**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ஏமாற்றங்களுக்கு வழியேது? மனதின் கணக்கு வழக்கைப் பாருங்கள்.

>> Tuesday, June 1, 2010

மனசே மனசே மயக்கமென்ன ?

மனதின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டால்… ஏமாற்றங்களுக்கு வழியேது?
கராத்தேயின் முக்கிய நோக்கம், வெற்றியோ தோல்வியோ இல்லை. அந்தப் பயிற்சியின் மூலம் பண்படுவதுதான்.

லாப நஷ்டக் கணக்குப் பார்க்கும்போது நிறுவனத்தின் நிஜமான நிலை என்னவென்று தெளிவாகச் சொல்லிவிட முடிகிறது.

ஆனால், மனதை அப்படியெல்லாம துல்லியமாகக் கணிக்க முடிகிறதா என்ன?

மனதின் கணக்கு வழக்கைப் பாருங்கள். உற்சாகக் கணத்தில் சில நேரம் உச்சகட்ட லாபத்தைக் காட்டுகிறது. இன்னொரு சமயம் நஷ்டக் கணக்கில் போகிறது.

நம்முடைய மனம் பேசும் பாஷைகள் பல நேரங்களில் நமக்கே புரிவதில்லை.

மனதின் தேவை இன்னதென்று தெரிவதில்லை. ஏனெனில் உள்மனதில் எதிர்பார்ப்புகள் பலநேரம் நமக்கே புரியாத ரகசியமாய்த்தான் இருக்கிறது.

தனிமனித அளவில் நமக்கிருக்கும் உறவுகள், சமூகத்தில் நமக்கிருக்கும் உறவுகள் என்று அனைத்து வகை உறவுகள் குறித்தும் நமக்கென்று நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன.

முதலில் மற்றவர்களிடம் நம்முடைய மனம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறது என்று தெரிந்தால்தான், அவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்று நமக்குத் தெரியும்.

நம் மனம் எதிர்பார்ப்பவற்றை மூன்று அம்சங்களாகப் பிரித்திருக்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

முதல் எதிர்பார்ப்பு, பிறர் நம்மைத் தம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது. நன்கு யோசித்தால், குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் ஏதோவோர் இடத்தில், ஏதோவொரு விதத்தில் தனிமைப்படுத்தப்படுவதுண்டு.

தம்பிப் பாப்பாவைக் கொஞ்சுகிற பெற்றோர்கள், விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாத வீதித் தோழர்கள் என்று பலர் மூலமாகவும், நிராகரிப்பின் வலி, நம் மனதுக்குள் பதிவாகியிருக்கிறது.

இந்தப் பதிவு, நாம் வளர்ந்த பிறகு, தாழ்வு மனப்பான்மையாகத் தலையெடுக்கிறது. நம் தகுதிகளை நமக்கு நாமே திரும்பச் சொல்லி, இந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விலகுவது தான் இதற்கிருக்கிற ஒரே தீர்வு.

சமூகத்திடம் எங்கோ ஓரிடத்தில் நாம் பெறமுடியாத அங்கீகாரம், பல வருடங்களுக்குப் பிறகும் நம்மை உறுத்துகிறது என்று தர்க்க ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து மெல்ல மீண்டு வரவேண்டும்.

இரண்டாவது எதிர்பார்ப்பு, கட்டுப்பாடு. நம் எண்ணங்கள், செயல்கள் எல்லாம் நம்முடைய கட்டுப்பாட்டிலிருந்து சிறிது பிசகினாலும் கூட மனம் சோர்ந்து விடுகிறது. மெல்லிதாய் ஒரு குற்ற உணர்வு தலை காட்டுகிறது.

இந்தக் குற்றவுணர்வு சின்னச் சின்ன விஷயங்களில்கூட ஏற்படும். எப்போதும் இரண்டு முறை டீ சாப்பிடுகிறவர், என்றாவது மூன்று முறை சாப்பிட்டுவிட்டால் கூட, “சே! மனுஷனுக்குக் கட்டுப்பாடே இல்லை” என்று சலித்துக் கொள்வார்.இந்தக் கட்டுப்பாடு நல்லது.

வாகனங்களுக்கான வேகத்தடை போல் உதவக் கூடியது.

ஆனால், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் குற்றவுணர்வு கூடாது.

கொசுவை அடிப்பதெல்லாம் கொலைக் குற்றம் ஆகாது! எனவே, கட்டுப்பாடுகள் கூட நியாயமான அளவுகளில் இழக்கப்படுவதால் ஒன்றும் பெரிய தவறில்லை என்பது புரிய வேண்டும் நமக்கு.

மூன்றாவது எதிர்பார்ப்பு, அன்பு. பொதுவாகவே சமூகத்திலாகட்டும், நெருங்கிய வட்டங்களிலாகட்டும், நாம் பலர் மீது அன்பு செலுத்துவோம். அவர்களில் சிலர் நம்மை அலட்சியப்படுத்துவார்கள்.

அதே போல நம்மீது அன்பு காட்டும் சிலரைத் தெரிந்தோ தெரியாமலோ நாம் அலட்சியப்படுத்துவதும் உண்டு. இதுதான் யதார்த்தம்.

எனவே, நம் அன்பை நிராகரிப்பவர்களை நினைத்து நாம் வருந்துவதைக் காட்டிலும், நம் மீது உண்மையான அன்பு காட்ட ஒரே ஒரு ஜீவன் இருந்தாலும் அதை நினைத்துப் பெருமைப்பட வேண்டும்.

இன்னொரு மனிதரின் வாழ்க்கைக்கு நாம் வெளிச்சம் தர முடிந்தால் அதைவிட மகத்தான விஷயம் வாழ்க்கையில் வேறில்லை.

மனம் போகிற போக்குக்கெல்லாம் அதை விட்டுவிடவும் முடியாது.

அதை ஒரேயடியாக இழுத்துக் கட்டவும் கூடாது. விட்டுப் பிடித்துக் கொண்டிருந்தால் மனம், இன்னும் மகத்தான காரியங்களைச் செய்ய நமக்கு உதவியாய் இருக்கும்.

சர்வதேசப் புகழ்பெற்ற கராத்தே பள்ளி ஒன்றின் சுவற்றில் எழுதியிருந்தார்கள். கராத்தேயின் முக்கிய நோக்கம், வெற்றியோ தோல்வியோ இல்லை. அந்தப் பயிற்சியின் மூலம் மனிதன் பண்படுவதுதான்” என்று.

கராத்தே பயிற்சி மட்டுமல்ல. வாழ்வின் ஒவ்வொரு சம்பவமுமே நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.மனதின் தேவை தெரியும்போது, மயக்கம் தோன்றாது.

மனதின் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொண்டால்… ஏமாற்றங்களுக்கு வழியேது? -வே.கோபால்
************************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP