சிறுநீரகக் கற்கள். சிறுநீர்க்கல் நோய். நோயின் அறிகுறிகள்.
>> Wednesday, March 4, 2009
நீரில் கரையக்கூடிய கூழ்நிலைத் தன்மையற்ற திண்மப் பொருட்களை வெளியேற்றுவது சிறுநீரகங்களின் முதன்மையான வேலையாகும். இவை வெளியேற்றும் திண்மப் பொருள்கள் மனித உடலுக்குத் தேவையற்றதாகவோ வேண்டிய அளவிற்கு அதிகமானதாகவோ இரத்தத்தில் கலந்திருக்கும். இத்தகைய பொருள்களை அவ்வப்போது இரத்தத்திலிருந்து நீருடன் வெளியேற்றி, சிறுநீரகங்கள் உடலில் கீழ்க்கண்டவற்றை நிலைப்படுத்துகின்றன.
உடலின் நீரின் அளவு.
உடலில் உள்ளிருக்கும் மின்பகு பொருள்களின் அளவு.
உடலிலுள்ள திரவங்களின் சவ்வூடுபரவல் அழுத்தம்.
உடலில் அமில-கார சமநிலை.
உணவுப் பொருள்கள் வேதிச் சிதைவு அடையும்போது தோன்றும் இடைக்கழிவுப் பொருள்களை வெளியேற்றல்.
உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருள்களை வெளியேற்றல்.
இத்தகைய நீர்க் கழிவுப் பொருள்களின் செறிவு) இரத்தத்தைவிடச் சிறுநீரில் மிகுந்து காணப்படும். எனவே நல்ல உடல் நலம் உள்ள ஒரு மனிதனின் சிறுநீரகம் நீரின் அளவு எவ்வகையில் மாறுபட்டாலும் செறிவடைந்த கழிவுப் பொருள்களைத் தங்குதடையின்றி வெளியேற்றும் தன்மை கொண்டது.
சிறுநீர்:
சராசரியாக 24 மணி நேர அளவில் ஒரு மனிதனின் சிறுநீரகங்கள் ஒரு லிட்டர் முதல் இரண்டு லிட்டர் வரை சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டவை. இந்தச் சிறுநீரின் அளவு கிழ்க்கண்ட சூழ்நிலையில் மாறக்கூடும்.
உணவின் தன்மை (திரவநிலை அல்லது திண்மநிலை) சூழ்நிலை வெப்பம்
உடற்பயிற்சி
மருந்துகள், (காலமல், அசிடேட், சலிசிலேட் போன்றவை சிறுநீரின் அளவை அதிகரிக்கும்.)
நோய் நிலை (வாந்தி, பேதி, காய்ச்சல், இருதய நோய் போன்றவை சிறுநீரின் அளவைக் குறைக்கும்.
பொதுவான நிலையில் 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் கழிவுப் பொருள்களை வெளியேற்றுகின்றன. உணவைப் பொறுத்து இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடும்.
இவை தவிர மிகச் சிறிய அளவில் இப்பூரிக் அமிலம், இண்டிகேன், ஆக்சாலிக் அமிலம், அமினோ அமிலங்கள், கால்சியம், மெக்னீசியம், சல்பேட்டு, அம்மோனியம் போன்றவற்றையும் வெளியேற்றுகின்றன. நீரிழிவு போன்ற காலங்களில் குளுகோஸ், அசிடோன் போன்ற வேறுசில பொருள்களையும் வெளியேற்றுகின்றன.
சிறுநீர்க்கல் நோய்:
மேற்கண்ட பொருள்களைக் கொண்ட கரைசலான சிறுநீரில் அது வெளியேறும் வழிகளில் (சிறுநீரகம், நாளம், சிறுநீர்ப்பை) கற்கள் தோன்றி, ஒருசில மனிதர்களைப் பழங்காலம் முதற்கொண்டு இந்நாள் வரை பெருந்தொல்லைப்படுத்தி வருகின்றன. சிறுநீர்வழிப் பகுதிக் கற்கள் தோன்றும் நோயினை யூரோலிதியாசிஸ் (Urolithiasis) என்று ஆங்கிலத்தில் அழைப்பர். சிறுநீரகம், சிறுநீர்க் கழிவு நாளம் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற பகுதிகளில் தோன்றும் இக்கற்களை சிறுநீர்க் கற்கள் (Urinary Calculi) என்பர்.
இந்நோய் பொதுவாக நடுவயதினரிடையே காணப்பட்டாலும் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் தோன்றுவதாக சில அமெரிக்க மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.
நோயின் அறிகுறிகள்:
ஆரம்ப நிலையில் நோயாளி, தான் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பொதுவாக உணருவதில்லை. ஆனால் நோய் முதிர முதிர கீழ்க்கண்ட சில அறிகுறிகள் வரிசைப்படி தோன்றலாம்.
பொதுவாக இடுப்பில் சோர்ந்த கடுமையான வலி,
சிறுநீர் வெளியேறுமுன் அடிவயிற்றில் வலி ஆரம்பித்து இடுப்பில் விலா எலும்பிற்கும் இடுப்பிற்கும் இடைப்பட்ட சதைப்பற்றில் வலி எடுத்தல்.
சிறுநீர் வெளியேற்றத் துன்பப்படுதல்.
சொட்டு சொட்டாக நீர் வெளியேறுதல்.
சிறுநீரில் இரத்தம் வெளிப்படுதல்.
நோய்க்காரணம்:
சிறுநீர்க்கல் நோய் பொதுவாக இந்தியா, சைனா ஆகிய நாடுகளில் நிறைந்து காணப்படுவதால் இதற்கு சில இயல்பு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும், உணவுத் தட்ப வெப்பநிலை ஆகியவையும் இந்நோய்க்குச் சில காரணங்களாகக் கருதப்படுகின்றன. சயரோகம், கீல்வாதம், எலும்பு முறிவு போன்ற நோய்க் காலங்களில் படுக்கை நிலையிலேயே இருக்கும் நோயாளிகள் இந் நோயினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சல்பா பெரிடின், சல்பாதையசோல, சல்பாடைžன், சல்பாகுவானிடீன், வைட்டமின் D போன்ற மருந்துகள் மிகுவதும் சிறுநீர்க் கற்கள் தோன்றக் காரணமாகும்.
சிறுநீர்க் கற்களின் வேதியல் தன்மை:
சிறுநீர்க் கற்கள் பெரும்பாலும் பாஸ்பேட், ஆக்சலேட், யூரேட் போன்றவற்றின் கால்சியம், மெக்னீசியம் உப்புக்களாகவே இருக்கின்றன. சில கற்கள் யூரிக் அமிலம், சிஸ்டின் போன்ற பொருள்களையும் கொண்டிருக்கின்றன.
இயற்பியல் (Physical) பண்பின்படி பார்க்கும்பொழுது மேற்கூறிய சிறுநீர்க் கழிவுப் பொருள்கள் அனைத்தும் குறைந்த கரைதன்மை (Solubility) கொண்டவையாகும்.
கற்கள் தோன்றும் முறை:
கீழ்க்கண்ட சில சூழ்நிலைகளில் சிறுநீரின் அளவு குறைகிறது.
குறைந்த அளவு நீரைப் பருகுதல்.
வெப்பமான தட்ப வெப்ப நிலை.
அதிக வேர்வை வெளியேறிய சூழ்நிலையில் சரியான அளவு நீர் பருகாமல் இருத்தல்.
கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் குறைந்த கரைதன்மை கொண்ட மேற்கூறிய கற்பொருள்களின் அளவு சிறுநீரில் அதிகரிக்கும்.
யூரிக் அமிலம், கால்சியம், ஆச்சலேட் போன்றவற்றைத் தரும் உணவுப் பொருள்களை அதிகமாக உட்கொள்ளுதல். ஸ்டிராபெர்ரி (Strawberry), சீமைப்பசலைக்கீரை (Spinacea Oleracea)., சீன மஞ்சள் (Rhubarb).
பாராதைராய்டு சுரப்பியின் மிதமிஞ்சிய செயல்பாட்டினால் தோன்றக்கூடிய ஹைபர் கால்சியமியா போன்ற நோய்நிலை.
சிறுநீரின் அளவு குறையும்போதும், குறைந்த கரைதன்மையுடைய பொருள்களின் அளவு சிறுநீரில் அதிகரிக்கும்போதும் அப்பொருள்களின் செறிவு அதிகரித்து அவை சிறுநீரில் மீச்செறிவை (Super saturation) விரைவில் அடைகின்றன. இந்நிலையில் அப்பொருள்கள் சிறுநீரில் இருந்து வீழ்படிவாக வெளியேறுகின்றன.
வீழ்படிவான துகள்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிப் படிகங்களாக வளருவதற்கான சூழ்நிலை சிறுநீரகங்களிலோ, நீரக நாளங்களிலோ, சிறுநீர்ப் பைகளிலோ தோன்றும்போது அங்கே படிகங்கள் வளர்ந்து கற்கள் தோன்றுகின்றன.
வீழ்படிவுகள் ஒட்டிப் படிகங்கள் வளருவதற்கு இரு பொருள்கள் தேவைப்படுகின்றன.
வீழ்படிவுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டுவதற்குப் பசைத்தன்மை கொண்ட பொருள்.
ஒட்டிய வீழ்படிவுகள் படிகங்களாக வளருவதற்கு மைய நுனிப் பொருள்.
நோய் படர்ந்த சிறுநீரகப் பாதையில் எரிவு ஏற்படுவதால் உருவாகும் பொருள்கள் பசை போன்று செயல்படுகின்றன.
சில சூழ்நிலையில் சிறுநீர்ப் பாதையை அடைந்த இறந்த பாக்டீரியாக்களின் நுண்ணிய உடல்கள், களிச்சவ்வு, žழ்செல்கள் போன்றவை படிகங்கள் படிந்து வளருவதற்கான மையநுனிப் பொருள்களாக அமைந்துவிடுகின்றன.
எனவே குறைந்த கரைதன்மை கொண்ட பொருள்கள் சிறுநீரில் மீச்செறிவு அடைந்து வீழ்படிவாக மாறிப், பசைப்பொருள்கள் அருகில் இருப்பின் ஒன்றொடு ஒன்று ஒட்டி ஏதேனும் மையநுனிப் பொருள் கிடைப்பின் படிகங்களாக படிந்து வளர்ந்து கற்கள் தோன்றுகின்றன.
கற்களின் அளவு: அமைப்பு:
இவ்வாறு தோன்றும் சிறுநீர்க் கற்கள், சிறுநீர் நாளங்கள் வழியாகச் செல்லும்படியாகச் சிறியவையாக இருப்பின் சிறுநீருடன் வெளியேறுகின்றன. அவ்வாறு செல்லும்பொழுது நாளங்கள் விரிக்கப்படுவதால் வலி ஏற்படுகிறது. மேலும் நாளங்கள் வழியே அவை செல்லும்போது சிராய்வு ஏற்படுவதால் சிறுநீருடன் இரத்தம், தசைநார் நுனிகள் போன்றன வெளியேறும்.
பலகற்கள் தோன்றும்பொழுது நோய் கடுமையாகும். மேலும், சில கற்கள் வளர்ந்து பருத்துச் சிறுநீரகத்தையே சிதைத்து விடுகின்றன.
சிறுநீர்ப்பையில் தோன்றும் கற்கள் பெண்ணின் குறுநாளத்தின் வழியே எளிதில் வெளியேறிவிடுகின்றன. ஆணின் சிறுநீர்ப்பையில் தோன்றும் கற்கள் அங்கேயே வளர்ந்து பருக்கின்றன.
சிறுநீரின் pH ம் சிறுநீர்க் கற்களும்:
சிறுநீர்க் கற்களில் காணப்படும் வேதிப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் குணகமாக சிறுநீரின் pH செயல்படுகிறது.
(pH - என்பது அமில காரத் தன்மையைக் காட்டும் குணகம் ஆகும். pH = 7 க்குக் கீழே அமிலத்தன்மை; pH = 7 க்கு மேலே 14 வரை காரத்தன்மை. pH = 7 நடுநிலைத்தன்மை.)
சாதாரண நிலையில் சிறுநீரின் pH, 4,5 லிருந்து 7.5 வரை வேறுபட்டுக் காணப்படும்.
சிறுநீர் சற்று அமிலத்தன்மையில் இருக்கும்பொழுது (PH = 5) யூரிக் அமிலம் வீழ்படிவாக வெளியேறுகிறது.
மற்றப் படிகங்களைவிட யூரிக் அமில வீழ்படிவு பல்வேறு வகை அமைப்பைக் கொண்டிருக்கும்.
ரோம்பிக் வடிவ அமைப்புப் படிகங்கள்.
வீட்ஸ்டோன் வடிவ அமைப்புப் படிகங்கள்,
நான்முக வடிவ அமைப்புப் படிகங்கள்.
நீண்ட புள்ளி முடிவு கொண்ட படிகங்கள்.
கிளைப் படிகங்கள்.
புள்ளிக்கற்றைப் படிகங்கள்.
சிறுநீரின் pH மதிப்பு 6 - ஆக இருக்கும்பொழுது யூரிக் அமிலம், சோடியம் யூரேட், கால்சியம் பாஸ்பேட், கால்சியம் ஆக்சலேட் ஆகியவற்றைக் கொண்ட சிறுநீர்க் கற்கள் உருவாகின்றன.
கால்சியம் ஆக்சலேட் படிகங்கள் இருவகையில் காணப்படுகின்றன.
எண்முகப் படிக அமைப்பு.கவிழ்க்கப்பட்ட இருமணிகளின் அமைப்புப் படிகங்கள். கால்சியம் பாஸ்பேட் மூன்றுவகைகளில் காணப்படுகிறது. தூள், துகள்வகை, படிகவகை. படிகங்கள் புள்ளி முடிவு கற்றை அமைப்பு.
சிறுநீரின் pH மதிப்பு, 7 ஆக இருக்கும்பொழுது கால்சியம் பாஸ்பேட் கற்கள் உருவாகின்றன. pH-7 க்கும் 8 க்கும் இடைப்பட்ட நிலையில் கால்சியம் பாஸ்பேட், மெக்னீசியம், அம்மோனியம் பாஸ்பேட், அம்மோனியம் யூரேட் போன்றவைகளை உடைய கற்கள் உருவாகலாம்.
அம்மோனியம் மக்னீசியம் பாஸ்பேட் படிகங்கள் பலமுக அமைப்பு உடையனவாகவும் சில சமயங்களில் இறகு அமைப்புடையனவாகவும் காணப்படுகின்றன
பலமுக அமைப்புப் படிகங்கள். இறகு அமைப்புப் படிகங்கள்.
சிறுநீரின் pH மதிப்பு 8 க்கும் அதற்கு மேலும் அமையும்பொழுது கால்சியம் கார்பனேட், அம்மோனியம், மெக்னீசியம் பாஸ்பேட், அம்மோனியம் யூரேட் போன்றவற்றைக் கொண்ட மென்மையான கற்கள் உருவாகலாம்.
கால்சியம் கார்பனேட் படிகங்கள் உருதுகள் படிகங்களாகவோ கவிழ்ந்த இருமணி வடிவப் படிகங்களாகவோ காணப்படுகின்றன.
எனவே, சிறுநீரின் pH-ஐ அறிந்தும், சிறுநீரில் தோன்றும் படிகங்களை
நுண்ணோக்கி வழியாகக் கண்டும், எவ்வினக் கற்கள் உருவாகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
குணப்படுத்துதல்:
சில கற்கள் மிகச் சிறியவைகளாக இருப்பின் தாமாகவே வெளியேறி விடுகின்றன. நாளங்களில் தங்கிவிடுகின்ற சற்றுப் பெரிதளவான கற்களைச் சிறுநீரகப் பாதை வழியாகத் துணைக் கருவிகளை நுழைத்து நீக்கிவிட முடியும்.
சிறுநீர்ப் பைகளில் தங்கிவிடும் கற்களைத் தனிப்பட்ட சில கருவிகளைக் கொண்டு உடைத்துப் பின் நீக்கிவிடலாம்.
மிகப்பெரிய சிறுநீர்க் கற்களை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்க முடியும். இன்றைய மருத்துவ அறிவியல், சிறுநீர்க் கற்களைத் தொல்லையின்றி கரைத்துவிடும் அளவிற்கு மருந்துகளை நமக்கு அளித்துள்ளது. "Solution-G" எனப்படும் கீழ்க்கண்ட வேதிப் பொருள்களைக் கொண்ட கரைசல் பாஸ்பேட், கார்பனேட் கற்களைக் கரைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
சிட்ரிக் அமிலம் 32.25 கிராம்
மக்னீசியம் ஆக்சைடு 3.84 கிராம்
சோடியம் கார்பனேட் 4.37 கிராம்
(இவை ஒரு லிட்டர் நீரில் கரைக்கப்பட வேண்டும்.)
நோய்த் தடுப்பு:
சிறுநீர்க் கற்கள் மேற்கொண்டு தோன்றாமல் தடுப்பது, மேலே நாம் கண்ட தோற்றக் காரணத்தைப் புரிந்துகொள்வதைப் பொறுத்தமையும். அதிக அளவு சல்பா மருந்துகள், திக வைட்டமின் D, பாராதைராய்டுச் சுரப்பியின் மீள் செயல், போன்றவற்றைக் கட்டுப்படுத்திச் சிறுநீர்க் கற்கள் தோன்றாமலும் காத்துக் கொள்ளலாம்.
சிறுநீர்க் கல் அடைப்புத் தொல்லையுற்றோர், எல்லாவற்றிற்கும் மேலாக அதிக அளவில் நீரைப் பருகி, அளவோடு சத்துணவை உண்டு, கற்கள் உருவாவதற்கு அடிப்படையான உணவைத் தவிர்த்து நல்வழியில் வாழும் முறையை அமைத்துக் கொள்வதே இந்நோயினின்று விடுபட்டிருக்கச் சாலச் சிறந்த வழி.
பெரும்பான்மையான மக்களுக்குச் சிறுநீர்க் கல்லடைப்பு ஏற்படுவதில்லை - பிறப்பின் இயல்பாலோ நோய்க் காரணமாகவோதான் இத்துன்பம் நேரும். எனவே பொதுப்படையான தற்காப்புகள் தேவையில்லை.
சிறுநீரகங்கள் கழிவுப் பொருள்களை வெளியேற்றுகின்றன. உணவைப் பொறுத்து இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடும்.
நீர் 1200.00 கி.
யூரியா 30.00 "
யூரிக் அமிலம் 1.00 கி.
(யூரேட் உட்பட)
கிரியேட்டினின் 1.20 கி.
சோடியம் குளோரைடு 12.00 கி.
சோடியம் 4.0 கி.
பொட்டாசியம் 2.0 கி.
பாஸ்பேட்டு
(பாஸ்பரசாக) 1.1 கி.
************************************
பயனுள்ள மருத்துவ குறிப்புகளை படிக்க மருத்துவம் க்ளிக் செய்யவும்.
0 comments:
Post a Comment