மனிதன் : ‘‘கடவுளே ஒரு சின்ன சந்தேகம்’’. கடவுள் : ‘‘சொல்லப்பா’’
>> Tuesday, May 6, 2008
மனிதன் : ‘‘கடவுளே ஒரு சின்ன சந்தேகம்’’
கடவுள் : ‘‘சொல்லப்பா’’
மனிதன் : உங்களைப் பொருத்தளவிற்கு ஒரு கோடி வருடம் என்பது என்ன?’’
கடவுள் : சும்மா, ஒரு நொடி போலத்தான்’’
மனிதன் : ‘‘உங்களைப் பொருத்தளவிற்கு ஒரு கோடி ரூபாய் என்பது என்ன?’’
கடவுள் : சும்மா ஒரு பைசா போலத்தான்’’
மனிதன் : ‘‘அப்படின்னா! ஒரு சின்ன உதவி, எனக்கு நீங்க செய்ய முடியுமா?’’
கடவுள் : ‘‘ம்... முடியும்.’’
மனிதன் : ‘‘எனக்கு, ஒரு பைசா கொடுங்கள்’’
கடவுள் : ‘‘ஒரு நொடி பொறுத்திரு’’
கடவுள் கடவுளாயிருப்பது அவரின் எளிமைத்துவத்தால் தான். ஒரு பைசாவும், ஒரு கோடி ரூபாயும் கடவுளுக்கு ஒன்றுதான்.
அந்த கடவுளுக்கு மனிதன் வாழும் பூமியே ஒரு சிறு புள்ளிதான்.
ஆனால், அதில் ஒரு புழுதி போல் இருக்கும் மனிதன்தான் மானப் பிரச்சனை, வரப்புச் சண்டை, எல்லையோரக் கலவரம் என சிறிதும் பெரிதுமாய் தன்னை சுற்றிச் நிகழ்பவற்றை பெரிதுபடுத்திப் பார்க்கிறான். சில நேரம் அது போரில் கூட கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
பலர் பேசும்போது, ‘‘நான் வாழ்க்கையில் படாத கஷ்டமில்லை. எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நேரக்கூடாது. இவ்வளவு தொல்லைகள் எனக்கு மட்டும் ஏன் வரவேண்டும்?’’ எனச் சொல்லிப் புலம்புவார்கள்.
இந்த நிலையிலிருக்கும் அன்பர்களுக்குச் சொல்லும் தீர்வு...
‘‘உலகம் ஒரு ஜோக் கிளப்.
வாழ்க்கை ஒரு ஜோக் சீரியல்.
நீங்கள் ஒரு ஜோக்கர்!’’
நீங்கள் ஒருஜோக்கர் என்ற உண்மை புரிந்து விட்டால், ஒரு முறை சிரித்து முடிப்பதற்குள் அடுத்த சிரிப்பு ஆரம்பித்துவிடும். வாழ்வு அவ்வளவு இனிமை தருவதாக இருக்கும்.
ஏதோவொரு வகையில் தன்னை பெரிய ஆளாக நினைக்கும் மனிதருக்குத்தான் வாழ்க்கையில் கஷ்டங்களையே அதிகம் சந்திக்கிறேன் என்ற உணர்வு பிறக்கும், கஷ்டப்படுவார்.
எறும்பின் கண்முன்னால் ஆடும் நூலின் அசைவானது எறும்பின் கண்ணுக்கு ஒரு அரசமரமே ஆடுவது போலத்தான் தோன்றும்.
கடுகளவு எறும்பு உடலுக்குள் இருந்து பார்க்கும் போது சிறு நூல் கூட பெரிதாய் தெரியும்.
மனிதன் என்ற பெரிய வட்டத்திலிருந்து பார்க்கும்போது தான், நூலைப் பார்த்து நடுங்கும் எறும்பின் செயல் நமக்கு சிரிப்பைத் தரும். மனிதன் என்னும் எண்ணம் கூட சிறு வட்டம்தான்.
இதையும் தாண்டும்போது தான் வாழ்வில் தொடர்ந்து நடக்கும் நகைச்சுவைகள் புரியவரும்.
ஒரு ஞானியின் வாழ்வில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவமிது. அவருடைய வீடு, பல பணக்காரர்கள் தந்த விலையுயர்ந்த பொருட்களால் நிரம்பியிருக்கும்.
ஊருக்கு வெளியே மலையடிவாரத்தில் அவர் தங்கியிருந்த வீட்டில் அவரைத் தவிர வேறு யாருமில்லை. அறையிலிருக்கும் கட்டிலில் படுத்தபடியே ஜன்னல் வழியே தெரிந்த நிலவைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.
சந்தடியில்லாமல் அறைக் கதவைத் திறந்த திருடன், சத்தமேயில்லாமல் அங்கிருந்த பொருட்கள் ஒவ்வொன்றையும் எடுத்து வெளியே இருக்கும் தன் கையாட்களிடம் தந்து கொண்டிருந்தான். தன்னைச்சுற்றி நடப்பது பற்றித் தெரிந்திருந்தும் ஞானி அதைக் கவனிக்காதவர் போல கண்களை மூடியே படுத்திருந்தார்.
எல்லாவற்றையும் திருடி முடித்த திருப்தியில் திருடன் அறைக் கதவை திறந்தான். அப்போது...
ஞானி, ‘‘அப்பா நில்லப்பா’’ என்றார் இனிமையான குரலில். எதிர்பாரா இந்த அழைப்பில் திருடன் நடுங்கிப் போனான்.
ஞானி, ‘‘இந்தக் கட்டிலை யார் எடுத்துப் போவார்களாம். இதையும் எடுத்துட்டுப் போப்பா!’’ என்றார்.
திருடனால் அங்கு நிகழ்வதை ஜீரணிக்கவே முடியவில்லை. இருந்தாலும் அதையும் எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
ஞானியின் வீட்டை விட்டு கொஞ்ச தூரம் சென்ற திருடனை ஞானி மீண்டும் அழைத்தார். ‘‘இந்தக் கம்பளியைப் போர்த்திக்கோ. வெளியே குளிர் அதிகமிருக்கும்’’ என தான் போர்த்தியிருந்த கம்பளியையும் தந்தார்.
கம்பளியை எடுத்துக் கொண்டு திருடன் இரண்டடி எடுத்து வைப்பதற்குள், ‘‘இந்தாப்பா, இதையும் எடுத்துச் செல்’’ என தான் உடுத்தியிருந்த உடைகளையும் அவனிடம் தந்துவிட்டு நிலவைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தார். உடைகளை எடுத்துக் கொண்டு அறையைவிட்டு வெளியேறும் போது திருடனின் காதில் விழுந்த ஞானியின் பேச்சு அவனை உலுக்கியது.,
‘‘ஒருவேளை என்னால் முடிந்திருந்தால் அந்த நிலவைக் கூட உனக்காய் திருடித் தந்திருப்பேன்.’’ என்ன செய்ய? நிலவை யாராலும் திருட முடியாது?’’ என இனிமையான குரலில் ஞானி சொன்ன வார்த்தைகள், திருடனின் மனதையே உருக்கியது.
ஞானி தன்னிடமிருப்பதையெல்லாம் தந்தபின்னும் இனிமையாகவே இருந்தார். ஆனந்தமாகவே இருந்தார். திருடன் எல்லாவற்றையும் பெற்றபின்னும் துக்கமாகவே இருந்தான். குதூகலமாகவோ, இனிமையாகவோ மாறவேயில்லை.
ஞானியின் இந்த நிலைக்குக் காரணம் அவரின் இனிமைத்துவம் தான்.
இனிமைத்துவத்தை மீட்டு எடுத்து வராதவர்கள்தான், தான் ஒரு தனி ஆள்! தான் ஒரு பெரிய ஆள்! என்ற கருத்துக்களை ஆழமாய்ப் பிடித்துக்கொண்டு, ஆனந்தத்தை நழுவ விட்டுக் கொண்டிருப்பார்கள்.
எனவே, மனிதனின் இனிமையைப் பறிக்கும் தனிமையுணர்வைத் தாண் டுங்கள்... நீர்த்துளியானது கடலைக் கண்டுபிடிப்பது போல, நீங்கள் கடவுளைக் கண்டுபிடிப்பீர்கள்.
மனித வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய ஜோக் என்பது அப்போது புரியும். முயன்று பாருங்கள்..
SOURCE: INTERNET.
0 comments:
Post a Comment