**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கருத்துச்சுதந்திர ஓலமிட்டவர்களே ஏன் கள்ள மௌனம்?

>> Monday, September 30, 2013

கருத்துச் சுதந்திரம் குறித்து ஓலமிட்ட கருணாநிதி இராமதாசு பாரதிராஜா,திரைக் கலைஞர்கள் நடுநிலை தவறாத ஊடகங்கள் வலைப்பதிவர்கள் கள்ள மெளனம் சாதிக்கின்றார்கள்.

கிழிந்து தொங்கும் கருத்துப் போலிச் சுதந்திரம்!

உறைந்து கிடக்கும் கள்ள மெளனம்

தந்தி தொலைக்காட்சியின் ஆயுத எழுத்து நிகழ்வில் ‘விஸ்வரூபம்’ திரைப்படம் தொடர்பான விவாத அரங்கில் ஒரு கேள்வியை முன்வைத்தோம்.

“இலங்கையில் நடக்கும் ஈழப்பிரச்னையை முன் வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டால் அப்போது கருத்துச் சுதந்திரம் பேசுவீர்களா..?

ஆப்கன் முஸ்லிம்களைப் பற்றி படம் எடுத்ததற்கு இங்குள்ள முஸ்லிம்கள் குமுறி எழுகின்றீர்கள் என்று கேட்கின்றீர்கள். விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்திரித்து படம் எடுக்கப்பட்டால் இங்குள்ள தமிழர்கள் குரல் கொடுக்க மாட்டார்களா..?

அப்படிக் குரல் எழுப்பும்போது இலங்கையிலுள்ள தமிழர்களைப் பற்றி படம் எடுத்தால் இங்குள்ள தமிழர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? என்று கேட்பீர்களா?”

அப்போது நாம் எழுப்பிய இந்த வினாவிற்கு நிகழ்வில் பங்கேற்ற ரமேஷ் கண்ணாவும், டெல்லி கணேஷும் பதிலளிக்காமல் போக்குக் காட்டினார்கள்.

விவாதத்திற்காக நாம் எழுப்பிய வினா ‘மெட்ராஸ் கஃபே’ என்ற பெயரில் ஹிந்தி திரைப்படமாக வெளிவந்துள்ளது. சுஜித் சர்க்கார் இயக்கத்தில் ஜான் ஆப்ரஹாம் நடித்த இத் திரைப்படம் ஈழத்தைக் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ராஜீவ்காந்தி கொலைக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என படம் பிடித்துக் காட்டியுள்ளது ‘மெட்ராஸ் கஃபே’. தம்பி பிரபாகரன் அண்ணன் பாஸ்கரன் பாத்திரமாக வருகிறார். எல்.டி.டி.இ இயக்கம் எல்.டி.எஃப் என மாற்றப்பட்டிருக்கின்றது.

விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில் கருத்துச் சுதந்திரம் முழங்கிய கருத்துப் போராளிகள் அனைவரும் சொல்லிவைத்தார் போல ‘மெட்ராஸ் கஃபே’ படத்தைத் தமிழகத்தில் திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர்.

விஸ்வரூபம் இடத்தில் இன்று மெட்ராஸ் கஃபே.

அமெரிக்காவிற்குப் பதில் இந்தியா. ஆப்கானிஸ்தானிற்குப் பதில் ஈழம். அல்கொய்தாவிற்குப் பதில் விடுதலைப் புலிகள். ஆனால் அதே கருணாநதிதான் இப்போதும்! அதே இராமதாசுதான் இப்போதும்! அதே பாரதிராஜா, அதே ரமேஷ் கண்ணா, அதே செல்வமணி, அதே திரைக் கலைஞர்கள்தான், அதே நடுநிலை தவறாத ஊடகங்கள்தான். அனைவரும் கருத்துச் சுதந்திரம் குறித்து ஓலமிட்டவர்கள் இப்போது ஒப்பாரி வைக்கின்றார்கள். அல்லது கள்ள மெளனம் சாதிக்கின்றார்கள்.

விஸ்வரூபத்தை முன்வைத்து எழுப்பப்பட்ட அத்தனை கேள்விகளும் ‘மெட்ராஸ் கஃபே’க்கு கச்சிதமாகப் பொருந்திப்போகின்றன. அப்போது ஆம்! என்று சொன்னவர்கள் இப்போது "இல்லை" எனக் கூசாமல் பேசுகின்றனர்.

‘அதுவந்து அது…அதுக்கும் இதுக்கும் மெல்லிய வித்தியாசம் இருக்கு; அது அப்படி இது இப்படி இல்ல; அது வேற இது வேற இது வரலாற்றைத் திரிக்கும் செயல்’ என்று ஏதேதோ உளறுகிறார்கள். உடைந்த பானை ஒன்றுதான். அன்று மருமகள் கையிலிருந்து தவறியதால் அது பொன்குடம். இன்று போட்டுடைத்தது மாமியாரல்லவா.. அதனால் அது மண்குடம் அவ்வளவுதான்.

‘ஒரு திரைப்படத்தை சென்சார் அனுமதித்த பிறகு அதைத் தடை செய்யக் கோருவது எவ்வகையில் நியாயம். அப்போ சென்சாருக்கு என்ன வேலை?’ என்று கேள்வி எழுப்பியவர்கள் இப்போது சுய நினைவோடுதான் உள்ளார்களா..? ஆம் என்றால் சென்சார் அனுமதித்த மெட்ராஸ் கஃபே யைத் தடைசெய்யச் சொல்வது ஏன்?

‘ஒரு படத்தை திரையிட்டுப் பார்த்தபின்னர்தான் அது குறித்துப் பேசவேண்டும்.அதை வரவிடாமல் செய்தால் எப்படிக் கருத்துச் சொல்லமுடியும்?’ என்று குரலெழுப்பிய அறிவுஜீவிகள் இப்போது எங்கேதான் போய்விட்டார்கள்? மெட்ராஸ் கஃபே-யை ஓட்டிப்பார்த்துவிட்டுப் பேசுவோமா?

‘அண்டை மாநிலங்களில் விஸ்வரூபம் பிரச்னையில்லாமல் ஓடிக்கொண்டிருக்க தமிழகத்தில் மட்டும் அப்படி என்ன வாழுதாம்?’ என்று பேசியும், எழுதியும் வந்த ஞானவான்கள் இப்போது என்ன ஆனார்கள்? தமிழகத்தைத் தவிர மெட்ராஸ் கஃபே பிற மாநிலங்களில் ஓடிக்கொண்டுதானே இருக்கிறது…! ‘இது ஹிந்திப் படம் அது தமிழ்படம் அதனால…’ என்று உணர்ச்சிவசப்பட்டு உளறுபவர்களே.. ‘தலைவா’ என்ற திரைப்படம் பிற மாநிலங்களில் ஓடிக்கொண்டிருக்கும் போது தமிழகத்தின் திரையங்கக் கதவுகள் மூடிக் கிடந்தனவே… அய்யா.. கருத்துப் போர் மறவர்களே, எங்கே இருக்கின்றீர்கள் நீங்கள்?

‘கோடிக்கணக்கில் பணம்போட்டு விட்டு ஒரு திரைக்கலைஞன் இவ்வளவு நெருக்கடிக்கு ஆளாகும்போது நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது’ என்று கமலின் வீட்டிற்குப் படை எடுத்த தமிழ்த் திரையுலக நியாயவான்களே…விஜய் ஒரு திரைக்கலைஞன் இல்லையா? அல்லது தலைவா செலவே இல்லாமல் எடுக்கப்பட்டதா..? ‘வீட்டை விற்கப்போகிறேன். வேறு நாடு தேடிப்போவேன்’ என்று கமல் அளவுக்கு ஓவர் ஒப்பாரி இல்லை என்றாலும் விஜய் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கை கட்டி நின்று கலங்கியபோது உங்களுக்கு உரைக்கவில்லையா..?

‘படைப்புச்சுதந்திரம் ஒரு கலைஞனுக்கு வழங்கப்படவில்லை என்றால் எதை வைத்துத்தான் படம் எடுப்பது?’ இது நீங்கள் எழுப்பிய வினாதானே..! தலைவா வில் ஒற்றை வாசகத்தை நீக்கச் சொன்னபோது இந்தக் கேள்வியை மீண்டும் எழுப்பும் திராணி ஒருவருக்குக் கூடவா இல்லை..!

தனக்கு ஒரு சங்கடம் என்றதும் அழுதும், புலம்பியும், நடித்தும், துடித்தும், ஓயாது ஓடிய கமல் தலைவா விவகாரத்திலும் மெட்ராஸ் கஃபே விசயத்திலும் ஏதாவது மூச்சு விட்டாரா என்ன?

உலக நாயகனே…. இப்போது நடப்பதையும் கலாச்சார பயங்கரவாதம் என்று சொல்லலாமா…?

‘யாரங்கே வாய் திறப்பது.. நாம் வாய்திறந்தால் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் என்று ஆகிவிடாதா.. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஏணடா உளருகின்றீர்கள். மைண்ட் யுவர் பிஸ்னஸ் தமிழ் பீப்பிள்ஸ். வரட்டுமே மெட்ராஸ் கஃபே…’ என்று சொல்லுவதற்குப் பாரதிராஜா இருக்கின்றார்தானே… எங்கேதான் அவர்?

‘ஒரு படத்தைத் தடை செய்யக் கோருவதன் மூலம் அந்தப் படத்திற்கு நீங்களே விளம்பரம் தேடித் தந்துவிடுகின்றீர்கள் இல்லையா.. நீங்கள் அமைதியாக இருந்தால் அது வந்த இடமும் போன இடமும் தெரியாமலாகிவிடும்தானே’ என வினா எழுப்பிய தொலைக்காட்சித் தொகுப்பாள சிகாமணிகளே…இப்போதுகூட ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இதே கேள்வியைக் கேட்கலாம் இல்லையா…?

‘திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பில்லை என்பதற்காக ஒரு திரைப்படத்தையே தடைசெய்வது நியாயமா?’ என்றெல்லாம் அரசியல் விமர்சனம் பேசும் நடு நிலையாளர்களே…! தலைவா திரையிட்டால் திரையரங்குகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற இல்லாத மிரட்டல் எழுந்தபோது நீங்கள் ஆழ் நிலை தியானத்தில் அமிழ்ந்து கிடந்தீர்களா என்ன?’

‘இந்த பாய்மார்களே இப்படித்தான்..! என்ன இவர்களைப் பற்றி படம் எடுக்கவே கூடாதாக்கும். படம் எடுத்தா ஓட விடமாட்டாங்களாமே’ என பேருந்திலும், டீக்கடைகளிலும், கூடுமிடங்களிலெல்லாம் முணுமுணுத்துத் திரிந்த என் அப்பாவி பொதுஜனங்களே…! தலைவா படம் ஏன் தடை செய்யப்பட்டது? என்னதான் நடந்தது..? எதைத்தான் நீக்கித் தொலைத்தார்கள்? அது யாருக்கெதிரான வாசகம். அப்டியெல்லாம் சொன்னா குத்தமாயிடுமா…? எந்தக் கேள்வியுமே இல்லாமல் உங்களாலும் இருக்க முடிந்ததே எப்படி என் மகா ஜனங்களே….!

ஏன் இந்த மயான அமைதி? எதனால் இந்தக் கள்ள மெளனம்? எப்படி உருவானது இப்படியொரு நிசப்தம்? ஒரேயொரு காரணம்தான்.

இஸ்லாம் தொடர்பான விவகாரமென்றால் எல்லாருக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரி.

அன்று கமலுக்கு ஆதரவாகவா இவர்கள் பேசினார்கள்? கருத்துச் சுதந்திரத்திலா இவர்களுக்கு இவ்வளவு அக்கறை? இல்லவே இல்லை.

இஸ்லாத்தை இழிவு படுத்தியும், முஸ்லிம்களை தவறாகச் சித்திரித்தும் பேசுபவர்களுக்கு வக்காலத்துப் பேசியவர்கள் கருத்துச் சுதந்திரப் போர்வையைப் போர்த்திக் கொண்டார்கள் அவ்வளவே…!

தலைமை தாங்கும் நேரமிது என்று கமல் படம் எடுத்து அதற்கு ஒரு சிக்கல் என்றால் இதே கமலஹாசன் ‘நான் இந்த உலகத்தில் வாழவிரும்பல வேறு உலகம் தேடிப் போகிறேன்’ என்று கதறினாலும் அப்போதும் இதே மெளனம்தான் நிலவும். விஜய்க்கு ஏற்பட்ட அதே நிலைதான் கமலுக்கும்.

நாம் அடுத்தவனைத் தாக்கினால் அது கருத்துச் சுதந்திரம். நம்மை யாரவது தாக்கினால் அது வரலாற்றுத் திரிபு’ இது அமெரிக்க ஏகாதிபத்தியம் சொல்லித்தந்த இரட்டை நிலைச் சூத்திரம்.

இஸ்லாமியர்கள் குறித்த அவதூறுச் செய்தி தலைப்புச் செய்தியாக வரும். அது தவறான செய்தி என்ற உண்மைச் செய்தி பெட்டிச் செய்தியாய் எட்டாம் பக்க மூலையில் வரும். எப்போதாவது நிகழ்ந்தால் அது விபத்து. எப்போதும் இப்படியே நிகழ்ந்தால் அது சூழ்ச்சி. வன்மம். சதி. அதைத்தான் இந்தகைய மெளனங்கள் உலகிற்கு உரத்துச் சொல்கின்றன.

(வி.எஸ். முஹம்மது அமீன்)

நன்றி: சமரசம் 16-30 செப்டம்பர் 2013

Ref: http://www.satyamargam.com/articles/common/2215-freedoms-of-expression-biased-and-prejudiced.html

4 comments:

UNMAIKAL September 30, 2013 at 12:25 PM  

PART 1. தமிழ் மக்களை விரட்டியடிக்கும் பேரினவாத திட்டத்துக்கு இணங்க,

புலிகள் நடத்திய வெறியாட்டம் ஒழிய யுத்தமல்ல. - பி.இரயாகரன்


Saturday, 12 August 2006 20:31

யுத்தத்தின் பெயரில் நடந்தது இனவழிப்பே.

இதைப் புலிகள் தொடங்கி வைக்க, பேரினவாதம் முடித்துவைக்க முனைகின்றது.

உண்மையில் இரண்டு இராணுவங்கள் மோதவில்லை.

திருகோணமலையில் இருந்து தமிழ்மொழி பேசும் மக்களை விரட்டியடிக்கும் பேரினவாத திட்டத்துக்கு இணங்க,

புலிகள் நடத்திய வெறியாட்டம் தான் மூதூர்ச் சம்பவம்.

வெறும் முஸ்லீம் மக்களை மட்டுமல்ல,

தமிழ் மக்களையும் அந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கும் வகையில்,

அந்த மக்களை அந்த மண்ணில் சிறுபான்மை இனமாக்கும் வகையில்,

அவர்களின் சமூக பொருளாதார வாழ்வைச் சிதைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் தான்,

இந்த புலி வெறியாட்டம் நடாத்தப்பட்டது.

மக்கள் தமது வாழ்வை இழந்து, எல்லை கடந்து நாடோடிகளாகவே ஒடிக்கொண்டிருக்கின்றனர்.

யாரும் இவர்கள் எமது மக்கள் என்று கூறிக் கொண்டு, அவர்களைப் பாதுகாக்கக் கூட முனையவில்லை.

அண்மைக் காலத்தில் திருகோணமலையில் இருந்து தமிழ் மக்களை அகதியாக இந்தியாவுக்கு புலிகள் விரட்டிக் கொண்டிருந்தனர்.

அது நிறுத்தப்பட்ட நிலையில் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இன்று முதூர் தாக்குதல் மூலம் மறுபடியும் அந்த மக்களை எல்லை கடந்து ஓட விரட்டுகின்றனர்.

தமிழ், முஸ்லீம் மக்கள் தமது வாழ்வை புலிகளின் கொடூரமான புலிப் பசிக்கு இரையாக்கி வாழ்விழந்து நாடோடியாகின்றனர்.

இந்த புலிப் பின்னணியில் பேரினவாதமே வெற்றிகரமாக இலாபம் அடைகின்றது என்றால், புலிகளைக் குப்புற வீழ்த்தி வழிநடத்துபவர்கள் யார்?

எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்படும் புலிகளின் கடந்தகால நடடிவக்கைகளின் பின்னணியில், அன்னிய சக்திகளால் வழிகாட்டப்பட்ட வரலாறுகளை புலிகளே ஒத்துக்கொண்ட உண்மையின் அடிப்படையில், இதை இன்று நாம் ஏன் பார்க்கமுடியாது?

தண்ணீரை மூடுவதும், திறந்து விடுவதுமாக நடத்திய நாடகத்தின் பின்னணியில் தான் மூதூர் தாக்குதலை புலிகள் முன்கூட்டியே திட்டமிட்டனர்.

முஸ்லீம் மக்கள் மீதான புலிகள் திட்டமிட்டு நடத்திய வெறியாட்டத்தில் அண்ணளவாக 1000 பேரளவில் கொல்லப்பட்டனர்.

இதில் கணிசமான அளவுக்கு தமிழரும் அடங்குவர். மிக குறுகிய காலத்தில், மிக மோசமான ஒரு இனவெறியாட்டத்தை நாம் சமகாலத்தில் காணமுடியாது.

1983 இனக்கலவரத்துக்கு பிந்திய, அதேயொத்த ஒரு மக்கள் அழிவையும், பழிவாங்கலையும் ஏற்படுத்திய ஒரு காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கையாகும் இது.

மிகக் குறுகிய காலத்தில், மிகவும் திட்டமிட்ட வகையில், பாரிய படுகொலைகள் முதல் அந்த சமூகத்தின் இருப்பையே அழிக்கும் வண்ணம், அவர்களின் வாழ்விடங்களையே சிதைத்து அனைத்தையும் சின்னாபின்னமாக்கியுள்ளனர்.

அங்கு வாழ்ந்த மக்கள், மீண்டும் அங்கு சென்று வாழமுடியாத அளவுக்கு தொடர்ச்சியாகவே, கடுமையான ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.

புலிவெறியாட்டத்துக்கு புலம்பெயர்ந்த அகதிகள் மீண்டும் சொந்த பிரதேசத்துக்கு சென்று வாழமுடியாத அளவுக்கு, இனவழிப்பு எச்சரிக்கையை தொடர்ச்சியாக புலிகள் ஆணையில் வைத்துள்ளனர்.

குறிப்பாக இராணுவம் மற்றும் புலிகளின் வக்கிரமான வெறியாட்டத்துக்கு உள்ளாகிய வண்ணம் இப்பிரதேசம் உள்ளது. இப்பிரதேசம் சூனியப்பிரதேசமாக மாறி நிற்கின்றது.

பேய்களும், நாய்களும் தமது சொந்த வக்கிரத்தையே பூர்த்தி செய்கின்றன.

நீண்டகால நோக்கில் இதில் இலாபம் அடைவது நிச்சயமாக பேரினவாதம் தான்.

தமிழ்மொழி பேசும் மக்களின் இடப்பெயர்வுக்கு, தமிழ்; முஸ்லீம் என்ற பாகுபாட்டை பேரினவாதம் வேறுபடுத்துவது கிடையாது.

1995 இல் புலிகளின் நிர்பந்நத்தால் நடந்த யாழ் இடப்பெயர்வு கூட, மக்களை இந்தளவுக்கு சிதைத்து சின்னாபின்னமாகியது கிடையாது.

அந்த இடப்பெயர்வு குறுகிய கால அவகாசத்துடன் திட்டமிடப்பட்டதாக மாறியது.

யாழ் மீதான இராணுவப் படையெடுப்பின் போது கூட, இந்தளவுக்கு உயிர் அழிவும் மனித அவலமும் ஏற்பட்டது கிடையாது.

நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு, முஸ்லீம் மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் புலிகளால் நடாத்தப்பட்டது.

அந்தளவுக்கு முஸ்லீம் மக்கள் மீது புலிகள் நடத்திய மிலேச்சத்தனமான மன்னிக்க முடியாத இந்த தாக்குதல்,

அவர்களின் கடந்தகால நிகழ்கால முஸ்லீம் விரோத நடவடிக்கையின் மற்றொரு அங்கமாகத் தான் இதனை நிறைவேற்றினர்.

இந்தத் தாக்குதல் திட்டம் முன்கூட்டியது.


மே மாதம் இறுதியில் புலிகளின் மக்கள் அமைப்புகளின் பெயரில், எது நடக்கவுள்ளதோ அதை முன் கூட்டியே கூறி விடுத்த அச்சுறுத்தும் துண்டுபிரசுரம் சரி, 04.06.2006 வீரகேசரி பத்திரிகையில் வெளியான துரைரட்ணசிங்கம் எம்.பி மூதூர் பற்றி வெளியிட்ட குறிப்புகள் அனைத்தும் திடட்மிட்ட நடவடிக்கையின் ஒரு அம்சமாகும்.

இவை திடட்மிட்ட ஒரு இனவாத அழித்தொழிப்பு வெறியாட்ட நடவடிக்கைக்கு முன்னோடியான ஒரு சில சமிக்கையாகும்.



CONTINUED ….

UNMAIKAL September 30, 2013 at 12:32 PM  

PART 2 . தமிழ் மக்களை விரட்டியடிக்கும் பேரினவாத திட்டத்துக்கு இணங்க,

புலிகள் நடத்திய வெறியாட்டம் ஒழிய யுத்தமல்ல. - பி.இரயாகரன்

Saturday, 12 August 2006 20:31

புலிகள் இதை முஸ்லீம் மக்கள் மீதான வெறியாட்டமாக நடத்தி முடிக்க, இராணுவம் அதை மேலும் சுத்தமாக்கி வருகின்றது.

அத்துடன் இராணுவம் மேலும் ஒருபடி சென்று, போகிற போக்கில் இதற்குள் அனைத்தும் அமிழ்ந்து போகும் வண்ணம், இனச் சுத்திகரிப்பை நடத்துகின்றனர்;

மூதூரைக் கடந்த பிரதேசத்தில் இருந்தும் தமிழ் மக்கள விரட்டியடிக்கின்ற வகையில் ஒரு துடைத்தொழிப்பை இராணுவம் நடத்துகின்றது.

முஸ்லீம் மக்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியவராத ஒரு நிலையில், தமிழ் மக்களுக்கு என்ன நடக்கின்றது என்ற அவலமும் தெரியாது புதைந்து போகின்றது.

அந்தளவுக்கு தமிழ் ஊடகவியல் படுசேற்றில் புதைந்து மூச்சிழுக்கின்றது.

திருகோணமலையில் தமிழ்மொழி பேசுகின்ற முஸ்லீங்கள் தமிழர்கள், பூசாரிகளின் பேயாட்டத்துக்கு ஏற்ப குடியெழுப்பப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றனர்.


காயடிக்கப்பட்ட தேசியம் தனது மலட்டுத்தனத்தால் எதையும் உயிர்பிக்கும் ஆற்றலற்று வக்கிரமாகி பேயாட்டமாடுகின்றது.

முஸ்லீம் மக்களை தமிழ் மக்களின் ஒரு அங்கமாக காட்டியபடி நடத்தும் இதுபோன்ற தொடர் ஒடுக்குமுறைகள், முடிவின்றி நடக்கின்றது.

தமிழ் மக்களின் போராட்டத்தில் முஸ்லீம்கள் இலாபம் பெற முனைவதாக வக்கரித்து உறுமும் குறுந் தேசிய வக்கிரங்களை, சதா காதுகொடுத்து கேட்கின்றோம்.

அந்த மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான வெறியாட்டம், யாழ் முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தை விடவும் மிகமோசமான வகையில் மீண்டும் அரங்கேறியுள்ளது.

இதன் பின்பும் கூட, தமிழ் மக்களின் ஒரு அங்கம் தான் முஸ்லீம்கள் என்று கூறவும் கூட செய்கின்றனர்.


இராணுவம் மீதான தாக்குதல் என்ற பெயரில் புலிகள் நயவஞ்சகமாக தொடர்ச்சியாக நாடகமாடுகின்றனர்.

நாடகமாக நடத்தியது முஸ்லீம் மீதான அழித்தொழிப்புத் தான்.
கொல்லப்பட்ட முஸ்லீம் மக்கள் பற்றியோ, அவர்களின் அவலநிலையையிட்டு எந்தவிதமான அக்கறையுமற்ற வக்கிரமே தமிழ் ஊடகவியலில் அரங்கேறுகின்றன.

உண்மையில் மூதூரில் புலிகள் நடத்தியது, முஸ்லீம் வாழ்விடங்களை தாம் மட்டும் நாசமாக்கி அழிக்கும் வண்ணம் புலிகளின் நடவடிக்கைகள் அமையவில்லை.

மாறாக இராணுவத்தின் தாக்குதலிலும் முஸ்லீம் வாழ்விடங்கள் அழியும் வண்ணம் தாக்குதலை நகர்த்தினர்.

அதாவது இராணுவத்தைக் கொண்டு அழிக்கும் வண்ணம், தாக்குதல் வியூகம்

முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக இருந்தது.

இராணுவத் தாக்குதலை முஸ்லிம் குடியிருப்புகள் ஊடாக நகர்த்தி முழுமையாக மூதூரை நாசமாக்கி மக்களை கொன்று போட்டனர்.

இப்படி ஒரு இனஅழிப்பு யுத்தம், எமது இனவாத அரசியல் வரலாற்றில் முதன் முறையாக நடத்துள்ளது.


யார் தாக்குகின்றனர் என தெரியாத வகையில், குண்டு பொழிவுகளுக்கு இடையில் மூதூர் அழிக்கப்பட்டது.

யார் கொல்லுகின்றனர் என்று தெரியாத வண்ணம் கொலைகார நடத்தைகள் தூண்டப்பட்டது.

மக்களை பாதுகாப்பது, மக்களை விலத்தி தாக்குதலை நடத்துவது என்பதற்கு மாறாக, அதையே தேடிச் செய்வதே அரங்கேறியது.



இந்த நிலையில் பிரஞ்சு தன்னார்வ நிறுவன தொண்டர்களின் இனம் கடந்த மனிதாபிமான செயற்பாடுகள், புலிகளுக்கு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது.

புலிகளின் வழமையான பாணியில் பதிலடி எதிர்பார்க்கக் கூடியதுதான். அவர்கள் யாரால் கொல்லப்பட்டனர் என்ற பின்னனி மர்மமாக இருந்த போதும், இந்த செய்தி முதலில் வெளிவந்த காலம், முதல் முதலில்; இதை அறிவித்த ஊடகங்களின் பின்னணியால் ஊகங்கள் மேலும் சிக்கலுக்குள்ளாகின்றது.

இதை புலிகள் ஏன் செய்யமாட்டார்கள் என்று தர்க்க ரீதியாக கூற முடியாத அளவுக்கு, இது போன்ற கொலைகளை புலிகள் செய்வதில்லை என்று கூறுவதற்கு, எந்தத் தார்மிகப் பலத்தையும் கடந்த வரலாற்றில் நாம் காணமுடியாது.

அந்தளவுக்கு புலிகளிடம் அரசியல் நேர்மையும் கிடையாது.


புலிப் பாசிச குதர்க்கத்தையும், கொச்சைத்தனத்தையும் தாண்டி, இராணுவமும் இது போன்ற கொலை வெறியாட்டங்களை நாசுக்காகவே நடத்திவிடுவது சதா நிகழத்தான் செய்கின்றது.

எல்லாம் புலியாக முன்பு, கொலையே அரசியலாக முன்பு, ஒவ்வொரு கொலையும் யாரால் எதற்கு ஏன் செய்யப்பட்டது என்ற சந்தேகம் யாருக்கும் எழுந்ததில்லை.

ஆனால் இன்று அப்படி உறுதியாக கூறமுடியாத அளவுக்கு, கொலைக் கலாச்சாரமே தமிழ்தேசிய அரசியலாகிவிட்டது.

இன்று கொலைகளைச் செய்து உலகை தம்பக்கம் வென்றுவிட முடியும் என்ற நப்பாசையில் பல்லிளித்து ஆட்டம் போடுகின்றனர்.


CONTINUED ..

UNMAIKAL September 30, 2013 at 12:40 PM  

PART 3. தமிழ் மக்களை விரட்டியடிக்கும் பேரினவாத திட்டத்துக்கு இணங்க,

புலிகள் நடத்திய வெறியாட்டம் ஒழிய யுத்தமல்ல. - பி.இரயாகரன்

Saturday, 12 August 2006 20:31

ஈனத்தனமாக விகாரமான கொலைகளைச் செய்து, அதை படம்பிடித்து உலகுக்கு காட்டுவதன் மூலம், உலகத்தினை தம்பக்கம் வளைத்து தமக்கு சார்பாக மாற்றமுடியும் என்ற தமிழ் தேசிய அரசியல் இன்று அரங்கேறிவருகின்றது.

இந்த நிலையில் இந்தக் கொலையை தாம் செய்யவில்லை என்று இருதரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டுவதன் மூலம், இது போன்றவற்றை தாம் செய்வதாக மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் உண்மை என்பதே கத்தி முனையின் கீழ் அந்தரத்தில் தொங்கிவிடுகின்றது.

இந்தநிலையில் முஸ்லீம் மக்கள் அகதியாகி மூதூரில் பொதுவிடங்களில் தஞ்சம் கோரிய நிலையில், அனைத்து உதவியும் மறுக்கப்பட்டது.

குறைந்தபட்சம் தாமாக செயற்பட்டு இயங்க முனைந்த அடிப்படைகள் அனைத்தும் தடுக்கப்பட்டது. முன்னின்றவர்கள் கொல்லபட்டனர் அல்லது துரோகியாக காட்டி கடத்தப்பட்டனர்.

மக்கள் தாமாக முனைந்து தண்ணீர் குடிக்க முனைந்த போது கூட, புலிகளால் அனுமதி மறுக்கப்பட்டது.

இப்படி திட்டமிட்ட முறையில் உருவேற்றப்பட்ட முஸ்லீம் விரோத வெறியுடன் புகுந்த புலி இராணுவம், அந்த மக்களைக் குதறியது.
….
முஸ்லிம் மக்கள் விரோத உணர்வுடன் வெறியேற்றப்பட்டு நடத்திய வெறியாட்டம் ஒருபுறம் அரங்கேற, அதை தலையில் வைத்து நக்கிப் பிழைக்க ஆடுபவனின் முஸ்லீம் விரோத வக்கிரமோ கேவலமாக உலகெங்கும் அரங்கேறுகின்றது.

இதுவே பல உண்மைகளை பளிச்சென்று நிரூபித்துவிடுகின்றது.

முஸ்லீம் துரோகி பற்றியும், எட்டப்பர் பற்றியும் மூக்கால் அழுது புலம்பும் ஓட்டுண்ணிப் பினாமிகள், எடுப்பார் கைப்பிள்ளையாகி முன்வைக்கும் நியாயப்படுத்தல்கள் தம்மையறியாமலேயே நிர்வாணமாகி தலைவிரிகோலமாகி விடுகின்றது.

மூதூர் தாக்குதலை நியாயப்படுத்த, அதை முஸ்லீம் எட்டப்பர் மீதான தாக்குதலாக வாய் கூசாது உரைக்கின்றனர்.

சரி எட்டப்பர் இருந்தனர் என்று வைத்துக் கொள்வோம், அதற்காக ஒரு இனத்தையே சூறையாடுவது எப்படி நியாயமாகும்.

அதே நீங்கள் தானே, தமிழ் மக்கள் மத்தியில் எட்டப்பர் ஒழிப்பை 1986 முதலாக முடிவின்றி நாள் தோறும் நடத்துகின்றீர்களே.

அப்படிச் செய்யும் நீங்கள் தமிழனை துரோகிகள் ஏன் கூறுவதில்லை.

ஏன் அதை முஸ்லீம் மக்களுக்கு மட்டும் கூறுகின்றீர்கள்.

அடிவருடிகளாகி நக்கித் தின்னும் புலிப்பினாமிக் கூட்டம் இப்படி குரைத்தபடி, மனித அவலத்தின் மேல் சிலிர்த்து உறுமுகின்றனர்.

அதேநேரம் புலித்தலைவர்கள் தம்மை நல்லபிள்ளையாக காட்டிக் கொள்ள அறிக்கைகளை விடுகின்ற இன்றைய நிலையில்,

முஸ்லீம் மக்கள் மீதான பலிப்பும் அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும் என்ற வக்கிரத்தை, புலிகளின் பினாமிக் கும்பல் வசைபாடல் ஊடாக முன்வைக்கின்றது.

இதை எழுத்திலும் ஆபாசமாக கொட்டித் தீர்க்கின்றனர்.

ஆனால் புலித் தலைவர்கள் நரிவேஷம் போட்டு ஊளையிட்டுக் கொண்டு, தம்மைத் புனிதராகவே சதா உலகுக்கு காட்டிக் கொள்ள முனைகின்றனர்.

குறைந்தபட்சம் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் அரசியல் நேர்மை என்பதே இந்த புலித் தேசியத்துக்கு கிடையாது என்பதை சதா நிறுவிக் கொள்கின்றனர்.

முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிட்ட வெறியாட்டத்தை, இராணுவம் தாக்குதல் சாhந்ததாக காட்டுகின்ற வகையில் பல தளத்தில் பலரால் கருத்துரைக்கப்படுகின்றது.

இதில் புலியல்லாத தரப்பும், இதற்குள் தனது அரசியல் நேர்த்திக் கடனை நடத்துகின்றனர்.

இராணுவ வெற்றி தோல்வி பற்றி மயிர்புடுங்கும் வாதத் திறமை மூலம்,

தமிழ் மக்கள் மத்தியில் ஒரு இனத்துக்கு எதிரான பாரிய குற்றத்தை மூடிமறைத்து ஒரு வம்பு விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

புலிகள் நடத்திய வெறியாட்டம் முஸ்லீம் மக்கள் மீதானது என்ற உண்மையைக் கண்டு கொள்ளாத போக்கு, தமிழ் தரப்பு முழுவதும் இருட்டடிப்புக்குள்ளாகியுள்ளது.

மெதுவாக ஆனால் காலம் தாழ்த்தியே முஸ்லீம்கள் மீதான புலிகளின் வெறியாட்டமே உண்மையில் நடந்தது என்று ஓப்புக் கொள்ளும் முஸ்லீம் தலைமைகள், அதன் முழுமையான பரிணாமத்தில் மனித அவலத்தை வெளிக்கொண்டு வரமுடியாத அளவுக்கு திணறுகின்றனர்.

மறுபக்கத்தில் முஸ்லீம் மக்களின் எல்லையில்லாத அவலம் சார்ந்த அந்தக் கண்ணீர்க் கதைகளை மீறி, அவை சமூகத்துக்கு புலப்படாத வகையில் சூனியமாகின்றது.

புலிகளும் இராணுவமும் பரஸ்பரம் தொடங்குகின்ற யுத்தத்தை நோக்கி முன்முயற்சிகள், முஸ்லீம் மக்களின் அவலம் மழுங்கடிக்கும் வண்ணம் புதைசேற்றில் புதைக்கின்றது.

முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலுக்கு மறுபக்கத்தில், அங்கு வாழ்ந்த தமிழ் மக்களும் சிந்திச் சிதறி சின்னாபின்னமாகிவிட்டனர்.



continued ....

UNMAIKAL September 30, 2013 at 12:42 PM  

PART 4. தமிழ் மக்களை விரட்டியடிக்கும் பேரினவாத திட்டத்துக்கு இணங்க,

புலிகள் நடத்திய வெறியாட்டம் ஒழிய யுத்தமல்ல. - பி.இரயாகரன்



Saturday, 12 August 2006 20:31

பொதுவான தாக்குதலில் எதுவெல்லாம் முஸ்லீம் மக்களுக்கு நடந்ததோ, அது தமிழ் மக்களுக்கும் நடந்தது.

சொந்த வீட்டை இழந்து, தமது சொத்தை இழந்து, உற்றார் உறவினரை இழந்து, வீதிகள் தோறும் நாயாக அலைகின்றனர்.

உண்மையில் தமிழ் பிரதேசத்தில் தமிழ்மொழி பேசுவோரின் ஒரு குடிப்பெயர்வே நிகழ்ந்துள்ளது.

திட்டமிட்ட இனவாத சதியே இதன் பின் நிகழ்ந்துள்ளது.

திருகோணமலையில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வியலை இல்லாததாக்கும் வகையிலும்,

அவர்களை மேலும் சிறுபான்மை இனமாக மாற்றுகின்ற நடிவடிக்கையைத் தான்,

புலிகள் ஊடாக பேரினவாதம் நடத்தி முடித்துள்ளது.

பேரினவாதத்துக்கு இதை விட வேறு வடிவில் அந்த மக்களை வெற்றிகரமாக சிதைக்க முடியாது.

புலிகளைக் கொண்டு அதை சிதைக்கின்றனர்.

இது தான் பேரினவாத்தின் மிகத்திட்டமிட்ட அரசியல்;.

திருகோணமலை எப்படி சிங்கள இனவாதிகளின் ஆதிகத்துக்குள் சென்றது என்பதை,

அதாவது அவர்கள் எப்படி பெரும்பான்மை ஆனார்கள் என்ற வரலாற்று ஆய்வில்,

புலிகளின் குறித்த இனவொழிப்பு நடவடிக்கையும் காரணம் என்பதை இனி வரலாற்றில் யாரும் மறுக்கமுடியாது.

நடப்பது, நடந்து கொண்டிருப்பது வெறுமனே முஸ்லீம் மக்கள் மேல் மட்டுமல்ல,

தமிழ் மக்களும் திருகோணமலையை விட்டு ஒரு சில நாளில் தெரு நாயைப் போலே ஓட ஒட அடித்து விரடட்ப்படுகின்றனர்.

வாழவே வழியற்ற ஏழை எளிய மக்கள் தமது வாழ்வியலை இழக்க வைத்ததன் மூலம், திடட்மிட்டு அழித்தொழிக்கப்படுகின்றனர்.

முஸ்லீம் மக்களை புலிகள் முடிந்தவரை கொள்ளையிட்டனர்.

அவர்களின் வீட்டுச் சொத்துகளைக் கூட புலிகள் கடத்திச் சென்றனர்.

புலிகள் அங்கிருந்த வங்கிகளை மட்டும் கொள்ளையடிக்கவில்லை,

முடிந்தவரை மக்களையும் கொள்ளையடித்தனர்.


மொத்தத்தில் இதன் பின்னணியில் புலிகளை வழிநடத்துவதில், ஒரு அன்னிய சதி உள்ளது.

1985 இல் அநுராதபுரத்தில் சிங்கள மக்கள் மீதான புலியின் இனவெறித் தாக்குதலை,

அன்று தாம் செய்யவில்லை என்று மறுத்த புலிகள்,

பின்னாளில் இந்தியா கூறித்தான் நாம் செய்தோம் என்றனர்.

இதற்காக புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்று கூறினர்.

இதே போன்று புலிகளின் மூதூர் தாக்குதலின் பின், அதாவது இதை வழிநடத்துவதில், இனவாத சக்திகளுக்கும் அன்னிய சக்திகளுக்கும் தொடர்பு இருப்பதை மறுக்கமுடியாது.

அந்தளவுக்கு திருகோணமலையில் தமிழ் மொழி பேசும் இரண்டு இன மக்களையும் அடித்து விரட்டிய, விரட்டிவரும் தொடர் நிகழ்வுகள், மறுபடியும் இதை உணர்த்திவிடுகின்றது.

முஸ்லீம் மக்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்ய,

இராணுவம் அதைப் பயன்படுத்தி தமிழ் மக்களை திட்டமிட்டு இனச்சுத்திகரிப்பு செய்கின்றது.

நடந்ததும், நடப்பதும் திருகோணமலையை தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை அழித்தொழிக்கின்ற ஒரு நிகழ்ச்சியை புலிகள் திட்டமிட்டு தொடங்கி வைக்க,

அரசு அதை முடித்து வைக்க முனைகின்றது.

பி.இரயாகரன்
12.08.2006
நன்றி: தமிழ‌ரங்கம்..




SOURCE:http://tamilcircle.net/

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP