற்றோர்கள் கூறுவது சரிதான் என்று ஏற்றுக்கொண்டு அதன்படி ஒழுகுவார்கள்!
அரவணைத்து அன்பு காட்டவேண்டிய பிஞ்சு நெஞ்சங்களை, அடக்குமுறை அம்புகளால் துளைக்காதீர்கள் பெற்றோர்களே!
உங்கள் வீரத்தை அவர்களிடம் அடித்தோ, அச்சுறுத்தியோ, அடக்குமுறைப் பாணங்களை வீசியோ காட்டுவதைவிட, அன்பாலும் பாசப் பொழிவாலும் அவர்களை வயப்படுத்துங்கள்!
அவர்களது கருத்துகள் என்னவென்பதைக் கூற, அவர்களுக்கும் வாய்ப்புத் தந்து, பிறகு உங்கள் தீர்ப்பை நடுநிலையோடு கூறுங்கள்!
ஒரு தலைப்பட்சமாகக் கூறாதீர்கள்!
உனக்கொன்றும் தெரியாது என்று எடுத்த எடுப்பிலேயே மட்டந்தட்டி மட்டந்தட்டி மட்டிகளாக்கி, மடச் சாம்பிராணி என்று வசை பொழிந்து, பயனற்ற சாவிப் பயிர்களாக அவர்களை ஆக்கிவிடாதீர்கள்!
அதனால் வரும் நட்டம் அவர்களுக்கு அல்ல; உங்களுக்குத்தான்!
மேற்கூறிய பல செய்திகள் வாழ்விணையர்களான இருபாலருக்கும் கூடப் பொருந்தும் என்பதையும் கவனத்தில் கொள்க! thanks to : viduthalai
0 comments:
Post a Comment