என்ன ஒரு சோகமான உலகம் பாருங்கள்.!
>> Tuesday, February 18, 2020
ஒவ்வொரு முறை குண்டு வெடிக்கும்போதும்..
வெடித்து சிரிக்கும் மகள்..
அதன் பின்னால் எத்தனை வேதனை.. வலி!
சிரியா நிலவரம் எல்லோருக்கும் தெரிந்ததே. அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நிம்மதியாக சாப்பிட முடியாமல், நிம்மதியாக தூங்க முடியாமல்.. ஏன் நிம்மதியாக சிரிக்கக் கூட முடியாத அளவுக்கு கோர தாண்டவமாடி வருகிறார்கள் ஆயுத வியாபாரிகள். அவர்களிடம் சிக்கி எத்தனை எத்தனை விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன தெரியுமா.. பல லட்சம் பேர் அகதிகளாகி விட்டனர்.
இந்த சிரியாவில் நடக்கும் ஒரு காட்சிதான் இந்த வீடியோவில் உள்ளது.
சிரியாவில் இத்லிப் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு அப்பாவும், அவருடைய அருமை மகளும் அந்த வீடியோவில் உள்ளனர். அப்பா பெயர் அப்துல்லா. பாப்பா பெயர் செல்வா.
சின்னப் பாப்பா. பார்க்க அத்தனை அழகு.. அந்த பாப்பாவும், அப்பாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பா மகளுக்கு ஏதோ சொல்லி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
அப்போது பேச்சின் ஊடாக, குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது. அதாவது குண்டு வீச்சு நடக்கிறது. உடனே மகள் வெடித்துச் சிரிக்கிறாள். அவளுக்கு அவ்வளவு சிரிப்பாக வருகிறது.
இங்குதான் பெரும் வலி ஒன்று மறைந்துள்ளது.
அதாவது வெடிகுண்டுச் சத்தத்தால் தனது மகள் பயந்து போய் விடக் கூடாது வெடிகுண்டு வீச்சின் கோரம் கொஞ்சம் கூட தெரியக் கூடாது என்பதற்காக வெடிகுண்டுச் சத்தம் கேட்டால் சிரிக்க வேண்டும் என்று பழக்கி வைத்துள்ளார் அந்த அப்பா.
இதனால்தான் வெடிகுண்டுச் சத்தம் கேட்டதும் அந்தக் குழந்தை சற்றும் பயப்படாமல் ஜாலியாக சிரிக்கிறது.
மகளுக்கு சிறு வேதனை கூட தெரியக் கூடாது, வலி கூட வரக் கூடாது என்று நினைக்கும் சராசரி அப்பாதான் என்று நாம் கடந்து போய் விட முடியவில்லை.
பிள்ளைகளை பாதுகாப்பாக கூட வளர்க்க முடியாத ஒரு மோசமான சூழலில் வாழும் அப்துல்லா போன்ற எண்ணற்ற அப்பாக்கள் சிரியாவில் வேதனையில் செத்துக் கொண்டுள்ளனர்.
மனித வாழ்க்கையின் ஆகப் பெரிய சந்தோஷமே நிம்மதியான, அமைதியான வாழ்க்கைதான். அதற்குக் கூட உத்தரவாதம் இல்லாவிட்டால் அது என்ன நாடு அது என்ன அரசு.. !
இந்த வீடியோவைப் பார்க்கவே பெரும் வேதனையாக இருக்கிறது.
என்ன ஒரு சோகமான உலகம் பாருங்கள்.!
0 comments:
Post a Comment