Morning Motivation !
>> Sunday, February 14, 2021
அலுவலகத்திற்கு வந்த லைஃப் கோச் ஒருவர், ”ஒரு நாளில் நீங்கள் அதிகமாக பேசுவது யாரிடம்?” எனக் கேட்டார் .
அம்மா, அப்பா, கணவன், மனைவி, காதலி, காதலன், காதலை நோக்கி நகரும் க்ரஷ், அலுவலகத்தில் சந்திக்கும் நபர்கள் எனப் பல விதமான பதில்கள் வந்தன.
மீண்டும், “ஒரு நாளில் நீங்கள் அதிகமாக பேசுவது யாரிடம்?” என்றார்.
அனைவரும் அவர்கள் முதலில் சொன்ன பதிலையே மறுபடியும் அழுத்தம் திருத்தமாக சொன்னார்கள்.
“இதற்கான சரியான பதில் வேண்டுமென்றால் உங்களை நீங்களே ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளுங்கள்” என்றவுடன் அறையிலிருந்த அனைவரும் சிரித்தோம். எங்களின் சிரிப்பலைகள் ஓய்ந்ததும், ”நீங்கள்தான்… நாம்தான்… நாம் மட்டும்தான் ஒவ்வொரு நாளும் நம்முடன் அதிகமாக பேசிக் கொள்வது..." என்றார்.
“என்னது எனக்கு நானே பேசிக்கிறேனா?" ஆமாம்! மனதில் உதிக்கும் எண்ணங்களைப் பற்றி நாம் யாருடன் அதிகமாக பேசுகிறோம் நம்மிடமேதானே?!
அடுத்தவர்களிடம் பேசும்போது நாம் உபயோகிக்கும் வார்த்தைகளில் அதீத கவனம் செலுத்தும் நாம், நமக்குள் நாமே பேசிக் கொள்ளும்போது அப்படி இருக்கிறோமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
ஏதேனும் ஒரு செயலை செய்யத் தொடங்கும்போதும் நமக்குள் பல சந்தேகங்கள் எழுவது இயல்பு தான். “என்னால முடியுமா?”, "இதை நான் செஞ்சிடுவேனா?” போன்ற நம் மனதிற்குள் எழும் நம் குரல் கூறும் அனைத்தையும் கேட்கும் ஒரே ஆள் நாம் மட்டுமே.
அவநம்பிக்கையும், சந்தேகமும் கலந்து நமக்குள் கிளம்பி வரும் பல கேள்விகளை நாம் எப்படி எதிர்கொண்டு கடக்கிறோம் என்பதே நமது வெற்றி வாய்ப்பிற்கான முதல் படி.
“என்னால முடியுமா?” என்ற குரல் கேட்டவுடனேயே, “உன்னால முடியாது” என சொல்வதை விட, ”செஞ்சு பாரு“ என்றும் “செஞ்சிடுவேனா?” என்ற சந்தேகப் பாட்டு கேட்கும் போதெல்லாம் “அதை செஞ்சு பார்த்தாதானே தெரியும்” என்று உங்களுக்குள் நீங்களே பாசிட்டிவாகப் பேசுங்கள்.
ஏனெனில் தன் வினை தன்னை சுடும் என்பதைப்போல உங்களின் எதிர்மறை எண்ணங்களும் சிந்தனைகளும் உங்களுக்கு எதிரானதாகவே வேலை செய்யும். இடுங்கி இருக்கும் கண்கள், சற்றே பருத்த உடம்பு, கறுத்த தோல், சரியான தமிழ் உச்சரிப்பு இல்லை என எந்த விதத்திலும் “நாம இந்த ஊருக்கான ஹீரோ மெட்டீரியல் இல்லை” என்ற அவநம்பிக்கை தனக்குள் வந்தபோதெல்லாம், “நமக்கே நம்ம மேல நம்பிக்கை வரட்டா எப்படி?” என தனக்குத் தானே சொல்லிக்கொண்டு தனது தேடலைத் தொடர்ந்ததால் சிவாஜி ராவ் கெய்க் வாட் பின்னாளில் சூப்பர் ஸ்டார் ஆனார்!
ஆதலால் எதிர்மறை எண்ணங்கள் கலந்த அவ நம்பிக்கைக் குரல் உங்களுக்குள் சன்னமாக எழும்போதெல்லாம் அக்குரலை இவ்விதம் மியூட் செய்துவிட்டு முனைப்புடன் உங்கள் முயற்சியில் முன்னோக்கி நகர்ந்தால் வெற்றிகள் குவியும்.
0 comments:
Post a Comment