**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

தமிழகத்தில் தொடரும் முஸ்லிம் விரோதப் போக்கு! ஓர் அலசல் ரிப்போர்ட் .

>> Thursday, August 29, 2013

உண்மை அறியும் குழுவினர் தரும் திடுக்கிடும் தகவல்கள்!

மேலப்பாளையம், மதுரை நெல்பேட்டை, திருச்சி போலீஸ் விசாரணையில் முஸ்லிம்கள் மீது அத்துமீறல்கள்!

உண்மை அறியும் குழுவினர் தரும் திடுக்கிடும் தகவல்கள்!

மதுரை: பேராசிரியர் அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன், ரஜினி, ஜி. ரமேஷ், அ. பீட்டர், சு.க. சங்கர் ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு தமிழகம் முழுவதும் சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்து தமிழக அரசாலும், காவல் துறையினராலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது. அதன் பின்னர் அந்தக் குழுவினர் பத்திரிகைக்கு அளித்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது நடுநிலையாளர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:

1. பா.ஜ.க. மற்றும் இதர இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த சிலர் கொலை செய்யப்பட்ட செய்தி அவ்வமைப்புகளால் பிரச்னை ஆக்கப்பட்ட பின் தமிழகத்தின் பல பகுதிகளிலும் காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பலவற்றில் காணப்படும் முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள் கவலைக்குரியதாக உள்ளன.

குறிப்பாக ஏ.டி.எஸ்.பி. மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோரை உள்ளடக்கிய சிறப்புக் காவல் படையினரின் செயல்பாடுகள் கடந்த ஓராண்டு காலமாகவே அப்பாவி முஸ்லிகள் பலரையும் பொய் வழக்குகளில் சிக்க வைப்பது, ஆண் துணை இன்றி தனியாக வாழ நேர்ந்த பெண்கள் உட்பட அப்பாவிகள் பலரை போலீஸ் உளவாளிகளாகச் செயல்படக் கட்டாயப்படுத்துவது, மதுரை நெல்பேட்டை முதலான இடங்களில் வசிக்கும் அடித்தள முஸ்லிம்கள் பெரும்பாலானோரை விசாரணை என்கிற பெயரில் அழைத்து அடித்துத் துன்புறுத்துவது, அவர்களது புகைப்படம், செல்போன் தொடர்புகள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைச் சேகரிப்பது என்பதாக உள்ளன.

2. மயில்வாகனன் தலைமையில் இயங்கும் இன்ஸ்பெக்டர் மாடசாமி குழுவினர், பரமக்குடிக்கு அருகில் உள்ள இடைக்காட்டூரைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பொன்றின் தலைவரான முருகன் என்பவரை அவ்வூரைச் சேர்ந்த இத்ரீஸ், மதார் சிக்கந்தர் என்கிற இருவரையும் கொலை செய்ததாக பொய்யாகச் சிக்க வைக்கச் செய்த முயற்சி, திருச்சி நடுவர் நீதிமன்றத்தால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இந்த மாதத் தொடக்கத்தில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்ரீஸை சட்டவிரோதமாகக் காவலில் வைத்து கடும் சித்திரவதைக்குள்ளாக்கி திருச்சி விடுதி ஒன்றில் அடைத்து வைத்தனர்.

மதார் சிறைக் காவலராகப் பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே ஊரைச் சேர்ந்த பாண்டி, சுந்தரவேல் என்கிற இருவர் வழக்கொன்றிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தபோது அவர்களைக் கையோடு இழுத்துச் சென்ற மாடசாமி படையினர், அவர்களைக் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்று என்கவுன்டர் செய்யப் போவதாக மிரட்டியுள்ளனர்.

இறுதியில் சிக்கந்தரும் இத்ரீஸும் முருகனைக் கொலை செய்யத் திட்டமிட்டது தங்களுக்குத் தெரியும் எனக் கூற வற்புறுத்தப்பட்டனர். பின்னர் திருச்சி குரு லாட்ஜில் அவர்களச் சட்டவிரோதமாக அடைத்துள்ளனர். அடுத்த நாள் அவர்களைக் கையொப்பம் இடுவதற்காக திருச்சி நடுவர் முன் மாடசாமி குழுவினர் கொண்டு வந்தபோது, அவர்கள் ஓடிச் சென்று வழக்குரைஞர்கள் கென்னடி, கமருதீன் ஆகியோரிடம் முறையிட, அவர்கள் இருவரையும் நீதிமன்ற நடுவர் ராஜேந்திரன் முன் ஆஜர்படுத்தினர்.

உண்மை அறிந்த நடுவர் அவர்கள் கொலை மிரட்டல், பொய் சாட்சிகள் உருவாக்கம், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றிற்காக மாடசாமி படையினர் மீது சிபி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3. மயில்வாகனன், மாடசாமி குழுவினர் திருப்பரங்குன்றம் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக மதுரை நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்பாவி ஏழை எளிய முஸ்லிம்கள் பலரை இழுத்துச் சென்று அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர்.

அவ்வாறு சித்திரவதைக்குள்ளான சலீம் மகன் ஷேக் அலாவுதீன், மினி ஆட்டோ டிரைவர் முகமது யாசீன் (த/பெ. காதர் மைதீன்), கமருதீன் மகன் ஜாபர் சுல்தான், இவர்களது வழக்குரைஞர் ஏ.எஸ். சையத் அப்துல் காதர் ஆகியோரை நாங்கள் நேற்று சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டோம்.

நெல்பேட்டையைச் சேர்ந்த பி. ஆமினா பேகம் கணவனை இழந்தவர். அடுப்புக் கரி வியாபாரம் செய்து தன் மூன்று பிள்ளைகளைக் காப்பாற்றி வருகிறார். அவரை வீட்டிற்குச் சென்றும், காவல் அலுவலகத்திற்கு வரச் சொல்லியும் மயில்வாகனன், மாடசாமி ஆகியோர் காவல் துறைக்கு உளவு பார்க்கச் சொல்லி மிரட்டியுள்ளனர். அலுவலகத்தில் அவர் விசாரிக்கப்பட்ட போது சுமார் 40 ஆண் காவலர்கள் மட்டுமே அங்கிருந்துள்ளனர்.

ஆமினா பேகம் அவர்கள் பாராட்டுக்குரிய வகையில் மிரட்டலுக்கு அடிபணியாமல் வந்துள்ளார். எக்காரணம் கொண்டும் தான் உளவு பார்க்க இயலாது என மறுத்துள்ளார். அவரது வாக்குமூலத்தையும் நாங்கள் முழுமையாகப் பதிவு செய்துள்ளோம்.

மயில்வாகனன் படையினர் நெல்பேட்டையில் மட்டும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைப் “புரொஃபைல்” செய்துள்ளனர். காவல்துறை வற்புறுத்தலின் பேரில் பாரம்பரியம் மிக்க நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசலில் தொழ வருபவர்களைக் கண்காணிக்க காமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியுற்றோம்.

4. இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் கொலை தொடர்பாக விசாரிக்க இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், நாகராஜ் ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் காவல்படையினர் மேலப்பாளையத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளிலும் கூடப் பல அய்யத்திற்குரியனவாக உள்ளன.

ஆக்ஸ்ட் 24 முழுவதும் நாங்கள் மேலப்பாளையத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள முகமது தாசீன், ஷாகுல் ஹமீது, முஹம்மது ஷம்சுதீன், நூருல் ஹமீது, அன்வர் பிஸ்மி, பிலால் ஹுசைன் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் நெருங்கிய உறவினர்களை சந்தித்தோம்.

கைது செய்யப்பட்டவர்களின் வழக்குரைஞர் டி. அப்துல் ஜப்பார், த.மு.மு.க. நகர நிர்வாகி மைதீன் பாதுஷா, ம.ம.க. மாவட்டச் செயலாளர் கே.எஸ். ரசூல் மைதீன் முதலானோரையும் சந்தித்தோம்.

வீடுகளில் சோதனை இடப்பட்டபோது பங்களாப்பா நகரில் வசிக்கும் மூதாட்டி அலிபாத் (70) என்பவரின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய அட்டைப் பெட்டி, ஷாகுல் ஹமீதின் மூலம் அவரது நண்பரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் 6,00,140 ஆகியவை மட்டுமே முக்கியமாகக் கைப்பற்றப்பட்ட பொருள்கள். இந்தத் தொகையும் கூட ரிலையன்ஸ் பங்க் அருகில் அதைப் பாதுகாத்து வைத்திருந்த தாசீன் மற்றும் ஷாகுல் ஹமீதின் நண்பரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தாசீன் மற்றும் அவரது சகோதரிகள், மற்றும் பிறரது உறவினர்களின் வீடுகளில் சில மார்க்கப் பிரச்சார சி.டி.க்கள், செல்போன்கள் தவிர வேறு ஏதும் கைப்பற்றப்படவில்லை.

5. வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. சொல்வது போல தாசீன் மற்றும் ஷாகுல் ஹமீதிடமிருந்து வெடிமருந்து மற்றும் ஜெலடின் குச்சிகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பது எங்கள் ஆய்வில் தெரிய வந்தது.

இவர்களின் மூலமாக மேற்படி தொகை மடுமே கைப்பற்றபட்டுள்ளது. இந்தத் தொகையும் கூட முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கான வழக்குச் செலவுக்காக “சிறுபான்மையோர் அறக்கட்டளை நிறுவனம்” (CTM) சார்பாகத் திரட்டப்பட்ட தொகைதான். இதற்குரிய வரவு செலவுக் கணக்குகள், ரசீதுப் புத்தகங்கள் தம்மிடம் உள்ளன என சம்பந்தப்பட்டவர்கள் கூறினர்.

ரமலான் பண்டிகையை ஒட்டி வசூலாகும் பணத்தையும் சேர்த்து பத்து இலட்ச ரூபாயாக வழக்குரைஞருக்குக் கொடுப்பதற்கென பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட தொகை இது எனக் கூறுகின்றனர். தாசீன் மற்றும் ஷாகுல் மூலமாக பணம் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் ஏன் அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக வழக்கு சோடிக்கப்பட்டுள்ளது என்பது விளங்கவில்லை.

6. கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்குரிய பெட்டி தலைமறைவாக உள்ள பறவை பாதுஷா, நூருல் ஹமீது, சமுசுதீன், பிஸ்மி வழியாக அலிபாத் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நோன்புக்கு முதல் நாள் அப்பெட்டியை பிஸ்மி கொண்டு வந்து தன் வீட்டில் வைத்ததாக அலிபாத் கூறினார்.

அடுத்த நாள் அவரை அழைத்து வந்து மஃப்டி போலீசார் அப்பெட்டியை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது அப்பெட்டி வீட்டார் முன்னோ, ஜமாஅத்தார் முன்னோ, வேறு சாட்சியங்கள் முன்னோ திறந்து காட்டப்படாதது ஏன் என்பதும் மர்மமாக உள்ளது. எல்லாவற்றையும் பத்திரிகைகளுக்குச் சொல்லும் காவல்துறை இதைப் பத்திரிகையாளர்களிடமும் காட்டவில்லை. காவல்துறை சொல்வது போல ‘பாம்ப் ஸ்குவாட்’ எதுவும் வந்து பெட்டி கைப்பற்றப்படவில்லை.

வீடியோ எதுவும் எடுக்கப்படவும் இல்லை. பிஸ்மி வீட்டார் சொல்வது போல அப்பெட்டியில் திருக்குர்ஆன் மட்டுமே இருந்தது என்பதை ஏற்காவிட்டாலும் மிக முக்கியமானதும் ஆபத்தானதுமான சுமார் 17 கிலோ வெடிமருந்தை எவ்வித விதிகளையும் பின்பற்றாமல் கைப்பற்றிச் சென்றது ஏன் என்பது தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்.

தவிரவும் வெடிமருந்து கைபற்றப்பட்டது ஜூலை 27 எனக் காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜூலை 24 தேதிய ‘நக்கீரன்’ இதழில் இவ்வாறு இப்படியான வெடிமருந்துகளுடன் தீவிரவாதிகள் அலைவதாகக் காவல்துறை தரப்புச் செய்திகள் எவ்வாறு வெளிவந்தன என்பதும் விளங்கவில்லை.

அந்தப் பெட்டியில் வெடிமருந்து இல்லை, அதிலும் பணம்தான் இருந்திருக்க வேண்டும் என்பதாகவும் சிலர் அய்யங்களை முன்வைத்தனர். தேசப் பாதுகாப்பு தொடர்பான இத்தகைய வழக்குகளில் வெடிமருந்து முதலான பொருட்கள் கைப்பற்றப்படும்போது இத்தகைய விதி மீறல்கள் மேற்கொள்ளப்படுவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. சிறப்புப் படையச் சேர்ந்த அதிகாரிகள் இருவரும் இது தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும்.

7. கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் கடுமையானவை. கைது நடவடிக்கைகளில் பல விதிமீறல்கள் உள்ளன. எனினும் தேசத் துரோகம் தொடர்பான வழக்கு என்பதால் ஒப்புதல் வாக்குமூலங்கள் உட்பட வழக்கு ஆவணங்கள் எதுவும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படக் கூடாது என வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

இதுவரை ஒப்புதல் வாக்குமூலங்கள், 161 வாக்குமூலங்கள், சீஷர் மெமோ முதலியன குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வழக்குரைஞர்களுக்குக் கொடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தமக்காக நீதிமன்றத்தில் வாதிடுவதற்கு எல்லாவிதமான உரிமைகளும் உண்டு, இந்த முக்கியமான ஆவணங்கள் அவர்களுக்கு மறுக்கப்படுவது நீதிவழங்கு நெறிமுறைக்கு எதிரானது.

8. சிறப்புப் படையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், நாகராஜ் ஆகியோர் ஏற்கனவே மேலப்பாளையத்தில் பணியாற்றியவர்கள். தற்போது கைது செய்யப்பட்டவர்களை அவர்கள் விசாரிக்கும்போது சிறையிலுள்ளவர்கள் விடுதலைக்காக நிதி திரட்டுவதைச் சொல்லி ஏசியுள்ளனர்.

நிதி திரட்டி வழக்காடுவது என்பதும் ஒரு அடிப்படை உரிமை. இதை முடக்குவதற்காகவே கடும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக ஒரு பொதுக் கருத்து மேலப்பாளையத்தில் நிலவுகிறது.

9. தேசப் பாதுகாப்பு தொடர்பான இவ்வழக்கு விசாரணை முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் பல விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் உள்ளதால் இந்த விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஏ.டி.எஸ்.பி. மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் மீதான சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடியும் வரை அவர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். நெல்பேட்டையில் இவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக தனியார் புகார்கள் உள்ளன. இவையும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

10. மேலப்பாளையம், மதுரை நெல்பேட்டை போன்ற பகுதிகள் மிகவும் பின்தங்கியுள்ளன. நகரின் பிற பகுதியிலுள்ள வசதிகள் ஏழை எளிய முஸ்லிம்கள் வசிக்கும் இப்பகுதிகளில் செய்து கொடுக்கப்படவில்லை. பலரும் பீடி சுற்றும் தொழில், கசாப்புத் தொழில் போன்றவற்றிலேயே உள்ளனர். கல்வி, சுய தொழில் வய்ப்பு, வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகள் முதலியன இப்பகுதியில் மேம்படுத்தப்படுவது அவசியம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்பு முகவரி: வழக்குரைஞர் ரஜினி, ப்ளாட் எண் 50, கே.கே. நகர், செல்: 9443294892

REF: - http://www.thoothuonline.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d/#sthash.dGVWTwN4.dpuf

இவைகளையும் சொடுக்கி படியுங்கள்.

1. அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும் - சீமான்.

இது தடுக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் இஸ்லாமியர்களை ஏதோ குற்றப் பரம்பரையினர் என்று நடத்துவதாகவே இருக்கிறது. எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கான பூர்வாங்க விசாரணையை தொடங்கும் முன்பே, முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்வது என்பது அவர்கள்தான் குற்றம் செய்திருப்பார்கள் என்று நாட்டு மக்களை நம்ப வைக்கும் முயற்சியாக உள்ளதே தவிர, அது உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதாக இல்லை.


2. ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் மும்மூர்த்திகள்களும் ஹிந்துத்துவ அரசியலும்!

3. ஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல !

4. போலீஸ் இட்டுக்கட்டியது!-உண்மை கண்டறியும் குழு அறிக்கை!

2 comments:

suvanappiriyan August 29, 2013 at 3:24 PM  

சிறந்த பகிர்வு! உண்மைகள் வெளி வரட்டும்.

indrayavanam.blogspot.com August 30, 2013 at 11:22 AM  

பதிவும், ராஜபக்சே படமும் மிகமிக அருமை...

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP