வஹாபிஸம் அடிப்படைவாதமாகுமா? யாருங்க இந்த வஹ்ஹாபி?
>> Saturday, April 13, 2013
இஸ்லாமியர்கள்; வஹ்ஹாபியர்கள்! என்று தங்களது வாயால் விஷத்தை கக்கி வருகின்றனர் சில விஷக் கிருமிகள்.
கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நிலவி வந்த கொடிய யுத்தம் ஓய்க்கப்பட்ட நிலையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத சக்திகள், காவிக் கர சேவகர்கள் வடிவில் உலா வந்துகொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம்கள் மோசடிக்காரர்கள்! சிங்களவர்களின் வருமானங்களை சூரையாடி அதை தீவிரவாத இயக்கங்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். அரேபியர்களிடமிருந்து பெருந்திரளான பணத்தை பெற்றுக்கொண்டு அதன் மூலம் பெரிய பெரிய பள்ளிவாசல்களை எழுப்பிக்கொண்டு அடிப்படைவாதத்தை இலங்கை மண்ணில் விதைத்து வருகின்றனர். இவர்கள் அடிப்படைவாதிகள்; கடும்போக்கு இஸ்லாமியர்கள்; வஹ்ஹாபியர்கள்! என்று தங்களது வாயால் விஷத்தை கக்கி வருகின்றனர் சில விஷக் கிருமிகள்.
இப்படி கடுமையாக, காரசாரமாக நம்மை அடிப்படைவாதிகள் என்று விமர்சிக்க அதை ஊடகங்களும் பரப்பித்திரிய பாமரர்களும் இதைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். அடிப்படைவாதம் என்றால் பயந்து போகும் அளவுக்கு பாரதூரமான கொள்கையா? இப்படி பரப்பித்திரிவோரிடம் யாராவது அடிப்படைவாதம் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பியிருப்பார்களா? என்றால் அது வினாக்குறியாகவே நின்றுவிடும்.
அடிப்படை வாதம் என்றால் என்ன?
அடிப்படைவாதிகள் என்று நம்மை விமர்சனம் செய்கிறார்களே இந்த விமர்சனம் சரியா? அடிப்படைவாதம் இந்த உலகை விட்டு அகற்ற வேண்டிய அளவுக்கு ஆபத்தான வாதமா? அடிப்படைவாதிகள் என்றால் யார்? அவர்களின் கொள்கை என்ன? அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நாம் அறிந்து கொண்டால் இது போன்ற விமர்சனங்களின் நிலையை நாம் அறிந்து கொள்ளலாம்.
எந்தவொரு கொள்கையைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவர் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையை அடிப்படையிலிருந்து கடைபிடித்து ஒழுகுவதுடன் அதில் எந்தவித வளைவு நெளிவும் இன்றி வாழ்வது அடிப்படைவாதம். அவ்வாறு வாழ்பவர் அடிப்படைவாதி!
இது மதங்களுக்கு மட்டும் உரித்தான சொல் அல்ல! மதத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தங்கள் அனைத்துக்கும் பொதுவானது.
ஒருவர் நாத்திகவாதத்தில் உறுதியாக இருந்து அதை அவர் ஏனையோருக்கு நாத்திகமே சரி என்று பிரச்சாரம் செய்தால் அவர் நாத்திக அடிப்படைவாதி. பாசிசவாதத்தில் உறுதியாயிருந்தால் அவர் பாசிச அடிப்படைவாதி. நாசிசத்தில் உறுதியாக இருந்தால் அவர் நாசிச அடிப்படை வாதி கம்யூனிசத்தில் உறுதியாயிருந்தால் அவர் கம்யூனிஸ அடிப்படைவாதி. புத்தமதத்தில் உறுதியாக இருந்தால் புத்த அடிப்படைவாதி!
இஸ்லாத்தைப் பொருத்தவரை திருக்குர்ஆனும் நபிவழியும் மாத்திரமே மார்க்க மூல ஆதாரங்கள். அதை விடுத்து வேறு எதையும் பின்பற்றக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருப்போரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று உலகம் விளிக்கின்றது.
ஒரு காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் மலிந்து கிடந்த தர்கா வழிபாடு, தாயத்து, தட்டு, கத்தம், பாத்திஹா போன்ற மூடநம்பிக்கைகள், கொடிய இணைவைப்பு காரியங்களை வளைகுடா நாட்டிலிருந்து ஒழித்துக்கட்டி, இஸ்லாமிய அடிப்படைகளை முஸ்லிம் மக்களிடம் தலைத்தோங்கச் செய்து ஒரு நல்ல ஆட்சியை கொண்டுவர முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் எனும் இஸ்லாமிய அறிஞர் கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இவரது கருத்துக்களுக்கு மாற்றமான கருத்தை கொண்ட வழிகெட்ட கூட்டத்தினர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கருத்துக்களை ஏற்றோரை வஹ்ஹாபிகள் என்று அழைக்கத்துவங்கினர்.
இதுபோன்ற பல தவறான விடயங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் வாழும் முஸ்லிம்களிடமும் மலிந்து காணப்படுகின்றன. இதை எதிர்த்து இலங்கையில் பிரச்சாரம் செய்வோரையும் வஹ்ஹாபிகள் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.
நாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபின் கருத்துக்கள் அனைத்தையும் ஏற்கவில்லை! அவர் சொன்னதில் குர்ஆன் சுன்னாவுக்கு உட்பட்ட சரியான விடயங்களை மட்டும்தான் சொல்கிறோம். அவர் சொன்னதாலோ அல்லது அவரது கருத்துக்களில் ஈர்க்கப்பட்டதாலோ தர்காக்களை ஒழிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் செய்யவில்லை! மாறாக அவர் சொன்ன விடயங்கள் குர்ஆனிலும் நபிவழியிலும் உள்ளன என்பதால் அதை பிரச்சாரம் செய்கிறோம். ஒரு வேளை இது போன்ற கொடிய இணைவப்புகளை அவர் ஆதரித்திருந்தால் அவரையும் சேர்த்தே நாம் விமர்சித்திருப்போம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த வஹ்ஹாபிசத்தை இஸ்லாமிய அடிப்படைவாதமாக சித்தரிக்க துவங்கியிருக்கிறார்கள். அடிப்படை வாதம் என்பதை மேலுள்ள இலக்கணத்தின் படி சொன்னால் நாம் அடிப்படைவாதிகள் என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம். இந்த இலக்கணத்தின் படி முஸ்லிம்கள் மட்டுமல்ல பௌத்தர்கள் கூட அவர்களின் மதத்தில் அடிப்படைவாதிகள்தான்!
ஆனால் இதற்கு மாற்றமாக தீவிரவாதம் போன்று சித்தரிப்பார்களானால் அது அவர்களது அடிமட்ட அறியாமையையே காட்டுகிறது.
வரலாற்றிலேயே முதன் முதலாக அடிப்படைவாதம் என்று சொல்லப்படும் Fundamentalism எனும் சொல் 1900ஆவது ஆண்டுகளில் அமெரிக்க புரோட்டஸ்ட்டன்டுகளுக்கு பாவிக்கப்பட்டது. அதன்பிறகுதான் இந்த சொல் இந்த உலகம் முழுவதும் பரவியது.
இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று சொல்லும் வஹ்ஹாபிசமோ 18ம் நூற்றாண்டில் பரவியது. அடிப்படைவாதம் என்ற சொல் வழக்கிற்கு வருவதற்கு முன்பிருந்தே வஹ்ஹாபிசம் உலகில் இருந்து வருகிறது. காலத்தால் முந்திய ஒன்றுக்கு காலத்தால் பிந்திய அர்த்தம் கற்பிப்பது எவ்வளவு பெரிய அறிவிலித்தனம் என்பதைக் கூடவா இந்த அதி மேதாவிகளுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை?
இது இவர்கள் எந்தளவுக்கு கடைந்தெடுத்த அறிவிலிகள் என்பதையே காட்டுகிறது.
இன்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் என்று கூவித்திரியும் சில புத்த பிட்சுகள் அக்மார்க் உண்மையான கருத்துப்படி அடிப்படைவாதிகள் என்பதை யாராலும் மறுக்க முடியாது! புத்தரின் போதனைகளை ஏற்று நடப்பதாக சொல்லிக்கொண்டு புத்தர் சொன்ன அதி உன்னத போதனைகளை பேணி போதிப்போராக தம்மை அடையாளங் காட்டிக்கொள்வோர் தாங்கள் புத்தர் சொன்ன விடயங்களை உறுதியாக நம்பவில்லையா? அதை பிரச்சாரம் செய்யவில்லையா?
இந்த உலகில் அன்பு ஒன்றே நித்தியமானது! அனைத்து அங்கிகளுக்கும் காரூண்யம் காட்ட வேண்டும் என்று ஜீவ காரூண்யம் பேசுவோர் அந்த கொள்கையில் உறுதியற்றுதான் இருக்கிறர்களா?
இந்த உலகில் உருவான, உருவாகியுள்ள அனைத்து இன்னல்களுக்கும் காரணம் மனிதனின் ஆசைதான். அந்த ஆசையை துறந்துவிட்டாலே உலகம் நல்ல நிலைக்கு வந்துவிடும் என்றும் அந்த ஆசையை துறக்க எட்டு விடயங்களை கடைபிடிக்க வேண்டும் என்ற புத்தரின் போதனைக்கேற்ப இந்த புத்த பிட்சுகள் செயற்படவில்லையா? அப்படியானால் இவர்களும் அடிப்படைவாதிகள்தானே…! அப்படியானால் இந்த புத்த பிட்சுகளும் ஆபத்தானவர்களா? இலங்கையை சின்னாபின்னமாக்கும் தீய கொள்கையைக் கொண்டவார்களா?
இந்த அடிப்படை வாதம் தவறா?
இஸ்லாமிய அடிப்படை கருத்துக்களை முஸ்லிம்கள் பின்பற்றி நடப்பது குற்றமா? இதனால் யாராவது நஷ்டமடைந்து விடப்போகிறார்களா? இதனால் தீவிரவாதம் வளர்ந்து நாடு சின்னாபின்னமாகிவிடுமா? ஒரு தவறுமற்ற ஒரு விடயத்தை எதற்காக தூக்கிப்பிடிக்க வேண்டும்? எதற்காக இன முரண்பாடுகளை தோற்றுவித்து அதில் குளிர்காய வேண்டும்?
ஒரு காலஸ்ட்ரோல் நோயுள்ளவரிடம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு உண்ணக் கூடாது. தினமும் காலையிலும் மாலையிலும் 2 கிலோமீட்டர் வாக்கிங் செல்ல வேண்டும்; உடலை வருத்தி வேலை செய்யுங்கள்; குறைவாக சாப்பிடுங்கள் என்று ஒரு வைத்தியர் ஆலோசனை சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
தனது உடல் நலத்தில் ஆரோக்கியமுள்ள அந்த நபர் இதை கடும் முயற்சி செய்து சரியாக பின்பற்றி நடந்து கொண்டு இருக்கும்போது அவரது நடவடிக்கையை பார்த்துவிட்டு இன்னுமொருவர் இவர் சரியான அடிப்படைவாதி! இவருக்கு சொல்லப்பட்டதை அப்படியே பின்பற்றுகிறார். இவர் (வைத்தியரது கருத்துக்களை ஏற்று அதில் உறுதியாய் இருப்பதால்) ஒரு வைத்தியவாதி! என்று விமர்சனம் செய்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது இந்த வாதம்.
இவ்வாறு விமர்சிப்பவர் அந் நபரின் செயற்பாட்டில் குறை காண, இவர் காலையில் எழுந்து ஓடுவதால் மக்கள் இவர் ஓடுவதை பார்த்து சுனாமி வருகிறதோ என்றஞ்சி அவர்களும் இவருக்கு பின்னால் ஓடுகிறார் என்று அளந்துவிட்டால் அது சரியாகுமா? (இவ்வாறு சொல்பவர்களை பைத்தியவாதி என்றுதான் நாம் சொல்ல வேண்டிவரும்.) இதை அறிவுள்ள எந்த மனிதாலும் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதை மாற்று மத சகோதரர்கள் சற்று நடுநிலையுடன் சிந்தித்துப் பார்த்தால் இந்த குற்றச்சாட்டிலுள்ள அபத்தமும் அறியாமையும் பளிச்சென்று தெரியும்
அப்படி இந்த அடிப்படைவாத முஸ்லிம்கள் இலங்கையில் என்ன தவறுகளை செய்கிறார்கள் என்று கேட்டால் அவர்கள் அளிக்கும் விளக்கம் தாங்கமுடியவில்லை! அந்தளவுக்கு அபத்தமிகுந்ததாய் இருக்கிறது.
இந்த அடிப்படைவாத முஸ்லிம்கள் சவூதியில் இருந்து பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு பெரிய அளவில் பள்ளிவாசல்களை கட்டிக்கொண்டு அடிப்படைவாதத்தைபோதித்து வருகிறார்கள் என்பதே அந்தக் குற்றச்சாட்டு! இதைக் கேட்கும்போது அவர்களை பார்த்து சிரிப்பதா? அல்லது அழுவதா என்று புரியவில்லை!
இது எவ்வாறு உள்ளது என்றால் மேலே சொன்ன அந்த காலஸ்ட்ரோல் நோயாளியின் எடுத்துக்காட்டையே எடுத்துக்கொள்வோம்.
குறித்த அந்நோயாளி தன்னைப்போலுள்ள ஏனைய காலஸ்ட்ரோல் நோயுள்ளோரைப்பார்த்து எனக்கு ஒரு வைத்தியர் இன்ன இன்ன ஆலோசனைகளை சொன்னார். அதை கடைபிடித்தால் எனது உடல் பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்னர் இருந்த குருதியமுக்கம் குறைந்து சீரான நிலைக்கு வந்துள்ளது. உடல் எடை குறைந்துள்ளது. நல்ல நிலையை உணர்கிறேன். அதை நீங்களும் கடைப்படித்துப்பாருங்கள். உங்களுக்கும் நல்ல பலனை நிச்சயம் தரும் என்று ஆலோசனை கூறுகிறார். இதை யாராவது தவறு என்பார்களா? அல்லது இதை பாராட்டுவார்களா?
இதுபோலத்தான் இந்த அடிப்படை வாதமும் அமைந்துள்ளது. மனித குலத்துக்கு ஒரு சிறந்த வழியை இஸ்லாம் கற்றுத் தருகிறது என்று நாம் அதை பின்பற்றுகிறோம். அதை எம்மளவில் மட்டும் வைத்துக் கொள்ளாமல் இந்த நல்ல வழியை ஏனைய முஸ்லிம்களையும் பின்பற்றச் சொல்லி போதனை செய்கிறோம். மாற்று மதத்தினருக்கும் எடுத்துச் சொல்கிறோம். அவர்கள் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட நல்ல விடயங்களின் பால் கவரப்பட்டு ஏற்று அவர்களும் முஸ்லிம்களாக வாழ முன்வருகிறனர். இது குற்றமாகுமா? இதில் ஏதாவது தவறு இருக்கிறதா?
நாம் என்ன ஆயுத முனையில் மக்களை மிரட்டியா இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றச் சொல்கிறோம்?
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சவூதியிலிருந்து பணம் பெறுகிறதா?
இதுபோன்ற அபத்தங்களை அறிவுக்கு பொருந்தாத வெற்றுக் கூச்சல்களை போடும் சிங்கள-பௌத்த பேரினவாத அமைப்புகளில் ஒன்றான பொது பல சேனா, சில அமைப்புகளை சுட்டிக்காட்டி இவர்கள்தான் பிரச்சினைக்குரிய அமைப்புகள்! இவர்கள் சவூதியிலிருந்து பணம் பெற்று பள்ளிவாசல்களை கட்டுகின்றனர் என்று ஒரு பட்டியல்போடுகின்றனர். அதில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தையும் சேர்த்தே குறிப்பிடுகின்றனர்.
இவர்களது ஆய்வுத்திறன் எந்தளவுக்கு உள்ளது என்பது இதன் மூலம் புலனாகிறது.
இந்த போலி குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முன் இன்னுமொரு விடயத்தை குறிப்பிட வேண்டியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து பணம் பெற்று நாட்டில் அடிப்படை வாதத்தை (?) தூண்டுகிறார்கள் என்று தூற்றித்திரியும் பொது பல சேனா என்ன செய்ய வேண்டும்?
தங்களது அனைத்து நடவடிக்கைகளுக்கும் பௌத்த சிங்கள மக்களிடமிருந்து நிதியுதவி பெற வேண்டும். அதுதான் நியாயம். ஆனால் என்ன செய்வது?
அண்மையில் காலி நகரில் பொது பல சேனாவுக்கு சொந்தமான ஒரு பௌத்த கேந்திர மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு ஜேர்மன் நிதி உதவி வழங்கியது.
ஜேர்மன் தற்போது இலங்கையில் புதிதாக சேர்க்கப்பட்ட மாகாணமா? அல்லது அந்த நாடு முழுக்க முழுக்க பௌத்த சிங்கள மக்கள் வாழும் பௌத்த நாடா? இவர்களுக்கு எப்படி ஜேர்மன் நிதி உதவி செய்யும்?
முஸ்லிம்கள் முஸ்லிம்களிடமிருந்ததான் நிதி பெறுகின்றனர். ஆனால் இவர்கள் கிறிஸ்தவர்களிடமிருந்து நிதி உதவி பெறுகின்றனர். வெளிநாட்டிலிருந்து நிதியைப்பெற்று பௌத்த கேந்திர நிலையம் அமைத்து தங்களது வாதத்தை பரப்பும் பொது (ஜேர்மன்) பல சேனா அப்பாவிகளாம்! வெளிநாட்டு முஸ்லிம்களிலிருந்து நிதியைப்பெற்று இஸ்லாமிய கேந்திர நிலையம் (பள்ளிவாசல்) அமைத்து தங்களது மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் முஸ்லிம்கள் அடிப்படைவாதிகளாம்; தீவிரவாதிகளாம்.! C மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பது போல்தான் இவர்களது வாதம் உள்ளது. இதில் எள்ளின் முனையளவு நியாயமிருக்கிறதா என்பதை சற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து முஸ்லிம்கள் பணம் பெறுவதால் இலங்கையின் இறைமை பாதிப்படைந்துவிட்டதா? அல்லது அதன் மூலம் முஸ்லிம்கள் பில்லியனராக மாறிவிட்டனரா? அவ்வாறு இருந்தால் இந்தக் குற்றச்சாட்டை சொல்லாம். மாறாக தங்களது வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுகிறது. வறிய மக்களுக்கு வாழ்வாதார வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. அனாதைகளை பராமரிக்க பயன்படுகிறது! இதில் என்ன தேசத்துரோகம் உண்டு?
புத்த விகாரைகளை இடித்துவிட்டா பள்ளிவாசல்கள் கட்டினார்கள்?
இவ்வாறு சில இஸ்லாமிய அமைப்புகள் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதிகளை பெற்று பள்ளிவாசல்களை நிர்மாணிக்கின்றனர் என்பது உண்மை! மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் எந்தவொரு நிதி நிருவனங்களிடமிருந்தோ அல்லது அரசாங்கமிடமிருந்தோ எந்தவொரு நிதி உதவியும் பெறுவது இல்லை! அதை தனது அமைப்பு விதியாகவே வைத்துக்கொண்டு செயற்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது இவ்வாறு பணம் பெறும் அமைப்புகளை விமர்சித்தும் வருகிது. காரணம் இதன் மூலம் அழைப்புப்பணி பின்தள்ளப்படுவதும் பல ஊழல் நடைபெறுவதும்தான்.
ஆனால் இந்த பொது பல சேனா அமைப்போ அதை ஓர் தேசத்துரோகம் போன்றும் இனவாதம் போன்றும் சுட்டிக்காட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கோணல் புத்தியும் குறுக்குப் பார்வையும்
இவர்களது இந்த இனத்துவேசத்தை மூடி மறைக்க தாங்கள் அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிரானவர்கள் அல்ல! மரபு முஸ்லிம்களை நாம் எதிர்க்கவில்லை! மாறாக சில அடிப்படைவாத (?) இஸ்லாமிய அமைப்புகளின் நடவடிக்கைகளைத்தான் நாம் எதிர்கிறோம் என்று கதைவிட்டுக்கொண்டு தப்பிக்க பார்க்கின்றனர்.
இவர்களது கூற்றில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் சொல்லும் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு எதிராகவே இவர்கள் நடக்க வேண்டும். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது?
இவர்கள் பிரதான பிரச்சினையாக தற்போது நாட்டில் ஏற்படுத்தியது ஹலால் பிரச்சினைதான். இந்த ஹலால் விடயத்தில் இவர்களால் குற்றம் சாட்டப்படும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வஹ்ஹாபிய அமைப்பா? அடிப்படைவாதிகள் மட்டும்தான் இந்த ஹலால் விடயத்தில் ஈடுபடுகின்றனரா?
தற்போது தயார் நிலையிலுள்ள அடுத்த பிரச்சினை முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப். இந்த ஹிஜாப் இலங்கையில் அடிப்படைவாதிகள் ஆரம்பித்துவைத்ததா?
முஸ்லிம்கள் செய்யும் கத்னாவையும் தடை செய்ய வேண்டுமாம். கத்னா முஸ்லிம் அடிப்படைவாதிகள் மட்டும்தான் செய்கின்றனரா? மரபு முஸ்லிம்கள் கத்னா செய்வதில்லையா?
இதன் மூலம் இவர்கள் எதிர்ப்பது இலங்கையிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும்தான்.
அதுமட்டுமல்ல அண்மையில் ஒரு பேரினவாத அமைப்பு மஹரகம நோலிமிட் ஆடையகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதே அந்த நோலிமிட் என்ன இஸ்லாமிய அடிப்படைவாதியின் வியாபார நிறுவனமா?
இதுபோல் இவர்களது மிலேச்சத்தனமான போக்கிரித்தனங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தினருக்கு எதிராக இருந்தும் கூட, நாம் அடிப்படைவாத வஹ்ஹாபியர்களைத்தான் எதிர்க்கிறோம் என்பது கடைந்தெடுத்த கயமைத்தனம் இல்லையா?
இலங்கை மக்களை் அனைவரையும் கூமுட்டையாக்கும் இந்த அறிவுக்கொளுந்துகள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே தாங்கள் மட்டும்தான் அறிவாளிகள் என்றா?
இதுவெல்லாம் இவர்கள் கோணல் புத்தியினால் பார்க்கும் குறுக்குப் பார்வையில்லையா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நிலைமை இவ்வாறு இருக்க இதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று பதில் சொல்லப் புகுந்த நமது முஸ்லிம் அரசியல் பெருந்தகை ஒருவர் இஸ்லாத்தில் அடிப்படைவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை! இஸ்லாம் நடுநிலையை சொல்கிறது என்று கூறியுள்ளார். எந்த ஒரு விடயத்தையும் அலசி ஆராயந்து ஆய்வு செய்து சொல்லும் தன்மை அறவே அற்ற இவர் தனது கூர்மையான (?) அறிவை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்லாத்தில் நடுநிலையை போதிக்கிறது என்று சொல்பவர் நடுநிலை என்றால் என்ன என்றாவது சொல்லியிருப்பாரா? அவ்வாறு விளக்காவிட்டால் நடைமுறையில் நடுநிலை என்று எதை மக்கள் கருதுவார்களோ அதைத்தானே இஸ்லாமும் சொல்கிறது என்று கருதுவர்.
இவர்கள் நடுநிலை என்றால் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்?
தான் முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு மார்க்கத்துக்கு முரணான விருந்துகளில் அரசியல் என்ற போர்வையில் கலந்து கொண்டு அன்னிய நாட்டு பெண்களோடு கலக்கல் குத்தாட்டம் போடுவதா? (இவ்வாறு கலக்கல் குத்தாட்டம் போட்டவர்தான் மேற்படி நடுநிலை விளக்கம் கொடுத்துள்ளார்)
அல்லது ஏதாவது ஒரு விடயத்துக்கு தீர்வு காண ஒன்று கூடும் போது குறித்த குறித்த விடயம் சரியா? தவறா? என்று கேட்கும் போது இந்த இரண்டில் எதைச் சொன்னாலும் நமக்கு இடைஞ்சல் வரும் என்று நடுநடுங்கி நான் நடுநிலை வகிக்கிறேன் என்று சொல்லி நழுவுவுதை இஸ்லாம் நடுநிலை என்கிறதா?
இஸ்லாம் சொல்லக் கூடிய நடுநிலையை விளக்குவது இக் கட்டுரையின் மையக் கரு அல்ல நடுநிலை என்பதை சுருக்கமாக சொல்வதானால் எந்த ஒரு விடயத்தியிலும் உண்மையின் பக்கம் சார்ந்திருப்பது நடுநிலை! எந்தவொரு விடயத்திலும் வரம்பு மீறாதிருப்பது நடுநிலை!
இந்த நடுநிலையைத்தான் இன்றைய அறிவுலகம் அடிப்படைவாதம் என்று விளிக்கிறது! அதை்தான் பொது பல சேனா போன்ற பொறாமை பிடித்த அமைப்புகள் தவறாக சித்தரித்து காட்டுகிறது என்பது மேற்படியாருக்குப் புரியாததால்தான் இப்படி கதை விட முடிகிறது. இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான இனப்பிரச்சினை வலுப்பெற்று வருவதற்கு இது போன்ற முதுகெலும்பற்ற முஸ்லிம் அரசியல் பெருந்தகைகளும் ஒரு காரணம் என்பது மிக்க வருத்தத்துக்குரியது.
இந்த குற்றச்சாட்டிற்கு என்ன காரணம்?
காலஸ்ட்ரோல் நோயிலிருந்து விடுபட கொழுப்புணவு வகையை விட்டு ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை ஒரு காலஸ்ட்ரோல் நோயிலிருந்து விடுபட்டவர் சொல்லும்போது அதை கேட்கும் ஹோட்டல் உரிமையாளர்கள் தனது பிழைப்பில் கை வைத்துவிட்டானே என்று சீறிப்பாய்வர். அவனை சீண்டிப் பார்ப்பர். வெளியுலக்க்கு பசப்பு வார்த்தைகளை காட்டுவர்.
அதுபோலத்தான் இஸ்லாத்தின் அற்புதக் கொள்கைகளால் கவரப்பட்டு பல பௌத்த மக்கள் சில பௌத்த துறவிகள் உட்பட இஸ்லாத்தில் நுழைகின்றனர்.
இஸ்லாத்தில் மதத்தின் பெயரால் எந்த சுரண்டலையும் செய்ய முடியாது! இம்மார்க்கத்தில் புரோகிதத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதும் இதன் சமத்துவமும் சரியான வழிமுறையும்தான் காரணம்.
இதைப் பொறுக்க முடியாத, இதன் மூலம் தங்களது பிழைப்பில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியால் ஏற்பட்ட கொதிப்பும் கொந்தளிப்பும்தான் முஸ்லிம்களுக்கெதிராக இதுபோன்ற துவேசப் பிரச்சாரத்தை மேற்கொள்ள காரணம். அதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் ,வஹ்ஹாபிசம் போன்ற கதையாடல்கள் கவசமாக உள்ளது.
முஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என்று சொல்வது வரவேற்கத்தக்கதா?
பொதுவாக எந்தவொரு நல்ல வார்த்தையாக இருந்தாலும் அதை பாராட்டும் நோக்கில் சொல்வதில் தவறு இல்லை. அதையே கிண்டல் பாணியிலோ அல்லது கேவலப்படுத்தம் பாணியிலோ பயன்படுத்துவதை தன்மானமுள்ள எந்தவொரு மனிதனும் சகித்துக் கொள்ள மாட்டான்.
உதாரணமாக ஒரு மாணவன் நன்கு படிக்கிறான் என்றால் அவனை நன்றாகப் படிப்பவன் என்று பாராட்டுவதில் தவறு இல்லை! மாறாக அவன் மீது உள்ள காழ்ப்புணர்வினால் இவன் நன்றாக படிக்கிறான் என்று வேறு பாணியில் சொல்வதை அவனால் சகிக்க முடியாது.
அதுபோலத்தான் இந்த அடிப்படை வாதி என்ற பட்டமும் அமைந்து இருக்கிறது.
அடிப்படைவாதிகள் என்பதன் கருத்து சரியாக இருந்தாலும் வரலாற்றில் அது ஒரு வேறு ஒரு முத்திரை குத்துவதற்குத்தான் பாவிக்கப்படுகிறது. இதனால் இந்த வாசகத்தை யாரும் ஏற்றுக்கொண்டதில்லை!
தற்போது இலங்கையில் பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் கூட தற்போது பௌத்த கடும்போக்கு வாதத்தை (அவர்கள் வாதப்படி அடிப்படைவாதத்தை) போதிக்கிறார்கள். இதனால் நமது பங்குக்கு அவர்களை பௌத்த அடிப்படை வாதிகள் என்று விமர்சித்தால் அவர்களால் சகிக்க முடியாது.
இதுபோன்றுதான் நமது நிலையுமுள்ளது.
அடிப்படைவாதிகள் என்று சொல்வது நம்மை பாரட்டுவதற்கல்ல! நம்மை தேசத்துரோகிகள் போன்றும் இனத்துவேசிகள் போன்றும் சித்தரிப்பதற்காகவே இவ்வாறு நம்மை விமர்சிக்கின்றனர் இதை ஒருக்காலும் அனுமதிக்க இயலாது.
இந்த வகையில் நம்மை அடிப்படைவாதிகள் என்று விமர்சனம் செய்தால் அது ஒரு கடைந்தெடுத்த அடிமுட்டாள்த்தனமான அறியாமை வாதம் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வஹாபிய தீவிரவாதம், வஹாபிய அடிப்படைவாதம் என்று கூச்சலிடுவோர் பற்றியும், வஹாபிசம் பற்றியும் மேலதிகமாக அறிந்து கொள்ள இங்கு க்லிக் செய்யவும். - இப்னு அப்துல்லாஹ்
SOURCE: http://rasminmisc.com/fundamentalism-and-islam/
1 comments:
சுட்டிகளை சொடுக்கி படிக்கவும்.
வஹாபிஸம். யாருங்க இந்த வஹ்ஹாபிகள்? பாகம் 1.
வஹாபிஸம். யாருங்க இந்த வஹ்ஹாபி.பாகம் 2
வஹாபிஸம். யாருங்க இந்த வஹ்ஹாபி இறுதி பாகம்
Post a Comment