ஜெயலலிதாவிடமே பம்மாத்தா?. போலி டிகிரி எம்.எல்.ஏ - மந்திரிகள் .
>> Thursday, September 5, 2013
படிக்காத படிப்பை, படித்ததாகச் சொல்லி 50-க்கும் மேற்பட்டோர் சீட் வாங்கி ஜெயித்து எம்.எல்.ஏ-க்களாகவும் மந்திரிகளாகவும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
போலி டிகிரி.. படிச்சாரா மந்திரி? - விகடன்.
தவறு செய்தால்... ஏமாற்றினால்... மோசடியை அரங்கேற்றினால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் 'தொலைத்துக் கட்டிவிடுவார்’ ஜெயலலிதா. அப்படிப்பட்ட தலைவியையே ஏமாற்றிப் பதவியில் உட்கார்ந்திருக்கிறார்கள் சிலர். படிக்காத படிப்பை, படித்ததாகச் சொல்லித் தலைவியிடம் பம்மாத்து காட்டி எம்.எல்.ஏ. சீட் வாங்கி ஜெயித்தவர்களின் ஜாதகம் இது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து 'விருப்ப மனு’ வாங்கியது அ.தி.மு.க. தலைமை. சுமார் 8,000 பேர் சீட் கேட்டு விண்ணப்பித்தனர். அப்படி, விருப்ப மனு அளித்தவர்கள், தங்களின் கல்வித்தகுதி என்ன என்பதையும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். இந்த விருப்ப மனு தவிர ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வீதம் மாவட்டச் செயலாளர்கள் மூலமும் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இவர்களிடமும் கல்வித்தகுதி விவரங்கள் பெறப்பட்டன. விருப்ப மனுக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அளித்த பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் யாரை நிறுத்தலாம் என தலைமை ஒரு இறுதிப் பட்டியலைத் தயாரித்தது. அந்தப் பட்டியலில் ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வரை தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை அழைத்து ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். இறுதியாக, வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். அப்படி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்ற பெயர்களுக்குப் பின்னால் அவர்கள் வாங்கிய பட்டங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.
இங்கேதான் சிக்கல்... வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். சொத்துப் பட்டியல், வருமான வரி கணக்கு, நிரந்தரக் கணக்கு எண், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் போன்ற விவரங்கள் எல்லாம் வேட்புமனுவோடு அளிக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த வேட்புமனுவில் கல்வித் தகுதி பற்றி எட்டாவதாக ஒரு கேள்வி. அதிகபட்சமாகப் படித்த கல்வித் தகுதியை இங்கே குறிப்பிட வேண்டும். என்ன படிப்பு, படித்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், படிப்பு முடித்த ஆண்டு ஆகிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
கெடுபிடி காட்டும் தேர்தல் கமிஷனிடம் தவறான தகவலைக் கொடுத்தால் முதலுக்கே மோசம் வந்துவிடும் என பயந்தோ, என்னவோ பெரும்பாலானோர் சரியான தகவலைக் கொடுத்து விடுவார்கள். அப்படி கொடுத்த விவரங்களை எல்லாம் தோண்டி எடுத்தோம். 50-க்கும் மேற்பட்டோர் பொய்யான தகவலைச் சொல்லி சீட் வாங்கி ஜெயித்து எம்.எல்.ஏ-க்களாகவும் மந்தி ரிகளாகவும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
160 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது அ.தி.மு.க. முதலில் அமைச்சர்களைப் பார்ப்போம்.
* அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெற்றபோது அவருக்கு எந்தப் பட்டமும் சூட்டப்படவில்லை. ஆனால், வேட்புமனு தாக்கலில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா கலைக் கல்லூரியில் 1973-ல் பி.ஏ. பொருளியல் முடிக்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், சட்டசபை வெப்சைட்டில் பி.ஏ. எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
* அமைச்சரவையில் நான்காவது இடத்தில் இருக்கும் வைத்திலிங்கம் வேட்பாளர் பட்டியலில் பி.ஏ. படித்ததாக சொல்லியிருந்தார் ஜெயலலிதா. ஆனால், வேட்புமனுவில் 1977-80-ம் ஆண்டு சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ. முடிக்கவில்லை என சொல்லியிருக்கிறார் வைத்திலிங்கம். ஆனால், சட்டசபை ரெக்கார்டில் பி.ஏ. என குறிப்பிட்டிருக்கிறார்.
* ஆயிரம் விளக்கு வேட்பாளர் பட்டியலில் பா.வளர்மதியின் பெயருக்குப்பின் (பி.ஏ.) என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், வேட்புமனுவில் மதுரை சிறுமலர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தாகக் குறிப்பிட்டிருக்கிறார். சட்டசபையிலும் 10-ம் வகுப்பு என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இடையில் அவர் பிளஸ் 2 படித்தாரா? பி.ஏ. முடித்தாரா?
* வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் பெயருக்குப் பின்னால் (பி.எஸ்ஸி.) என குறிப்பிட்டிருந்தார் ஜெயலலிதா. வேட்பு மனுவில் ஈரோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் 1976-ம் ஆண்டு பி.எஸ்ஸி. ஃபெயில் என சொல்லிவிட்டு, சட்டசபையில் பி.எஸ்ஸி. எனக் குறிப்பிட்டிருக்கிறார் பழனிசாமி.
* கரூர் தொகுதிக்கு சீட் கேட்டபோது பி.காம். படித்திருப்பதாகப் பட்டம் சூட்டிக்கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கலின்போது உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். பி.காம். படிப்பை கரூர் அரசு கலைக் கல்லூரியில் 16.4.95-ல் இடை நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், சட்டசபை ரெக்கார்ட் அவர் பி.காம். முடித்ததாகச் சொல்கிறது.
* அமைச்சர் ரமணா திருவள்ளூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். வேட்பாளர் பட்டியலில் அவர் பெயருக்குப் பின்னால் பி.எஸ்ஸி., டி.பார்ம். எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், வேட்புமனுவிலும் சட்டசபை இணையதளத்திலும் வெறும் டி.பார்ம். மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. சென்னை சி.எஸ்.பேஸ்ட் மேத்தா பார்மஸி கல்லூரியில் 1990-ல் டி.பார்ம் முடித்திருக்கிறார். பி.எஸ்ஸி. எங்கே படித்தார் என்பது தெரியவில்லை!
* ஆவடியில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் அப்துல் ரஹீமுக்கு வேட்பாளர் பட்டியலில் எந்தப் பட்டமும் குறிப்பிடவில்லை. வேட்புமனுவில் ஆவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து 29.3.1986-ல் விலகியபோது '10-ம் வகுப்பு ஃபெயில்’ எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சட்டசபை பதிவேட்டில் '10-ம் வகுப்பு’ படித்தாகக் காட்டியிருக்கிறார்.
* அமைச்சர் வீரமணி ஜோலார்பேட்டையில் போட்டியிட்டபோது வேட்பாளர் பட்டியலில் பி.ஏ. எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், வேட்புமனுவில் அவர் ஜோலார்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 1980-1981-ல் பத்தாம் வகுப்பு முடித்தாகச் சொல்லியிருந்தார். சட்டசபையிலோ பி.ஏ. எனச் சொல்லியிருக்கிறார்.
* குமாரபாளையத்தில் போட்டியிட்டு வென்ற அமைச்சர் தங்கமணியின் பெயருக்குப் பின்னால் (பி.ஏ.) என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், வேட்புமனுவில் 1976-77-ல் ஈரோடு கலைக் கல்லூரியில் பி.யூ.சி. ஃபெயில் என சொல்லியிருந்தார். சட்டசபை இணையதளத்தில் பட்டத்தைச் சேர்த்துக்கொண்டார்.
* வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பெயருக்குப் பின்னால் பி.ஏ. என குறிப்பிட்டிருந்தனர். ஆனால், வேட்புமனுவில் 1982-85-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தாகச் சொல்லி பட்டத்துக்கு மேல் ஒரு கோடு போட்டிருந்தனர். இதற்கு, அவர் படிப்பை முடிக்கவில்லை என்று பொருள். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சட்டசபை ரெக்கார்டில் பி.ஏ. பட்டம் சேர்ந்துகொண்டது.
* தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் முக்கூர் சுப்பிரமணியன் 5-ம் வகுப்பு வரை படித்தவர். செய்யாறு தொகுதிக்கு அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது அவருடைய பெயருக்குப் பின்னால் பி.ஏ. பட்டம் இடம்பெற்றிருந்தது. ஆனால் வேட்பு மனுவோடு தாக்கல்செய்த பிரமாண பத்திரத்தில் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். சட்டமன்ற வெப்சைட்டில் பி.ஏ. எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் சில மாதங்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் சுப்பிரமணியன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டபோது வேட்புமனுவில் 6-ம் வகுப்பு ஃபெயில் என குறிப்பிட்டிருக்கிறார். ஐந்தாம் வகுப்பு படித்தவர் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அமைச்சர்.
அடுத்து முன்னாள் அமைச்சர்களைப் பற்றி பார்ப்போம்.
* பாலக்கோடு தொகுதியில் வென்ற கே.பி.அன்பழகன் வேட்பாளர் பட்டியலில் (பி.எஸ்ஸி.) (படிப்பை முடிக்கவில்லை) என குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அஃபிடவிட்டிலும் சட்டசபையிலும் பி.யூ.சி. என குறிப்பிட்டிருக்கிறார்.
* ஊட்டியில் ஜெயித்த முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் பி.எஸ்ஸி., பி.எட்.படித்திருக்கிறார் என வேட்பாளர் பட்டியிலில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அஃபிட விட்டிலும் சட்டசபையிலும் பி.எஸ்ஸி. மட்டுமே இருக்கிறது.
* முசிறி என்.ஆர்.சிவபதி எம்.ஏ., பி.எல். படித்ததாகச் சொல்லிவிட்டு, பிறகு வேட்பு மனுவிலும் சட்டசபையிலும் பி.ஏ., பி.எல். எனக் குறிப்பிட்டிருந்தார்.
* நயினார் நாகேந்திரன் எம்.ஏ. படித்ததாக ஜெயலலிதா சொல்லியிருந்தார். ஆனால், தேர்தல் கமிஷனில் (எம்.ஏ.)வை அடைப்புக்குறியில் காட்டியிருந்தார். திருநெல்வேலி இந்துக் கல் லூரியில் (எம்.ஏ.) கோர்ஸை முடித்திருக்கிறார். சட்டசபையிலோ பி.எஸ்ஸி. (எம்.ஏ.) எனச் சொல்லியிருந்தார்
அடுத்து எம்.எல்.ஏ-க்கள்...
* வேளச்சேரி அசோக் 1987-ல் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு 2007-10-ல் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்திருக்கிறார். தேர்தல் கமிஷனில் இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கும் அசோக் பி.ஏ. படிப்பை பாஸ் செய்தாரா? என்பதைச் சொல்லாமல் கோர்ஸ் முடித்ததை மட்டும் குறிப் பிட்டிருக்கிறார்.
* மைலம் தொகுதியைச் சேர்ந்த கே.பி. நாகராஜனும் (வேட்புமனுவில் பி.நாகராஜன் எனக் குறிப்பிட்டிருப்பது ஏனோ!), அருகில் இருக்கும் இன்னொரு தொகுதியான வானூர் தொகுதியை சேர்ந்த ஜானகிராமனும் தலைவியிடம் தாங்கள் பி.ஏ. படித்தாகச் சொல்லி சீட் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், வேட்புமனுவிலும் சட்டசபையிலும் 10-ம் வகுப்பு எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
* ஊத்தங்கரை மனோரஞ்சிதம் வேட்புமனுவில் கல்வித் தகுதிக்கு நேராக 'எதுவுமில்லை’ என குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், சட்டசபையில் அவருடைய கல்வித் தகுதி 8-ம் வகுப்பு எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
* மதுராந்தகம் கனிதா சம்பத் போட்டியிட்டபோது (பி.ஏ.)வை அடைப்புக்குறிக்குள் காட்டியிருந்தவர், வேட்புமனுவில் 9-ம் வகுப்பு என சொல்லிவிட்டு சட்டசபையில் 10-ம் வகுப்பு எனப் போட்டிருக்கிறார்.
* பல்லாவரம் தன்சிங் போட்டியிட்டபோது (பி.காம்.) பட்டத்தை அடைப்புக்குறிக்குள் காட் டியவர் வேட்புமனுவிலும் சட்டசபையிலும் பி.யூ.ஸி. எனச் சொல்லியிருக்கிறார்.
* சேலம் தெற்கு செல்வராஜ் (பி.எஸ்.ஸி.)யை அடைப்புக்குறிக்குள் காட்டியிருந்தார். ஆனால், வேட்புமனுவில் சட்டசபையிலும் பி.யூ.சி. எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
* கிள்ளியூர் தொகுதியில் நின்று தோற்றுப்போன ஜார்ஜின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றபோது அவர் பெயருக்குப் பின்னால் இரண்டு எம்.ஏ. இடம்பெற்றிருந்தது. ஆனால் வேட்புமனுவில் 1986-ம் ஆண்டு புனித பெர்னதத் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்தாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
பதவிப் பிரமாணம் எடுத்தவர்கள் எப்படி எல்லாம் 'சட்ட, நியாய’ப்படி நடந்து வருகிறார்கள் என்பதற்கு உதாரணம் இது!
- எம்.பரக்கத் அலி
Thanks to: vikatan.com.
Ref: http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=36049
2 comments:
பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறையில் tutor ஆக பணிபுரிந்த அன்பழகனை பேராசிரியர் என்று அண்ணாதுரை ரீல் விடவில்லையா,இதுவெல்லாம் திராவிட கட்சிகளின் அடிப்படை குணங்கள்.
uruppadum...
Post a Comment