**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்?

>> Friday, December 19, 2008

"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர். ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தாம்!"

நாட்டு நடப்பைப் பற்றி 11ஆம் வகுப்பின் 52 மாணவர்களடங்கிய ஒரு கலந்துரையாடலின்போது, ப்ரஜ்வி மல்ஹோத்ரா என்ற மாணவன் மேற்காணும் கேள்வியை என்னிடம் கேட்டான்.

சரியான தருணத்தில் கேட்கப்பட்ட நியாயமானதொரு கேள்வி. ப்ரஜ்விக்கும் அவனைப் போன்ற மற்ற மாணவர்களுக்கும் மனதில் தோன்றிய இக்கேள்விக்கு ஒரு முஸ்லிம் என்ற முறையில் பதிலளிக்க வேண்டியது என்மீது கடமையானது.

"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர். ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தாம்!" என்ற கருத்துருவாக்கம் மேற்கத்திய ஊடகங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, 'அது உண்மையாக இருக்குமோ!' என நம்ப வைக்கப்பட்ட ஏராளமானோரில் ப்ரஜ்வியும் ஒருவன்.

'இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது' எனப் பல்வேறு குரல்களில் தொடர்ந்துப் பிரச்சாரம் செய்யப் படுவதால், இன்று இஸ்லாம் என்பது கண்காணிப்பு வளையத்தினுள் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது.

இந்தப் பொய்க் கருத்துருவாக்கத்தைப் பொதுமக்கள் நம்புகிறார்கள் என்றால் அதற்கும் சில காரணங்கள் இல்லாமலில்லை.

சில சமயங்களில் அவர்கள் கண்ணால் காண்பவற்றைக் கொண்டே முடிவு செய்கிறார்கள். தீவிரவாதிகள் சிலர் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபடுவதை மக்கள் காண்பதால் அவ்வாறு முடிவுக்கு வருகின்றனர்.

நான் ப்ரஜ்வியிடம் சொன்னேன்: "எல்லா மதங்களின் நல்லொழுக்க வழிகாட்டுதல்களும் ஒன்றேதான். இஸ்லாமும் அதுபோன்ற நல்ல வழிகாட்டல்களையும் கொள்கைகளையுமே போதிக்கிறது.

ஆனால் சிலர் இறைவனின் பெயரைச் சொல்லி மற்ற சிலரை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.

'மும்பை, டெல்லி, காஷ்மீர் குண்டு வெடிப்புகள், அல்-காயிதா அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகள் ஆகியன என்னைத் தலை குனியச் செய்கின்றன.

மனிதத் தன்மையற்ற பயங்கரவாதச் செயல்களில் ஒரு முஸ்லிமின் பெயர் சம்பந்தப்படும் போதெல்லாம் மனம் குமைந்து போகிறது!

ஜிஹாத் பற்றி முஸ்லிமல்லாத சகோதரர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்கள் பலருமே தவறாகப் புரிந்து வைத்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது.

ஜிஹாத் என்பதன் உண்மையான கருத்து பிற மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களல்ல;

மாறாக, ஒருவர் தனது உள்மனதில் புதைந்திருக்கும் சுயநலச் சிந்தனைகள், இஸ்லாமிய சமுதாயத்தில் புரையோடியிருக்கும் ஒழுக்கக்கேடுகள் மற்றும் குறைபாடுகள், தீயசக்திகள், அநீதி, சமத்துவமின்மை, கல்லாமை, அறியாமை ஆகியற்றை எதிர்த்துப் போராடுவதே ஜிஹாதாகும்.

முதலில் அவர் தன் உள்மனதுடன் ஜிஹாத் செய்து (போராடி) அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் அவர் தம் மனைவி, குடும்பத்தினர், அண்டை அயலார் மற்றும் முழு சமுதாயத்தினரிடையேயும் தமது முயற்சிகளைத் தொடர வேண்டும். இதுவே 'ஜிஹாதே அக்பர்' (மாபெரும் போராட்டம்) எனப்படும் மிகச் சிறந்த ஜிஹாத் ஆகும்.

ஜிஹாத் என்பதன் சரியான விளக்கமும் இதுதான்.

தீவிரவாதம் என்பது ஓர் அரசியல் நடவடிக்கையே தவிர, மதங்களுக்கும் மதங்கள் சார்ந்த சமூகங்களுக்கும் இவற்றுடன் எந்தத் தொடர்புமில்லை. எந்த மதமும் அப்பாவிகளைக் கொல்லும்படி போதிக்கவில்லை.

ஆனால் தீவிரவாதிகள் அதைத்தான் செய்கிறார்கள். எந்த மதம் சார்ந்தச் சமூகமும் தங்கள் சார்பாக பயங்கரவாதச் செயல்களைச் செய்யும்படி தீவிரவாதிகளைத் தேர்ந்தெடுத்து பணியிலமர்த்துவதில்லை.

இருந்தபோதிலும், இத்தகைய பயங்கரவாதச் செயல்களின் பின்விளைவாக, அவற்றுடன் எந்தச் சம்பந்தமுமில்லாத ஒரு சராசரி இந்திய முஸ்லிம் பலவிதப் பிரச்னைகளைச் சந்திக்க நேர்கிறது.

முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வில் நிகழ்த்தப்படும் குற்றச்செயல்கள், பணியிடங்களிலும் கல்வி நிலையங்களிலும் காட்டப்படும் பாரபட்சம், வாடகைக்கு வீடு கிடைப்பதில் பிரச்னைகள், நம்பிக்கையின்மை போன்றவையே அவை.

1984இல் சீக்கிய சமுதாயத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரங்களைப்போல இன்னுமொன்று நடந்துவிடக் கூடாதே என்பதும் முஸ்லிம்களின் அச்சமாக இருக்கிறது.

சமுதாயங்களுக்கிடையே பிரிவினை உண்டாக்க முயலும் தீவிரவாதிகளுக்கு எவ்வகையிலும் உதவி சென்றடையக் கூடாது.

மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பிளவினை உண்டாக்க முயன்றனர்.

ஆனால், அதற்கு மாறாக, இந்த பயங்கரவாத நிகழ்வினால் தோன்றிய அதிர்ச்சி அலைகள் இந்திய மக்களை ஒருங்கிணைத்ததைக் காண முடிந்தது.

பாகிஸ்தான் மீதான கண்டனங்களை இந்திய முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள் என சில அரசியல் தலைவர்கள் தப்புக் கணக்குப் போடுகின்றனர்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; சென்ற பொதுத் தேர்தலின்போது இந்திய முஸ்லிம்களின் வாக்குகளைக் கவருவதற்காக, பாரதிய ஜனதா கட்சி தங்கள் ஆட்சியின்போது லாகூருக்குப் பேருந்து சேவை தொடங்கியதையும் பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தியதையும் மாபெரும் சாதனை போல விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தனர்.

இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானின் கைப்பொம்மைகள் போல இன்னும் இவர்கள் கருதுவது உண்மையில் வருந்தத் தக்கது!.

ஒரு சில தீவிரவாதிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே பிரதிநிதிக்காது என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இருந்தும் 'முஸ்லிம் வாக்குகளை இழந்து விடுவோமோ' என்ற பயத்தாலோ என்னவோ நமது அரசு பாகிஸ்தானுடன் சீரியஸான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடாது வெறும் வாய்ச் சவடால்களில் காலம் கழித்துக் கொண்டிருக்கிறது.

'தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகள் இந்திய முஸ்லிம்களைத் தனிமைப் படுத்துவதாக ஆகிவிடும்' என்ற ஒரு தவறான கண்ணோட்டம் இந்திய அரசியல்வாதிகள் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

அப்படிக் கருதுவது இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் எனத் தவறாக முத்திரை குத்துவதற்கு ஒப்பாகும் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்?

இந்திய முஸ்லிம்களை இதைவிட மோசமாக வேறு யாராலும் கேவலப் படுத்த முடியாது.

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறையை மேற்கொள்வது முஸ்லிம்களை மகிழ்ச்சியடையச் செய்யாது.

ஏனெனில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தங்கள் இலக்குகளை மதரீதியில் பிரித்துப் பார்ப்பதில்லை.

"தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் முஸ்லிம்கள் நம்மைப் பாராட்டுவார்கள்" என்று நம் நாட்டு அரசியல்வாதிகள் நினைத்தார்களென்றால் அவர்கள் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வோரை மக்கள் அடையாளம் கண்டு வருகிறார்கள்.

சமீபத்திய டெல்லித் தேர்தல் முடிவுகள் இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.

மத நம்பிக்கைகள் ஒருவரின் தனிப்பட்ட உணர்வுகளுடன் தொடர்புடையது.

மதங்களுக்குச் சொந்தம் கொண்டாடும் சில தனிநபர்கள் மற்றும் குழுவினரின் கட்டுப்பாட்டிலிருந்து அவை விடுவிக்கப்பட வேண்டும்.

அடிப்படையில் மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்பதை மறந்து விடலாகாது.

-ஃபிரோஸ் பக்த் அஹமது
(கட்டுரையாளர் விடுதலைப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் ஒன்றுவிட்ட பேரனாவார்).
http://www.satyamargam.com/index.phpoption=com_content&task=view&id=1118&Itemid=51
************************************************************************************
தினமலருக்கு எனது கண்டனம்

பயங்கரவாதிகள் இல்லவே இல்லை என்கிறது பாகிஸ்தான்: இந்திய கோரிக்கையை நிராகரித்து அதிபர் சர்தாரி திமிர் பேச்சு.

http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2423&cls=row3.

மேற்கண்ட தலைப்பில் தினமலர் வெளியிட்டிருக்கும் கட்டுரையில் இந்திய முஸ்லிம்களை தவறாக சித்தரித்து தன் வழமையான பாணியை (முஸ்லிம் வெறுப்புணர்வு) கையாண்டிருக்கும் அவ்விதழை கண்டிக்கிறேன்.

அதில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.....
""பார்லிமென்ட் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், பாக்.கிற்க்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அதன் மூலம் முஸ்லிம்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமே என்றும் மத்திய அரசு அஞ்சிகிறது.

அதனால் என்ன நடவடிக்கை என்பதில் கடும் குழப்பம் நீடிக்கிறது.


""இந்த வரிகளை கடுமையாக கண்டிக்கிறேன்.

இந்த வரிகளின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதை விரும்பவில்லை என்கிறீர்களா?

அல்லது கார்கில் போரை முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லையா,?

அல்லது இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் அபிமானியாக இருக்கிறார்கள் என்கிறீர்களா,?

மும்பை தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதியாக தெரிந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் மத்திய அரசுக்கு நெருக்கடியே தவிர நீங்கள் சொல்வது போல அல்ல.

ஊடகங்கள் மூலமாக இதுபோல பொத்தாம் பொதுவாக இந்திய முஸ்லிம்களைச் சாடுவதை முதலில் நிறுத்துங்கள்.

உங்கள் செய்தியை படிக்கும் வாசகனின் மனதில் தோன்றும் முதல் எண்ணமே பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க இந்திய முஸ்லிம்கள் தான் தடையாக உள்ளது போல சித்தரித்துள்ளீர்கள்.

மாலேகானில் குண்டு வெடித்த போதும் இதே பத்திரிக்கை மசூதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தாக கற்பனையான ஒரு புலனாய்வை எழுதி யாரையோ திருப்தி படுத்தினார்கள்.

பின்னர் நடந்த விசாரணையில் அது சங்பரிவாரங்களின் செயல் என்பது நிரூபனமாகி வருகிறது.

தினமலர் திருந்த போவதில்லை; நாம் தான் புறக்கணிக்க வேண்டும்.
THANKS TO :
http://meiyeluthu.blogspot.com/2008/12/blog-post.html
**************************************************************************

இந்தியாவில் பிறந்து விட்டதால் இந்தியா முழுவதும் தன்னுடையது அடுத்தவர்கள் (இந்தியாவில் பிறந்தாலும் அவர்கள் இவர்களின் கொள்கையை ஏற்க மறுப்பதால் )வெளியேற வேண்டும் என்ற குருட்டுத்தனமான கொள்கையின் போதையில் ஓலமிடுபவர்கள்,

நாளை இந்த உலகில் நாங்கள் பிறந்துள்ளோம் இந்த உலகமே எங்களுடையது வேறு கிரகங்களுக்கு செல்லுங்கள் என்று பிதற்றினாலும் ஆச்சர்யப்படத் தேவையில்லை.

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP