கோவிலாக்கப்பட்ட மசூதி. - சு.அறிவுக்கரசு. PART 5.
>> Monday, June 15, 2015
எங்கள் வியாபாரங்களை தகர்த்தால் தோட்டாக்கள் சீறிப் பாய்வதில்லை... எங்களின் வீடுகள் சூறையாடப்பட்டால் தோட்டாக்கள் சீறிப் பாய்வதில்லை....
எங்களின் தாய்மார்களும், சகோதரிகளும் மானபங்கப்படுத்தப்பட்டால், வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் எறிந்தால் தோட்டாக்கள் சீறிப்பாய்வதில்லை....எங்களின் மக்களையோ, வீடுகளையோ, சகோதரிகளையோ, குழந்தைகளையோ, இறை ஆலயங்களையோ காப்பாற்றத் துடிக்கையில் தோட்டாக்கள் விரைந்து எம்மேலேயே பாய்கின்றன...
தொடர்ந்து நாயரின் துரோகம்
நாயரின் மோசடிச் செயல்கள் அத்துடன் முடியவில்லை. நேரம் செல்லச் செல்ல, இந்துக்கள் கூட்டம் பெருகிக் கொண்டே வந்தது, அற்புதத்தைக் காண! அதுபோலவே முசுலிம்களும் பெருமளவில் கூடிவிட்டனர், மசூதியை மீட்டிட! மசூதியின் உள்ளே அபிராம்தாஸ் பயந்து விட்டான். முசுலிம்கள் உள்ளே நுழைந்து தன்னை நார், நாராகக் கிழித்துப் போட்டு விடுவார்கள் எனப் பயந்தான். நடுங்கினான். அவனைக் கவனித்துக்கொண்டே இருந்த கலெக்டர் நாயர் அவனை மிரட்டினான், ஏ, கிழப்பயலே! உட்கார்ந்துகிட. எழுந்தாயோ, நான் உன்னைச் சுட்டுவிடுவேன் என்று மிரட்டினான்.
மாநிலத்தின் தலைமைச் செயலாளர் பகவான் சகாய், காவல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் வி.என்.லஹிரி ஆகியோர் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டே இருந்தனர். கலெக்டர் கண்டுகொள்ளவே இல்லை. பாபர் மசூதியிலிருந்து ராமன் பொம்மையையும் மற்றவற்றையும் உடனே அகற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. நாயர் அசரவில்லை. அலட்சியப்படுத்தினான்.
நாயரின் மனைவியும்கூட
நாயரின் மனைவி சகுந்தலா செய்த காரியம் இன்னும் விஷமத்தனமானது. பாபர் மசூதியின் உள் நடையில் வாசற்படிக்கு எதிரே ஒரு கூட்டம் பஜனை பாடிக் கொண்டே உட்கார்ந்து கிடந்தது. இந்தக் கூட்டத்தைக் கூட்டி பஜனை பாடவைத்தது கலெக்டரின் சகதர்மினி. இந்தக் கும்பல் அந்த இடத்திலேயே அமர்ந்து அழிச்சாட்டியம் செய்வது என்பது அம்மையாரின் திட்டம். அப்படிச் செய்தால்தான் ராமன் பொம்மையை எந்த நேரத்திலும் அப்புறப்படுத்த முடியாது என்கிற தந்திர முயற்சி. புருஷனுக்கு ஏற்ற பெண்டாட்டிதான்.
பொம்மையை டிசம்பர் 23 அன்றேகூட அகற்றியிருக்கலாம்தான். காவலர்களுடன் மோதல் ஏற்பட்டிருக்கும். இரவு நேரத்தில் கூட அகற்றியிருக்கலாம். ஆனால் அது நிருவாகத்திற்கு அவப்பெயரைத் தரும். சர்வாதிகாரத்தனமாக நடந்து கொண்டதாகக் குறை கூறப்படும். ஆகவே பொம்மையை அகற்றுவது சரியான தீர்வாகாது என நானும் காவல் கண்காணிப்பாளரும் கருதுகிறோம். இத்தனையையும் மீறி பொம்மையை அகற்றியே தீரவேண்டும் என்று அரசு முடிவு எடுக்குமானால், எனக்குப் பிடித்தமில்லாத இச்செயலைச் செய்ய என்னால் இயலாது என்பதால், அதனைச் செய்யக்கூடிய வேறு ஓர் அதிகாரியை எனக்குப் பதிலாக நியமித்து பணியை ஒப்படைக்கலாம் என்று நாயர் அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
சட்டம் என்ன கூறுகிறது
சட்டரீதியாக, ஒரு சொத்து தொடர்பாக இருபிரிவினர் இடையே தகராறு இருந்தால் கிரிமினல் நடைமுறைச் சட்டம் (சிஸி.றி.சி.) பிரிவு 145இன்படி சொத்தில் யாரும் பிரவேசிக்காதபடி தடைசெய்து ஆணையிடலாம் அல்லது ரிசீவர் ஒருவரை நியமித்து அவரது பொறுப்பிலும் பாதுகாப்பிலும் சொத்தினை ஒப்படைக்கலாம். இதனை கலெக்டரின் உதவி அதிகாரிகளே செய்யலாம். ஆனால் நாயர் செய்தது மிகவும் கேவலமான செயல். நாயரும் டட்டும் அயோத்தியா நகர் மன்றத் தலைவர் வீட்டுக்கு இரவில் சென்று பாபர் மசூதிக்கு ரீசீவர் பொறுப்பை ஏற்குமாறு மன்றாடினர். காயஸ்தா ஜாதிக்காரரான அவர் நகரத்தில் செல்வாக்குப் பெற்றவர். பாபு பிரியடட்டா ராம் எனப் பெயர். மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின்னர் ஒத்துக் கொண்டார். இவரும் இந்து மதவாதிகளின் பக்கமாகச் செயல்பட்டார் என்பதை அவருடைய செயல்கள் நிரூபித்துவிட்டன. அப்படிப்பட்டவரைத் தானே, நாயர் தேர்ந்தெடுப்பார்
இதனிடையே ஃபைசாபாத் பெருநகர ஆணையாளர் ஷியாம் சுந்தர்லால்தார் ஓர் ஆணை பிறப்பித்து, ராமன் பொம்மை உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என வற்புறுத்தினார். நாயரா இதற்கு மசிவார்? பொம்மையை அகற்றினால் இந்து மக்களின் கோபம் அளவு கடந்து வெளிப்படும், மாவட்டம் முழுவதும் பெரிய கொந்தளிப்பு ஏற்படும். அத்தகைய நிலை உருவாவதை ஆளுகின்ற காங்கிரசுக் கட்சிக்காரர்களேகூட, விரும்பவில்லை. இப்படியொரு நடவடிக்கை அரசால் எடுக்கப்படும் எனச் செய்தி பரவி, ஆங்காங்கே முசுலிம்கள் இந்துக்களால் தாக்கப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. இதற்கான திட்டங்கள் இந்துக்களால் தீட்டப்பட்டுள்ளன. அத்தனையையும் மீறி, பொம்மையை அப்புறப்படுத்த வேண்டுமானால், மதமுறைப்படி அதனைச் செய்யக்கூடிய அர்ச்சகரையோ, சாதாரண இந்து ஒருவரையோ, மாவட்டம் முழுவதும் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. இதைச் செய்ய ஒருவரும் முன்வரமாட்டார்கள். இதைச் செய்யக்கூடிய யாரையாவது எங்களுக்குக் கொடுத்து உதவுமாறு ஆணையாளரையே கேட்டேன். அவரால் இயலவில்லை. ஆகவே இதற்கொரு சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும்.
என் யோசனை என்னவென்றால், பூசாரி ஒருவரை நியமித்து ராமன் பொம்மைக்குப் பூசை செய்ய அனுமதித்து, சொத்து யாருக்கு என்பது பற்றி தீர்ப்புக் கூறுமாறு உரிமையியல் நீதிமன்றத்தைக் கோரலாம். தீர்ப்பு வரும்வரை மசூதியை முசுலிம்களுக்கு ஒப்படைக்கக் கூடாது என்பது அவரது யோசனை.
துராக்கிரமமாக மசூதியின் உள்ளே நுழைந்து இந்துமத பொம்மையை வைத்தது சட்ட விரோதமான குற்றம் என்பதை ஒத்துக் கொள்ளும் நாயர், சட்ட விரோதக் கும்பலுக்குச் சாதகமாக நடந்துகொள்ளும் யோசனையைத் தெரிவிக்கிறார். மதமோதல்கள் ஏற்படும் என்கிற பூச்சாண்டியைக் காட்டி மிரட்டுகிறார்.
சட்டப்படி துரோகம்
கி.பு.கோ. 145இன்படி ஒரு வாரம் கழித்து உத்தரவினை உள்ளூர் மாஜிஸ்திரேட் பிறப்பித்து விட்டார். 29.12.1949இல் போட்ட உத்தரவின்படி, மசூதியின் காப்பாளர் ஆக நகர் மன்றத் தலைவர் பியெடட்டராம் நியமிக்கப்பட்டார். அவர் 5.1.1950இல் பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டார்.
கலெக்டர் நாயர் வெற்றிபெற்றுவிட்டார். மசூதி, கோவிலாக்கப்பட்டது. கடவுள் சிலை இல்லாத மசூதியில் இந்துக்கடவுள் பொம்மை வைக்கப்பட்டது. பூசை புனஸ்காரங்கள் செய்யப்பட்டன. இந்துமகா சபாக்காரர்களின் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
துரோகத்திற்குப் பரிசு
கலெக்டர் நாயரும் குருடட் சிங்கும் அரசுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். 1952இல் நாயரின் மனைவி சகுந்தலா இந்துமகாசபா சார்பில் கோண்டா தொகுதியில் தேர்தலில் நின்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1967இல் நாயர் ஜனசங் சார்பில் பஹ்ரைச் தொகுதியில் நின்று வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ஒரு பக்கம் துரோகத்திற்குத் தண்டனையாகப் பதவி நீக்கம். மறுபக்கம் வெகுமதியாக எம்.பி. பதவி, கணவனுக்கும் மனைவிக்கும்!
அரசியல்வாதிகளின் துரோகம்
நிருவாகத் துறையில் இப்படி என்றால், அரசியல் துறையில் பிரதமர் நேருவுக்கு அயோத்தியாவில் நடந்தவை ஆத்திரத்தை உண்டு பண்ணின. முதலமைச்சராக இருந்த பார்ப்பனர் கோவிந்த வல்லப பந்த்துக்கு 26.12.1949இல் காரமாகத் தந்தி அனுப்பினார். அதைப் படித்ததும் பொம்மையைத் தூக்கு என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருந்த நாயர் செய்த துரோக நடவடிக்கையால் எதுவும் நடக்கவில்லை. 4.1.1950இல்தான் பந்த் பதில் அனுப்பினார். இந்துக்களைச் சமாதானம் செய்ய, பிரபலமான காங்கிரசாரை அனுப்பும்படி நேருவையே கேட்டுக் கொண்டார். போலீஸ் அமைச்சர் லால்பகதூர் நேருவைச் சந்தித்து நேரில் விளக்கம் தருவார் என்றும் எழுதினார். இப்படிச் சாக்குப்போக்குக் கூறிக்கொண்டிருக்கும் முதலமைச்சர் பற்றி கவர்னர் ஜெனரல் ராசகோபாலாச்சாரிக்குக் கடிதம் எழுதிக் குறைப்பட்டுக் கொண்டார்.
ஒரு மாதம் ஓடியது. ஒன்றும் நடக்கவில்லை. 5.2.1950இல் மீண்டும் எழுதினார். தாமே அயோத்தியாவுக்கு நேரில் வந்து ஆய்வு செய்யப்போவதாக எழுதினார். நேருவை வரவேண்டாம் என்று பந்த் எழுதிவிட்டார். நாயரும், குருடட் சிங்கும் வேலை நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர் என்றும், பதிலாக நியமிக்கப்பட இருப்பவர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் எழுதினார். உண்மையில் அந்தரசுத்தியுடன் இக்கடிதத்தை பந்த் எழுதவில்லை. நேருவால் தம்மை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் நம்பினார். காரணம், அவர் வல்லபாய் படேலின் கையாள். படேல் காங்கிரசிலிருந்த இந்துமத வெறியர்களின் தலைவர். இந்துமகா சபாக்காரர்களின் தோஸ்த் (நண்பர்). ஆகவே, பந்த்துக்கு மிதப்பு.
நேருவின் நேர்மை
என்றாலும் நேரு 17-.4.1950இல் மீளவும் கடிதம் எழுதினார். தாம் உ.பி. மாநிலத்திற்கு வந்துபோய் நீண்ட நாள்களாகின்றன. மாநிலத்தில் காங்கிரசின் தூண்களாக இருப்போர் மனதில் மத, ஜாதிவெறி மண்டிக் கிடக்கிறது. இதனால் செயல்படாத நோய் தாக்கிடும் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. அயோத்தியாவில் நடந்தது முழுக்க, கெட்ட காரியங்களே! இந்த நோய் இந்தியா முழுவதும் பரவுகிறது. நம்முடைய சொந்த மாநிலத்திலும் பரவுவது பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். எல்லாப் பணிகளையும் ஒதுக்கிவிட்டு இதனையே முதன்மையாகக் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படி நான் இறங்கும் வேளையில், முழு வீச்சில் என் சக்தி முழுவதையும் பிரயோகப்படுத்துவேன் என்றும் தீர்க்கமாக எழுதினார். வங்காளத்தின் முதலமைச்சராக இருந்த டாக்டர் பிதான் சந்திர ராய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அயோத்தியாவில் பழங்கால மசூதி ஒன்றினை பண்டாக்களும் சனாதனிகளும் வழிநடத்தி வந்த கும்பல் ஒன்று கைப்பற்றிக் கொண்டது. உ.பி. அரசு அந்தப் பிரச்சினையைக் கையாலாகாத தன்மையில் பலவீனமாகக் கையாண்டது என்பதைக் குறிப்பிட வருந்துகிறேன் என்று எழுதித் தன் ஆற்றாமையைப் பகிர்ந்து கொண்டார்.
காங்கிரசில் இருந்த ஒரே ஒரு மதச் சார்பற்றவர். தனியாள். என் செய்ய?
மகிழ்ச்சியில் இந்துமகா சபா 24, 25.12.1949இல் கல்கத்தாவில் இந்து மகாசபா மாநாடு. ஒரே கோலாகலம். காரணம், ராமனின் அற்புதம். அதைக் காணவந்து தங்கிவிட்ட ஆயிரக்கணக்கான இந்துக்களின் உற்சாகம். காந்தியாரைக் கொலை செய்த காரணத்தால் மூலையில் முடங்கிக் கிடந்ததுகள், முக்காடு நீக்கி முழக்கமிட்டதுகள். புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.பி.காரே என்பவர் பேசும்போது காங்கிரசார் முசுலிம்களை ஆதரித்துக் கொண்டே மதச்சார்பின்மை பேசுவதாகக் குறிப்பிட்டார். முசுலிம்கள் இந்துக்களுக்கு நேர் எதிரானவர்களாம். இந்துக்களின் உச்சிக்குடுமி (கோட்டி) வானத்தை நோக்கி இருக்கிறதாம். முசுலிம்களின் தாடி நரகத்தை (படல்) நோக்கி இருக்கிறதாம். இந்துக்கள் கிழக்கு நோக்கி வணங்குகிறார்களாம். முசுலிம்கள் மேற்கு நோக்கித் தொழுகிறார்களாம். இந்துக்கள் இடமிருந்து வலமாக எழுதுகிறார்களாம். முசுலிம்கள் வலமிருந்து இடமாக எழுதுகிறார்களாம். பிணங்களை இந்துக்கள் எரிக்கிறார்களாம். முசுலிம்கள் பிணங்களைப் புதைக்கிறார்களாம். எவ்வளவு அற்பத்தனமான சிறுபிள்ளைத்தனமான வாதம் பாருங்கள்!
காரே பேசுகிறார் கேளுங்கள்: ஆகவே, இந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் மாற்றப்பட வேண்டும். முசுலிம்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக்கப்பட வேண்டும். அவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. இம்மாதிரி அரசமைப்பு திருத்தப்படாவிட்டால், இந்தியா ஒருபோதும் உருப்படாது என்றார்.
சொத்தில் பாத்யதையாம்
இந்துமகா சபாவினர் அயோத்தியாவில் கூட்டம் போட்டுப் பேசினர். அதன் விளைவாக கோபால்சிங் விஷாரத் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். மசூதியில் உள்ள ராமன் கோவிலில் கும்பிட அனுமதிக்குமாறு கேட்டு வழக்கு. அதில் பிரதிவாதிகளாக 5 முசுலிம்களும் மூன்று அரசு அதிகாரிகளும் சேர்க்கப்பட்டனர். பிரதிவாதிகளுக்கு நோட்டீசு அனுப்பி பதில் கோரிட உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினமே தடையாணையையும் பிறப்பித்துவிட்டார். அந்த ஆணைதான் இன்றளவும் இந்தியாவைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல் ஆரியகுல நாயகனான ராமனின் பொம்மையை பாபர் மசூதியிலிருந்து அகற்றிட அரசு முயல்கிறது. காவல் துறையையும் ராணுவத்தினரையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்தியா முழுவதிலுமுள்ள இந்துக்கள் ராமன் பொம்மையை அகற்றும் முயற்சியை எதிர்த்துப் போராட வேண்டும் என்று சுற்றறிக்கையை அனுப்பிய இந்து மகாசபா, அயோத்தியாவில் ஓர் அலுவலகம் திறந்தது. --சு.அறிவுக்கரசு
SOURCE: Unmaionline 2013 செப்டம்பர் 01-15
மீண்டும் வாருங்கள்.- (தொடரும்)
அனைத்து பதிவுகளும் >>>> *** இங்கே*** <<<<
.
0 comments:
Post a Comment