இரண்டாம் தரக் குடிமக்களாக புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர். - அ.மார்க்ஸ். பாகம் 3
>> Saturday, October 19, 2013
புறக்கணிக்கப்பட்டு அச்சத்துடன் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழும் இஸ்லாமியர். முஸ்லிம்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஏராளமாய்ப் பணம் வருகிறதா? இஸ்லாமியர்களை ஏன் புறக்கணிக்க வேண்டும் ? வகுப்புவாத மயமாகும் அரசியல்.
1. இஸ்லாமியரது நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக முன்பு ஒருமுறை குறிப்பிட்டீர்கள். விளக்க முடியுமா?
முடியும். காசுமீர் விசயத்தில் அய்.நா. அவைத் தீர்மானத்திற்கு எதிராகவும் கொடுத்தவாக்குறுதியை மீறியும் இந்திய அரசு நடந்து கொள்வதிலிருந்து தொடங்கலாம்.
காஷ்மீர் மக்களின் தலைவரான ஷேக் அப்துல்லா கிட்டத்தட்ட இருபத்திரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை வைக்கப்பட்டிருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
அப்புறம், வெள்ளையராட்சியில் 1907முதல் முஸ்லிம்களுக்குத் தேர்தலிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது.
மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளவர்களாக இருந்தும் சுதந்திரத்திற்குப் பின் அந்த உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. இதனை முன்னின்று செயல்படுத்தியவர் சர்தார் படேல்.
மொழிவாரி மாநிலங்கள் என்பது அடிப்படையில் ஒரு சனநாயகக் கோரிக்கைதான் என்றாலும் அதுகூட முஸ்லிம்களுக்குப் பாதிப்பாகவே முடிந்தது.
வட நாட்டில்பெரும்பாலான முஸ்லிம்களின் தாய்மொழி உருது. ஆனாலும் உருது மொழிக்கான மாநிலம் ஏதுமில்லை.
மாநில ஆட்சி மொழியாக அமையாத காரணத்தால் உருதுமொழி வளர்ச்சிக்கான செயல்பாடுகள் இல்லாமற் போயின.
வி.பி.சிங் உத்திரப்பிரதேச முதல்வராக இருந்தபோது உருது மொழியை மாநிலத்தின் இரண்டாவது ஆட்சி மொழியாக்க மசோதா கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரும் கையெழுத்துப் போட்டுவிட்டார். எனினும் இந்திரா காந்தியின் ஆட்சியில் குடியரசுத் தலைவரின் கையெழுத்து அம்மசோதாவுக்கு மறுக்கப்பட்டது. எனவே இன்றுவரை அது சட்டமாக்கப்படவில்லை.
ஒருமுறை உருதைத் தாய்மொழியாகக் கொண்ட பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில்தான் உறுதிமொழி எடுப்போம் எனச் சொன்னபோது காங்கிரஸ் கட்சியினர் அதை அனுமதிக்கவில்லை.
அடுத்து அலிகாரிலுள்ள முஸ்லிம் பல்கலைக்கழகம் முஸ்லிம்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிறுவனங்களில் ஒன்று. இதனுடைய சிறுபான்மை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. இன்றுவரை இது நிறைவேற்றப்படாததோடு இருக்கிற அதிகாரங்களும் பறிக்கப்பட்டுள்ளன.
1971 தேர்தல் அறிக்கையிலேயே இது குறித்துக் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தேர்தலில் வென்றபின் 1972 மே மாதத்தில் பல்கலைக்ககழக அதிகாரங்கள் மேலும் குறுக்கப்பட்டன.
பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமல்ல; கல்லூரிகளுக்கே சுயாட்சி கொடுக்க வேண்டும் என்பதல்லாம் அரசுக் கொள்கையாக இருக்கும் போது முஸ்லிம் பல்கலைக் கழகத்துக்கு மட்டும் இந்தக் கதி.
1947ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு முதன் முதலில் முஸ்லிம்கள் தங்கள் கல்வி உரிமைக்காக வீதியில் இறங்கியது இந்தப் பிரச்சினைக்காகத்தான். (ஜூன் 72). இன்று, அதாவது பா.ஜ.க. ஆட்சியேறிய பிறகு நிலைமை மோசமாகியுள்ளது.
சமீபத்தில் (2003 இறுதி) அலிகார் பல்கலைக்கழக உரிமைகளில் மீண்டும் தலையிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்
விரைவில் ஃபைசாபாத், வாரணாசி போன்ற இடங்களுக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பரவியது. இன்றுவரை இந்த வன்முறை தொடர்கதையாக இருக்கிறது.
மேலும் மேலும் இந்திய அரசியல் வகுப்புவாத மயமாகி வருவது அவர்களின் வருந்தத்தக்க நிலையை இரட்டிப்பாக்கி விட்டது.
2. அரசியல் வகுப்புவாத மயமாகிறது என எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
ஆட்சியாளர்கள், அரசியல் கட்சிகள், அதிகாரிகள் எனப் பலரும் தங்களைப்க பெருமிதத்துடன் அடையாளம் கண்டு இயங்கும் நிலை எழுபதுகளின் பிற்பகுதியில் இந்திரா காந்தியின் காலத்தில் தொடங்கி இன்று உச்சமடைந்துள்ளது.
காஷ்மீர் பிரச்சினையில் நேரு நடந்து கொண்டதற்கு எந்த நியாயமும் கற்பிக்க இயலாது என்றாலும் அடிப்படையில் அவரிடம் மதச்சார்பின்மைக் கருத்துக்கள் மேலோங்கி இருந்தன.
இந்தியா போன்ற ஒருநாடு மதச்சார்பின்மையைத்தான் கடைப்பிடிக்க முடியும் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்த அவர், முஸ்லிம்கள் தங்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதாத நிலையை ஏற்படுத்தும பொறுப்பு இந்துக்களிடம்தான் உள்ளது என்றார்.
இந்து மதவாதத்தைத் தொடர்ந்து கண்டித்து வந்தார்.
மாநில முதலமைச்சர்கள் மூன்று மதங்களுக்கு ஒருமுறை அரசுத்துறை, இராணுவம், காவல்துறை போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு உரிய பங்களிக்கப்படுகிறதா என்பது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கைகள் அனுப்ப வேண்டும் என்பதை நடைமுறையாக்கியிருந்தார்.
எனினும் கோவிந்த வல்லபந்த் போன்ற மாநில முதல்வர்கள், சர்தார் படேல் போன்ற தனது சக அமைச்சர்கள் இந்து வகுப்புவாத உணர்வோடு செயல்பட்டபோது நேருவால் வருந்த மட்டுமே முடிந்தது.
இந்தியாவின் முதலும் கடைசியுமான மதச்சார்பற்ற பிரதமர் என்று நேருவைச் சொல்லலாம்.
இந்திராவின் ஆட்சியில் நிலைமை மாறியது.
உருது, முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகிய விவகாரங்களில் அவர் நடந்து கொண்டது பற்றி முன்பே குறிப்பிட்டேன். வெளிப்படையாக அவர் தன்னை இந்து மதவாதச் சக்திகளுடன் இணைத்துக் கொண்டார்.
விசுவ இந்து பரிஷத், அரித்துவாராவில் பாரதமாதா கோயில் கட்டிய போது (1983) அவரே நேரில் சென்று திறந்து வைத்தார்.
அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் (ஆகஸ்டு 82), “ஏராளமான அராபியப் பணம் இந்தியாவிற்கு வருகிறது. தாழ்த்தப்பட்டவர்களை மதம் மாற்றப் பெரு முயற்சிகள் செய்யப்படுகின்றன” என்றார்.
ஷேக் அப்துல்லா தலைமையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரைச் சந்தித்து முறையிட வந்தபோது (ஆக. 73) முஸ்லிம்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிப்பதை குற்றஞ்சாட்டினார்.
1982 நவம்பரில் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திராவைச் சந்தித்து முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பாக மனு ஒன்றைக் கொடுத்தனர். இனி காங்கிரஸ் கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதர முஸ்லிம் உறுப்பினர்களோடு சேர்ந்து வந்து மனு கொடுக்கக் கூடாது என (ஜன. 83) அடுத்த மாதமே உத்தரவிட்டார்.
இவரது ஆட்சியில்தான் மொரதாபாத், மீரட் போன்ற இடஙகளில் மதக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
இந்தக் கலவரத்திலெல்லாம் பி.ஏ.சி. எனப்படும் ‘புராவின்சியல் ஆயுதப் படை’ வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு எதிராக இருந்ததை உச்சநீதிமன்றம் உட்பட பலரும் கண்டித்தபோது இந்திரா பி.ஏ.சியை ஆதரித்துப் பேசினார் (பி. 24, 83).
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தாங்கள் எத்துழையாமை இயக்கம் தொடங்கப் போவதாக முஸ்லிம்கள் அறிவித்தபோது (ஜன. 24, 83) அதனைக் கடுமையாய் எதிர்த்து, “எவ்வளவு அமைதியாய் நீங்கள் போராடினாலும் அது காங்கிரசுக்கு எதிரானதாகத்தான் பொருள்படும். நீங்கள் ஒத்துழைத்தால்தான் எங்களால் இந்து மதவெறியைக் கட்டுப்படுத்த முடியும்” என்று மிரட்டினார் (பிப். 10, 83).
‘1985ம் ஆண்டின் தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்’ 5(b) பிரிவின்படி பாதுகாக்கப்பட்ட இடங்களென்றாலும் வழிபடும் தலங்களானால் அதில் மக்கள் வழிபாடு செய்ய உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டில்லி சப்தர்ஜங் மசூதி உட்பட பல இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்கள் எனக் காரணம் காட்டப்பட்டு முஸ்லிம்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
ஜனதா ஆட்சிக்காலத்தில் இந்தச் சட்டப்பூர்வமான வழிபாட்டு உரிமை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது (மே, 1979). மீண்டும் இந்திரா ஆட்சியில் இவ்வுரிமை பறிக்கப்பட்டது (செப். 5, 83).
ராஜீவ்காந்தி மிக வெளிப்படையாகவே இந்துமதச் சக்திகளுடன் கூட்டு வைத்துக் கொண்டதையும், ஆர்.எஸ்.எஸ். அவரை ஆதரித்ததையும் நாம் அறிவோம்.
ஒரு பக்கம் ஷா பானு வழக்கில் முஸ்லிம் மதவாதச் சக்திகளைத் திருப்திப்படுத்தச் சட்டம் இயற்றிக் கொண்டே பாபர் மசூதியில் ராம வழிபாடு செய்ய அனுமதியளித்து இன்றைய கொடுமைகளுக்கெல்லாம் காரணமான கதையை விளக்க வேண்டியதில்லை.
பெரும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் அடிக்கடி சங்கராச்சாரி போன்ற மதத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனைகளையும், ஆசிகளையும் பெறுவது, அதனைப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது என்பதெல்லாம் இந்திரா, ராஜீவ், ஆர். வெங்கட்ராமன் ஆகியோரின் காலத்தில் உச்சமடைந்தது.
இந்த நடவடிக்கைகளோடு அரசு, இராணுவம் போன்றவற்றில் உயர்சாதி இந்துக்களின் ஆதிக்கத்தையும், அவற்றில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுதலையும் இணைத்துப் பார்த்தால் நமது அரசியல் இந்து மயமாகியிருப்பது விளங்கும்.
சமீபத்தில் காஞ்சி சங்கராச்சாரி நூற்றாண்டுவிழா கொண்டாடப் பட்டபோது நரசிம்மராவ் ஓடோடி வந்ததையும், அந்த விழாவிற்குத் தெலைக்காட்சி மற்றும் பார்ப்பனப் பத்திரிகைகள் அளித்த விளம்பரங்களையும் நினைத்துப் பாருங்கள்.
பா.ஜ.க. ஆட்சியில் சங்கராச்சாரியின் அரசியல் தலையீடுகள் பற்றி விளக்க வேண்டியதில்லை.
மசூதி இடத்தில் கோயில் கட்டுகிற பிரச்சினையில் வாஜ்பேயி ஜெயேந்திரரை அழைத்துப் பேசுகிறார். ஜெயலலிதா அவர் இட்ட ஆணையை ஏற்று மதமாற்றத்தடைச் சட்டம் கொண்டு வருகிறார்.
அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் இந்து மதக் கடவுள்களுக்குப் பூசை செய்வது, வேத மந்திரங்கள் ஓதுவது என்பதெல்லாம் இன்று வழக்கமாகிவிட்டன.
3. அரசுப் பணிகளில் இஸ்லாமியருக்கு உரிய பங்களிக்கப்படவில்லை என்று சொல்கிறீர்களா?
ஆம். இந்தியாவிலுள்ள மொத்த மக்கள் தொகையில் 13 சதம் முஸ்லிம்கள் உள்ளனர். ஆனால் உயர் அரசதிகாரிகள் மட்டத்தில் முஸ்லிம்கள் எந்த அளவு உள்ளனர் என்று பாருங்கள்.
அகில இந்தியா
..................பதவி மொத்த....இஸ்லாமிய.....சதவீதக்......ஆண்டு
..................எண்ணிக்கை.....அதிகாரிகள்.....கணக்கில்
..................................................இஸ்லாமியர்
அய்.ஏ.எஸ்..........4195.............90............2.14..........1984
அய்.பி.எஸ்.........2222.............67.............3.0...........1983
மேலேயுள்ளது அகில இந்தியக் கணக்கீடு. தமிழகத்தில் நிலைமை என்ன தெரியுமா? கீழே பாருங்கள்.
தமிழகத்தில் முஸ்லிம் மக்கள் தொகை வீதம் 5.2 சதம்.
தமிழ்நாடு
...................பதவி மொத்த.......இஸ்லாமிய.......சதவீதக்.......ஆண்டு
...................எண்ணிக்கை........அதிகாரிகள்........கணக்கில்
இஸ்லாமியர்
அய்.ஏ.எஸ்.........272.....................3............1.10...........1984
அய்.பி.எஸ்........111.....................3.............2.7............1983
மைய அரசின் டில்லித் தலைமைச் செயலகத்தில் உள்ள நிலையைக் கீழே பாருங்கள். மொத்த சனத்தொகையில் 11.8 சதமாக உள்ள முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் இது 1971ம் ஆண்டு விவரம். இன்று இந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. சச்சார் குழு அறிக்கை (2004) ஏராளமான புள்ளி விவரங்களின் அடிப்படையில் இதை நிறுவியுள்ளது.
...................பதவி மொத்த.....இஸ்லாமிய.....சதவீதக்
...................எண்ணிக்கை......அதிகாரிகள்......கணக்கில்
தேர்வுநிலைஅதிகாரி...140................02............1.43
முதல்நிலைஅதிகாரி...395................05............1.27
பிரிவு அதிகாரி.......1666................12............0.27
உதவியாளர்.........4507................19...........0.42
சுருக்கெழுத்தாளர்கள் தேர்வுநிலை..........130................00.............0
முதல்நிலை..........155................00.............0
இரண்டு+மூன்றாம்....3280................08............0.24
நிலைகள்
எழுத்தர்கள்
மேல்நிலை..........2511................09.............0.36
கீழ்நிலை............6588................30.............0.46
நான்காம் நிலை......5383...............39.............0.73
ஊழியர்கள்
4. தனியார் நிறுவனங்களில் நிலைமை பரவாயில்லை எனச் சொல்ல முடியுமா?
அங்கு இதைவிட மோசம்.கீழேயுள்ள 1984ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களைப் பாருங்களேன். எண்கள் எல்லாம் சதவீதக் கணக்கில் இஸ்லாமியரின் பங்கைக் குறிக்கின்றன.
தனியார் நிறுவனங்கள்
நிறுவனம்....................அதிகாரிகள்.........கண்காணிப்பாளர்கள்......தொழிலாளர்கள்
டிஸ்கோ........................4.1..................5.6..................10.3
டெக்ஸ்மாகோ...................0....................0.30..................4.4
மபத்லால்.......................0....................1.72..................3.53
காலிகோ.......................0.68..................0....................10.02
மஹிந்த்ரா&மஹிந்த்ரா...........1.48..................2.25..................5.02
ஆர்கே.........................3.30..................3.00.................11.90
ஜேகே தொழில்நிறுவனங்கள்.....2.63...................3.28..................5.41
இந்தியன்எக்ஸ்ப்ளோசிவ்ஸ்......0......................2.33..................7.09
மேற்குறித்த புள்ளிவிவரங்கள் எல்லாம் சிறுபான்மைக் குழு அறிக்கைளிலிருந்து தொகுக்கப்பட்டவை.
எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி இதழ்களிலும் (ஆண்டு மலர் 88, ஜூலை 29, 89), ஒய்.ஜி. பாக்டே எழுதியுள்ள ‘சுதந்திரத்திற்குப் பின் இஸ்லாமியரும் தாழ்த்தப்பட்டோரும்’ என்ற நூலிலும் காணலாம்.
கோயமுத்தூர், அகமதாபாத், சென்னை, பம்பாய் போன்ற தொழில் நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இங்கெல்லாம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்துகொண்டே வருகிறது என்பதையும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் அதிகம் பணிபுரியும் தொழில் எது தெரியுமா?
வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் முஸ்லிம்கள் அதிகம் வேலை வாய்ப்புப் பெறுகின்றனர் (32 சதம்). ஏன் தெரியுமா? இந்த வேலை மிகவும் அசுத்மான, இழிவான, ஆரோக்கியக் கேடான வேலை. பாரம்பரியமாக இழிவாகக் கருதப்படும் இவ்வேலையைத் தாழ்த்தப்பட்டவர்களும் (60 சதம்) முஸ்லிம்களுமே செய்து வந்தனர்.
இன்றும் கூட உயர்சாதி இந்துக்கள் இந்த வேலையைச் செய்வதில்லை. இயந்திர இயக்குநர்கள், எழுத்தர்கள் போன்ற வேலைகளில் மட்டுமே பங்கு பெறுகின்றனர்.
தோலை ஊறவைத்தல், மயிர் பிடுங்குதல் போன்ற வேலைகளை, முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பெண்கள் மட்டுமே செய்கின்றனர். (பார்க்க பேரா.என்.சர்தார்கான், ‘வாணியம்பாடி தோல் தொழிலாளரின் சமூகப் பொருளாதார நிலை’ (அச்சில் வெளிவராத எம்.பி.ல ஆய்வு).
5. இராணுவம், காவல்துறை ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு உரிய பங்களிக்கப்பட்டுள்ளதா?
இல்லை. வகுப்புக் கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது இந்து மத வெறியர்களால் மட்டுமல்ல, இராணுவம் மற்றும் காவல்துறையால் கொல்லப்படுவதுதான் அதிகம்.
நீதிபதிகள் தார்குண்டே, ராஜேந்தர் சச்சார் ஆகியோர் தலைமையில் காஷ்மீரில் இராணுவக் கொடுமைகள் பற்றி ஆராய்ந்த குழு சுட்டிக்காட்டியுள்ள ஒரு சம்பவம் (31.3.90) இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒரு ஆசிரியரின் வீட்டிற்குள் ‘டியூசன்’ படித்துக் கொண்டிருந்த மாணவர்களை வரிசையாய் நிறுத்திப் பெயரைக் கேட்டு முஸ்லிம் மாணவரை மட்டும் சுட்டுக் கொன்றிருக்கிறது இந்திய இராணுவம்.
‘சர்வதேச பொதுமன்னிப்புச் சபை’ என்கிற மனித உரிமை அமைப்பு பொதுவாக அரசின் மனித உரிமை மீறல்களை மட்டுமேஆய்வு செய்யும் ஒருஅமைப்பு..
ஆனாலும் 1987ல் மீரட்டில் நடந்த வகுப்புக் கலவரத்தை அது ஆராய்ந்தது. பி.ஏ.சி. படையினர் முஸ்லிம்களை லாரியில் ஏற்றிச் சென்று 130 பேரை ஆற்றங்கரையில் நிற்க வைத்துச் சுட்டுக் கொன்று ஆற்றுக்குள் தள்ளிய கொடுமையை அது கண்டித்துள்ளது.
ஒரு கட்டிடத்தில் முப்பது முஸ்லிம்கள் உயிரோடு வைத்துக கொளுத்தப்பட்டதற்கும் பி.ஏ.சி. தான் காரணம் என அவ்வறிக்கை கண்டிக்கிறது.
அடுத்த நாள் மீரட் வீதிகளில் ‘பி.ஏ.சி. ஜிந்தாபாத்’ என்று ஆர்.எஸ்.எஸ்சினர் முழக்கமிட்டுக்கொண்டு ஊர்வலம் நடத்தினர்.
சமீபத்திய பம்பாய்க் கலவரத்தில் சிவசேனைக்குத் துணையாகக் காவல்துறை செயல்பட்டதையும், பாபர் மசூதியை வெறியர்கள் இடிக்கும் போது, பி.ஏ.சி. மற்றும் காவல்துறையில் பல்வேறு பிரிவுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றதையும் பத்திரிகைகளில் படித்தோம்.
2002ல் குஜராத்தில் இரண்டாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட நிகழ்வில் காவல் துறையின் ஒத்துழைப்பு ஊரறிந்த கதை.
இராணுவம், காவல்துறை முதலியன இப்படி இந்துமயமாகிப் போனதற்கான காரணங்களிலொன்று இவறிறில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது.
பி.ஏ.சி. படையில் 4 சதம் மத்திய ரிசர்வ் படையில் 5.5 சதம் மதக்கலவரங்களை அடக்குவதற்கான அதிரடிப்படையில் 6 சதம் மட்டுமே முஸ்லிம்கள் உள்ளனர்.
மதக் கலவரம் தொடர்பான வழக்குகளையும் போலீசார் ஒழுங்காகப் பதிவு செய்து நடத்துவதில்லை.
பிவந்தி (பம்பாய் 1984) கலவரத்தில் பதிவு செய்யப்பட்ட 611 வழக்குகளில் நான்கில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது.
குஜராத்தில் நடைபெற்றுள்ள செய்திகளைச் (2002) சொல்ல ஆரம்பித்தால் அது ஒரு தனி நூலாகவே விரியும். அங்கே இன்று நிலைமை என்னவெனில் குற்றவாளிகள் அதிகாரிகளாகவும், அமைச்சர்களாகவும் திரிகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணமின்றித் துன்புறுகிறார்கள்.
இச்சூழலை உபேந்திர பக்சி போன்ற அறிஞர்கள் அரசே ‘கிரிமினல்’ தன்மை அடைந்த நிலை எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
6. மதக் கலவரங்களில் கொல்லப்பட்ட இஸ்லாமியர் பற்றி ஏதேனும் புள்ளி விவரங்கள் உண்டா?
இத்தகைய புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
வன்முறை எப்போதும் உயிர்களையும் உடைமைகளையும் மட்டுமல்ல, சான்றுகளையும் சேர்த்தே அழித்து விடுகிறது.
இத்தகைய விசயங்களில் அரசு ஆவணக் காப்பகங்களையும் முழுமையாக நம்ப முடியாது.
எடுத்துக்காட்டாகப் பகல்பூர் (அக். 1989) கலவரத்தில் குறைந்தபட்சம் 1000 பேர் கொல்லப்பட்டனர். ரயிலில் பயணம் செய்தோரைக் குத்திக் கொல்வது, பாலியல் வன்முறைகள் எனப் பலவாறும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
கலவரத்தைத் தொடர்ந்து ஒரு இலட்சம் பேர் அகதிகள் முகாமில் இருந்தனர். ஜனவரி 90வரை 10,000 பேர் முகாமில் இருந்தனர். 1990 பிப்ரவரி மாதத்தில் ‘சண்டே மெயில்’ பத்திரிகை சுமார் 13 நாட்கள் அப்பகுதியில் தங்கி இக்கலவரம் பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டது.
ஆவணக் காப்பகத்தில் பல முக்கியச் சான்றுகள் அழிக்கப்பட்டிருந்ததை அப்பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது.
கலவரத்தின்போது உடனுக்குடன் வரும் அவசரச் செய்திகளைப் பதிவு செய்த புத்தகம் உட்பட அழிக்கப்பட்டிருந்தது.
தவிரவும் இத்தகைய சம்பவங்கள் குறித்து அரசுத் தரப்பு அறிக்கைகளையும், உயர்சாதியினர் ஆதிக்கம் செலுத்துகிற பத்திரிகைச் செய்திகளையும் நாம் நம்பமுடியாது.
இருந்தபோதிலும் அவ்வப்போது மனித உரிமை அமைப்புகள் பல கலவரங்கள் குறித்த உண்மை விவரங்களை ஆய்வு செய்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
ஆனால் இவற்றை யாரும் முழுமையாய்த் தொகுத்து ஒட்டுமொத்தப் புள்ளி விவரம் தயாரித்துள்ளதாகத் தெரியவில்லை.
இந்த உண்மைகளை மனதில் நிறுத்திக் கொண்டு கீழ்க்கண்ட புள்ளிவிவரத்தைப் பாருங்கள்.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழுள்ள ,காவல்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம்’ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலிருந்து இவ் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
தகவல் இல்லை (த.இ) என்பது அரசால் தகவல் முடக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது.
தகவல் முடக்கப்படாத முதலிரண்டு விவரங்களை வைத்துச் சொல்வதானால் சராசரியாக இக்கலவரங்களில் 100 பேர் கொல்லப்பட்டால் அதில் 70 பேர் முஸ்லிம்கள்தான். மொத்த சனத்தொகையில் இஸ்லாமியர் 13 சதம்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இங்கொன்றைச் சொல்வது அவசியம். இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உரிய ஆவணத் தொகுப்பு நிலையங்கள் ஏதும் இங்கு இல்லை. இது குறித்து அக்கறை உள்ளோர் இந்த விடயங்களில் முன்கை எடுத்தல் அவசியம். அட்டவணை
7. சமீபத்தில் மதக் கலவரங்களில் பொதுப்படையான பண்புகள் என ஏதாவது செல்ல முடியுமா?
சொல்லலாம். முதலில் இந்துவெறிப் பாசிச அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான முழக்கங்களை வெளிப்படையாக வைக்கின்றன.
முஸ்லிமாக இருப்பதே தேசத்துரோகமாக காட்டப்படுகிறது.
‘பாபரின் பிள்ளைகளே பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்’, ‘பாபர் மசூதியா மரணமா எது வேண்டும்சொல்’ என்றெல்லாம் முழங்கப்படுகிறது.
அடுத்து, இப்போதெல்லாம் வகுப்புக் கலவரங்கள் என்றால் ஒரே இடத்தோடு முடிந்துவிடுவதில்லை. நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தப்படுகிறது- பாசிசச் சக்திகள் இதற்கேற்ற வலைப்பின்னலை நாடு முழுவதும் அமைத்துள்ளன.
பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் நாடெங்கும் பல இடங்களில் கலவரங்கள் நடந்ததை நினைத்துப் பாருங்கள். அப்புறம், வன்முறை என்பது ஒரே நாளில் முடிவடைந்து விடுவதில்லை. தொடர்ந்து சில நாட்கள் வரை புகைந்துகொண்டே இருக்கிறது. திடீர் திடீரென வன்முறை வெடிக்கிறது.
எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தோடு முஸ்லிம்கள் வாழவேண்டி யிருக்கிறது.
நான்காவதாக, சிறுபான்மையினர் கொல்லப்படுவது என்பதோடு அவர்கள் பொருளாதாரப் பின்புலத்தையே அழித்துவிடும் நோக்கோடு அவர்களது கடைகள், சொத்துக்கள், நிறுவனங்கள் ஆகியவை அழித்தொழிக்கப்படுகின்றன.
சமீபத்திய சூரத், ரோடா, பம்பாய்க் கலவரங்களில் இதை நீங்கள் பார்த்திருக்கலாம். கடைசியாக, இத்தகைய தாக்குதல்களின் கொடூரத்தன்மை மிகவும் அதிகரித்திருக்கிறது. நவீன ஆயுதங்கள், வெடிகுண்டுகள் முதலியவை பயன்படுத்தப்படுகின்றன.
8. இந்தியப் பொருளாதாரத்தில் இஸ்லாமியர் ஆதிக்கம் பற்றி ஏதும் சொல்ல முடியுமா?
சொல்லத்தக்க அளவில் எந்தத் தீர்மானகரமான பங்கையும் அவர்கள் வகிக்கவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் 50ல் ஒன்றுகூட முஸ்லிம்களுக்குச் சொந்தமானதல்ல.
அதேசமயத்தில் கடைக் கோடியாக உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்டவர்களும் இஸ்லாமியருந்தான்.
50 மில்லியன் ரூபாய்க்கு மேலாக முதலீடு செய்யப்பட்டுள்ள 2832 பெருந்தொழில் நிறுவனங்களில் நான்கே நான்குதான் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. (பார்க்க: எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, 3-11-90). 9. அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகள், வங்கிக் கடன்கள் முதலியவை எந்த அளவு இஸ்லாமியரைச் சென்றடைகின்றன?
குறைந்த வருமான, மற்றும் நடுத்தர வருமான வீட்டு ஒதுக்கீடுகளில் 2.86 சதம் மட்டுமே முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்றன.
நியாய விலைக் கடை உரிமங்கள் பெற்றோரில் முஸ்லிம்கள் 6.9 சதம்தான்.
‘காதி மற்றும் கிராமப்புறத் தொழிற் குழு’வின் நலத் திட்டங்களால் பயனடைந்தோரில் முஸ்லிம்கள்0.25 சதம் தான்.
இன்னொரு விவரம்:
அரசுக்கடன்கள் தொகை ரூ..............பயனடைந்த இஸ்லாமியர்.........சதவீதக் கணக்கில்
50,000-1,00,000...............3
1 லட்சம்-2 லட்சம்.............2
2 லட்சம் – 10 லட்சம்..........1க்கும் குறைவு
(பார்க்க: எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, 3-11-90)
10. கல்வி நிலையில் இஸ்லாமியர் எப்படி உள்ளனர்?
ரொம்ப மோசம். சிறுபான்மைக் குழுவின் அறிக்கையின்படி பத்தாம்வகுப்பு வரை படித்தவர்களில் 4 சதம் மட்டும் முஸ்லிம்கள்.
உயர் கல்வியில் நிலைமை இன்னும் மோசம். மத்தியதர வர்க்கம் என்பது முஸ்லிம்கள் மத்தியில் உருவாகாமல் போனது இதற்கொரு காரணம். பெரும்பாலோர் ஏழைகள், கைவினைத் தொழில் செய்வோர் இப்படித்தான். உங்களுக்குத் தெரிந்து முஸ்லிம்கள் ஓரளவு வசதியாக உள்ள ஒருசில பகுதிகளை வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் இதுதான் நிலை என்று கருதிவிடாதீர்கள்.
11. ஆனால் முஸ்லிம்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஏராளமாய்ப் பணம் வருகிறதே?
இந்திராகாந்தி அமெரிக்காவில் பேட்டி கொடுத்ததை வைத்துச் சொல்கிறீர்களா? எச்.என்.பகுகுணா இது பற்றிப் பாராளுமன்றத்தில் கேட்டபோது அரசால் (ஆக. 16, 1982) இது உடனே மறுக்கப்பட்டது.
அதே ஆண்டு பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில் (ஏப்ரல் 28, 82) ஒன்றிலிருந்து இன்னொரு தகவல். 1981-82ம் ஆண்டு வெளிநாட்டு உதவி பெற்ற இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 3159. இதில் முஸ்லிம் நிறுவனங்கள் 62 தான். அதாவது வெறும் இரண்டு சதம் தான்.
இன்னொன்றையும் சிந்தித்துப் பாருங்கள்.
இன்று ராமஜன்ம பூமி என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் வெளிநாடுகளிலிருந்து இந்து வெறி அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் பணம் வந்து குவிகிறது.
சுருட்டியது போக எஞ்சியவற்றை வைத்துக் கொண்டு இன்று அயோத்தி முழுவதும் ஏராளமான பிரகாரங்களும், மாளிகைகளும் மிக ஆடம்பரமாய்க் கட்டப்படுகின்றன.
இது தொடர்பாகக் கணக்கு கேட்ட ஒரு வருமான வரி அதிகாரி மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ள செய்தியை நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஆனந்த் பட்டவர்த்தனின் ‘கடவுளின் பெயரால்’ என்கிற தகவல் படத்தில் இந்த அதிகாரியின் பேட்டியையும் நீங்கள் பார்க்கலாம்.
உண்மை இப்படியிருக்க முஸ்லிம்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதிவருகிறது என்கிற செய்தி திட்டமிட்டு தொடர்ந்து பரப்பப்படுவது முஸ்லிம்களுக்கு திரான வன்முறைக்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மொரதாபாத் கலவரத்திற்கு Ôடைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் அதன் ஆசிரியர் கிரிலால் ஜெயின் தொடர்ந்து இத்தகைய வதந்தி பரப்பி வந்ததை ஒரு காரணமாய்ப் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்த வகையில் வன்முறையில் தொடர்புச் சாதனங்களின் பங்கையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.
குஜராத் வன்முறையை ஒட்டி அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள இந்து உயர்சாதியினர் இங்குள்ள இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாக நிதி திரட்டுவது பற்றிய சர்ச்சை மேலுக்கு வந்தது.
ராபர்ட் ஹாத்வே போன்ற அமெரிக்கக் கல்வியாளர்கள் இது போலத் திரட்டுப்படுகிற பணம் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பயன்படுத்துவதைப் பற்றிக் குற்றஞ்சாட்டியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
12. முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்புச் சாதனங்கள் எப்படி செயல்படுகின்றன.
முஸ்லிம்கள் பற்றிய கட்டுக் கதைகள் என இதுவரை நாம் என்னவெல்லாம் சொன்னோமோ அவ்வளவும் தொடர்புச் சாதனங்கள் வழியாய்த்தான் மக்கள் மத்தியில் பதிக்கப்படுகின்றன.
’ இந்தி மொழிப் பத்திரிகைகள் இந்த வகையில் மிகவும் மோசம்.
பாபர் மசூதிப் பிரச்சினையில் ‘ஸ்வதந்த்ர சேத்னா’, ;பயோனியர்’, ‘ஆஜ்’, ‘ஸ்வதந்த்ர பாரத்’ போன்ற பத்திரிகைகள் எப்படி முஸ்லிம்களுக்கு எதிரான பொய்யான வதந்திகளைப் பரப்பின என்பதை ராதிகா ராமசேஷன் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார்
(எ.பொ.வீ. 15-1-90). முலாயம்சிங் யாதவ் இந்த வெறியர்களுக்கு ஆதரவாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரை ‘முல்லா முலாயம்’ என்றே இப்பத்திரிகைகள் எழுதின.
“முலாயம் இஸ்லாமியரை ஆயுதம்வைத்துக் கொள்ளச் சொல்கிறார்” எனவும், “முலாயம் ஆட்சியில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர்” எனவும் இவை பொய்ச் செய்திகளை வெளியிட்டன.
பாபர் மசூதி இடிப்புப் பிரச்சனையில் இங்குள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எப்படி நடந்துகொண்டன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இந்து மதவெறி அமைப்புகள் தடை செய்யப்பட்டதைத் ‘தினமணி’ கண்டித்து எழுதியது (டிசம். 12).
“பெரும்பான்மையினரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளா விட்டால் முஸ்லிம்களின் கதி இப்படித்தான் ஆகும்” என்கிற கருத்தில் மசூதி இடிப்பைத் தொடர்ந்து வீரேந்திர கபூர் என்பவரின் கட்டுரையை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (ஜன. 7,93) வெளியிட்டது.
பார்ப்பனர் ஆதிக்கத்திலுள்ள தொலைக்காட்சிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
மசூதி இடிப்பிற்கு ஆதரவாக மக்களைத் திரட்டிய பாசிச அமைப்புகளின் முயற்சிக்குப் பின்னணியாக விளங்கியது தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பப்பட்ட இராமாயண, மகாபாரதங்கள்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் இதே பத்திரிகைகள்தான் ஆண்டுக்கு ஒரு முறை ரம்ஜான் மலர் வெளியிட்டு முஸ்லிம்வணிகர்களிடம் விளம்பரக் கொள்ளை அடிப்பதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
13. தொலைக்காட்சியில் திப்புசுல்தான் கதையைக் கூடத்தான் தொடராகக் காட்டினார்கள்?
ஆனால் ஒன்றைக் கவனியுங்கள்.
ஒவ்வொரு வாரமும் திப்பு சுல்தான் தொடருக்கு முன்பாக “இது கற்பனைக் கதையின் அடிப்படையிலானது” என்று அறிவிப்புச் செய்தார்கள்.
திப்பு சுமார் இருநூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்து மடிந்த சரித்திர நாயகர். அவருடைய கதைக்கு இந்த அறிவிப்பு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படும் சாணக்கியன் கதைக்கும் இராமாயண, மகாபாரதங்களுக்கும் இந்த அறிவிப்பு கிடையாது.
திரைப்படங்களில் கூட முஸ்லிம்கள் பற்றி ஒரேவிதமான பிம்பங்கள்தான் முன் நிறுத்தப்படுகின்றன.
’நல்ல’ முஸ்லிம் என்றால் இந்துக்களோடு அனுசரித்துப் போகிறவர், உதவி செய்கிறவர், உரிமைகளுக்காகப் போராடினால் அவர் நல்ல முஸ்லிமல்ல.
‘ரோஜா’, ‘ஜாதிமல்லி’, ‘பம்பாய்’ முதல் நேற்று வந்த ‘ஒற்றன்’, ‘நரசிம்மா’ வரை சமீபத்திய திரைப்படங்களில் முஸ்லிம்கள் வன்முறையாளர்களாகச் சித்திரிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
14. ‘ரோஜா’ திரைப்படம் பற்றிச் சொன்னீர்கள். சரி, ‘ஜாதிமல்லி’யில் பொதுவாக மதக் கலவரம் கண்டிக்கப்படுகிறதே தவிர எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் விதண்டவாதம் செய்வது போலத் தோன்றுகிறதே?
பாலச்சந்தர் போன்ற பார்ப்பனர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தால் நம் காதுகளில் ஜாதிமல்லியைச் சுற்றிவிட்டுப் போய்விடுவார்கள்.
அந்தப் படத்தில் இரண்டு முறை மதக்கலவரங்கள் காட்டப்படுகின்றன. இரண்டுமே நடப்பது அய்தராபாத்தில்தான், இன்று மதக் கலவரங்கள் அயோத்தியிலும், பம்பாயிலும், மீரட்டிலும், டில்லியிலும் நடக்கின்றன.
எல்லாவற்றையும் விட்டுவிட்டு பாலச்சந்தர் ஏன் அய்தராபாத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
அய்தராபாத் என்பதன் மூலம் வன்முறையாளர்கள் முஸ்லிம்கள் என்கிற கருத்து மறைமுகமாய்ச் சொல்லப்படுகிறது.
தவிரவும் பாதிக்கப்படுபவள் ஒரு இந்துப் பாடகி. பெயர் ஸ்ரீ ரஞ்சனி. எனவே மதக் கலவரத்தில் அவளது தாயைக் கொல்பவர்கள் முஸ்லிம்களாகத்தான் இருக்க முடியும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
எங்களைப் போன்றவர்களின் வாதங்களை விதண்டாவாதம் எனச் சொல்லாதீர்கள்.
சமத்துவம், சனநாயகம் என்கிற அடிப்படையில் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள் நாங்கள். அறிவுரீதியாக நாங்கள் சொல்கிற விஷயங்கள் தவறானவை என்று நிறுவுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம்.
15. நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் பெரும்பான்மையோரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதுதானே சனநாயகம்?
பெருமபான்மையானவர்களின் கருத்துக்கும் பெரும்பான்மை சார்பாகச் சொல்லப்படும் கருத்துக்கும் வேறுபாடு காணவேண்டும்.
இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான மக்கள் பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்றா சொல்கின்றனர்?
நிச்சயமாகக் கிடையாது.
‘தொடர்புச் சாதனங்கள் பற்றிய ஆய்வு மையம்’ என்கிற அமைப்பு டிசம்பர் 8ம் தேதியன்றும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழ் டிசம்பர் 12, 15 (1992) ஆகிய தேசிதளிலும் செய்த கருத்துக் கணிப்பின்படி 80 சதம் பேர் மசூதி இடித்ததைக் கண்டித்துள்ளனர்.
அதோடு பொத்தாம் பொதுவாகப் பெரும்பான்மையோரின் கருத்துகளை ஏற்றுக் கொள்வதுதான் சனநாயகம் என்றும் சொல்ல முடியாது.
மனித உரிமைப் பிரச்சினைகளைப் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானித்துவிடவும் முடியாது.
நாளைக்கே இந்து மதவெறி அடிப்படையில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் யாரும் பிள்ளை பெறக்கூடாது என்றொரு சட்டம் போட்டால் பெரும்பான்மைக் கருத்து என ஏற்றுக் கொள்ள முடியுமா?
வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் அப்படித்தான்.
அதோடு சனநாயகம் என்றால் சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கட்டுப்படுவது மட்டுமல்ல; சிறுபான்மையோருக்குப் பாதுகாப்பளிப்பதும், தங்களது கருத்துக்களை அவர்கள் பிரச்சாரம் செய்து பெரும்பான்மைக் கருத்தாக மாற்ற உரிமையளிப்பதும் சேர்த்துத்தான் சனநாயகம்.
ஆனால் ஒரு எச்சரிக்கையை இங்கு சொல்வது பொருத்தம். சாதாரண மனிதனிடமும் இந்துத்துவச் சிந்தனைகளைப் பதிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
ஆனால் அதற்கு இணையாக நமது மதச்சார்பற்ற சக்திகள் வேலை செய்வதில்லை, அணிதிரட்டுவதில்லை என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
சமீபத்திய தேர்தல்களில் (2003) பா.ஜ.க. வெற்றி பெற்றதற்குப் பின்னணியாக உள்ள இந்துத்துவக் கும்பலின் தொடர்ச்சியான செயற்பாடுகளை நாம் மறந்துவிடக் கூடாது. குறிப்பாகப் பழங்குடியினர், தலித்கள் மத்தியில் இவர்களின் செயல்பாடு கவனிக்கத்தக்கது.
16. பாபர் மசூதிதான் இடிக்கப்பட்டுவிட்டதே. போனது போகட்டும் என இஸ்லாமியர் இதனை ஏற்றுக் கொண்டால் இனி பிரச்சினை இல்லைதானே?
இனிமேல்தான் பிரச்சினையே. மதுராவில் ‘’இட்கா’ மசூதியை இடித்துவிட்டுக் ‘கிருஷ்ண ஜன்ம பூமி’ கட்ட வேண்டுமெனவும், அஞ்சனியில் கிறிஸ்தவக் கோயிலை இடித்துவிட்டு ‘’அனுமான் ஜன்ம பூமி அமைக்க வேண்டுமெனவும் இந்து வெறியர்கள் பேசத் தொடங்கிவிட்டனர். வருணாசிரம அடிப்படையிலான ‘இந்து ராஜ்யம்’ தானே அவர்களின் இறுதிக் குறிக்கோள்!
17. முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
மிகவும் பாதுகாப்பற்ற மனநிலையிலுள்ளனர். இரண்டாம் தரக் குடிமக்களாக உணர்ந்து வெட்கிப் போயுள்ளனர்.
தங்களின் அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நிலையில் இஸ்லாம் தனிநபர் சட்டம், ருதுமொழிக்கு நியாயம் வழங்குதல்’, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்குச் சிறுபான்மை உரிமை வழஙகுதல், பாடப்புத்தகங்களில் இஸ்லாமியர் பற்றிய பொய்ச் செய்திகளை நீக்குதல் போன்ற கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.
கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பேட்டி காணும்போது தங்களது பாதிப்புகளைச் சொல்லக்கூடப் பயந்து சாகின்றனர். (எ.பொ.வீ. 10-11-90).
இழந்தது இழந்ததாக இருக்கட்டும். இனி இழப்புகள் தொடராதிருக்கட்டும். குறைந்தபட்ச அமைதியான வாழ்க்கை போதும் என்பதுதான் அச்சம் கலந்த அவர்களது இன்றைய மனநிலை, எனினும் மசூதி இடிப்புக்குப் பினபு முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு பாராட்டத்தக்கது.
18. நீங்கள் செல்வதெல்லாம் சரியாகவும் நியாயமாகவுந்தான் தோன்றுகின்றன. எல்லாவற்றையும் நான் யோசித்துப் பார்க்கிறேன். இந்து வகுப்புவாதம் என்பது நம்மை உடனடியாக எதிர்கொண்டுள்ள ஆபத்தான சூழல் என்பது விளங்குகிறது. இந்நிலையில் நம்முடைய பங்கு என்ன?
பெரும்பான்மையினரின் பெயரிலான பாசிசத்திற்கு எதிராகச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்த நாட்டிலுள்ள சனநாயகச் சக்திகளின் கடமை. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு இந்து மதவெறியைக் கண்டிப்பதற்கே அரசு அனுமதி வழங்க மறுக்கிறது.
கண்டிப்பவர்களும் கூட வெளிப்படையாக இந்துமதப் பாசிசத்தைக் கண்டிக்காமல் ‘சமய ஒற்றமை’ என்கிற பெயரில்தான் கருத்துப் பிரச்சாரம் செய்கின்றனர்.
ஏதோ இரண்டு சமயங்களுமே முரண்டு பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு நிற்பது போன்ற அர்த்தத்தை இது ஏற்படுத்திவிடுகிறது.
ஆனால் நிலைமை அதுவல்ல. இந்துமத வெறியர்களும் இந்துமயமான அரசும் தாக்குகின்றனர்.
முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர்; எனவே இந்து மதவெறியைக் கண்டிக்கிறேன் என்று சொல்லாமல் மத ஒற்றுமை பேசுவதெல்லாம் சும்மா பம்மாத்துத்தான்.
இந்த நிலையில் இந்துமத வெறிக்கு எதிராக மக்களைத் திரட்டுவது சனநாயகச் சக்திகளின் கடமை.
அதில் ஓர் அங்கம்தான் முஸ்லிம்கள் பற்றிய கட்டுக்கதைகளைத் தகர்ப்பது.
கட்டுக் கதைகள் முன் வைக்கப்படும்போது அவற்றைத் தோலுரிப்பதும், அம்பலப்படுத்துவதும், முன்வைக்கும் சக்திகளை எதிர்த்துப் போராடுவதும் சிறுபான்மையினரின் உயிர், உரிமை, உடைமை எல்லாவற்றையும் பாதுகாப்பதும் நமது கடமை.
அது மட்டுமல்ல. இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டுவது என்கிற அடிப்படையில் சங்கராச்சாரி போன்ற இந்துத்துவ மனநிலையிலுள்ள மதத் தலைவர்களும் இந்துத்துவ அரசியல் சக்திகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதியைத்தான் கட்டிக் கொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைப்பது நம் கடமையாக உள்ளது.
91ம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி 1947ல் வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியேதான் இன்றும் இருக்க வேண்டும்.
அந்தச் சட்டப்படியும், பொதுவான மனித அறங்களின்படியும், மசூதி இடிக்கப்பட்ட அன்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அளித்த வாக்குறுதியின் படியும் பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்தில் மீண்டும் மசூதியே கட்டிக் கொடுக்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கையை நாமும் வைக்க வேண்டும். இதர இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற அரசியல் சக்திகளையும் முன் வைக்குமாறு வலியுறுத்தவுனம் வேண்டும்.
தொடரும் .....
மீண்டும் வாருங்கள்.
0 comments:
Post a Comment