நான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி பற்றி அறிஞர் அண்ணா. அவசியம் படிக்க.
>> Wednesday, September 7, 2011
நான் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமை இல்லை. “ அறிஞர் அண்ணா.
பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.
பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.
சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம்.
ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.
இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது.
ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.
பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.
இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.
தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.
இருளும் ஒளியும்
இங்கு எனக்கு முன்பு பேசிய தோழர்கள் எல்லோரும், நல்ல முறையிலே, இஸ்லாமிய கோட்பாடுகளையும், நபிகள் நாயகத்தின் மாண்புகளையும் எடுத்துரைத்தார்கள். இங்கு பேசியவர்கள் அனைவரும் இளைஞர்களாகவும், இந்த இளைஞர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களாகவும், இருந்தார்கள் என்பதையறிந்து நான் மூன்று காரணங்களால் மகிழ்ச்சியடைகிறேன்.
இஸ்லாமிய இளைஞர்கள் நல்ல முறையிலே பேசிப் பழகவேண்டும் என்பது என் ஆசை; அதன்படி, பேசிய இளைஞர் அனைவருமே நன்றாகப் பேசினார்கள்.
இரண்டாவதாக, இஸ்லாமியருக்கும்-தி.மு.கழகத்தித் தொடர்பு அதிகம் இருப்பதால் சில முஸ்லிம் பெரியவர்கள் பயப்படுகிறார்கள். “அது தவறு” என்பதை எடுத்துரைத்தார்கள்.
மூன்றாவதாக, இஸ்லாமிய இளைஞர்கள் முகம்மது நபியின் அருமை பெருமைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவன் நான்.
இங்கு பேசியவர்கள் முகம்மது நபியைப் பற்றி நல்ல முறையிலே, எல்லோருக்கும் புரியும் வகையிலே, நல்ல தமிழிலே எடுத்துரைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதிலே மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பேசிய நண்பர்கள் கூறினார்கள்- இந்த விழாவில் அண்ணா கலந்து கொள்ளலாமா என்று யாரோ சிலர் கேட்டதாக நினைத்துக் கொண்டு, அதற்கு பதிலளிக்கும் வகையிலே பேசினார்கள்.
இப்பொழுதெல்லாம் அப்படி கேட்பதில்லை. அதற்கு பதிலாக, “இவ்வாண்டு அண்ணாதுரை ஏன் கலந்து கொள்ளவில்லை?” என்று தான் கேட்கிறார்கள். ஒரு 20, 25ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார்கள் – முகம்மது நபி விழாவிலே அண்ணாதுரை கலந்து கொள்ளலாமா? என்று! ஆனால் இப்பொழுது கேட்பதில்லை.
எனக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட தொடர்பு இன்று நேற்றல்ல – 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது.
நண்பர் ஒருவர் இங்கு பேசுகையில் நான் வெளியூரில் ஒரு விழாவிலே கலந்து கொண்டபோது யாரோ என்னை ஒரு கேள்வி கேட்டதாகவும், அதற்கு நான் இன்ன விதத்தில் பதிலளித்தேன் என்று குறிப்பிட்டார். அதை உங்களிடத்திலே விளக்கமாகச் சொல்லுவதும் நல்லது என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டவருடைய பெயர் கூட எனக்கு நினைவிருக்கிறது.
“நீங்கள் இவ்வளவு நன்றாக முகம்மது நபியையும், இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் ஏன் இஸ்லாமியத்திலே சேர்ந்து விடக்கூடாது?” என்று அவர்கள் கேட்டார்கள்.
அவர்களுக்கு அளித்த பதில் இதுதான்: “இஸ்லாத்தில் மார்க்கக் கட்டளை என்றும், திட்டங்கள் என்றும் சில உண்டு.
இஸ்லாமிய சமுதாய அமைப்புக்கு ‘ஜமாஅத்’ என்று பெயர். இஸ்லாமிய கோட்பாடுகளை மார்க்கத் துறையை ஏற்று, அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஏக தெய்வம் என்ற கொள்கையுடையவர்களாக இருக்க வேண்டும்.
ஆண்டவனுக்கு உருவம் கொடுத்து, அதற்குப் பூசை செய்து பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது. அந்த வகையிலே பார்த்தால் நான் இஸ்லாமியன் தான். ஆனால் இஸ்லாமிய ‘ஜமாஅத்’திலே நான் இல்லை”.
நான் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமை இல்லை.
என்வீடு மிக நல்ல வீடு என்று நானே எடுத்துச் சொல்வது எப்படிச் சரியில்லையோ, அதைப் போலத்தான் அது அமையும். என் வீட்டைப் பற்றி நான் பெருமைப் படுவதிலே ஆச்சரியமில்லை, ‘ஜமாஅத்’திலே சேராமலே இஸ்லாத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்வதில் தான் பெருமை.
எனக்கு முன் பேசியவர்கள் எச்.ஜி.வெல்ஸ், ஜார்ஜ் பெர்னாட்ஷா, காந்தி போன்ற பெரியவர்கள் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளதை எடுத்துச் சொன்னார்கள்.
அந்தப் பெரியவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களானதால் அவர்கள் பாராட்டியதிலே பெருமை இருக்கிறது. எனவே, ஆயிரத்தோடு ஆயிரத்தொன்று என்று என்னையும் இஸ்லாமியனாக்குவதிலே பெருமையில்லை.
யார் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவரானாலும், எந்த இனத்தில்-குலத்தில் பிறந்தவரானாலும் நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசினால். இஸ்லாமிய சமூகத்தினர் வரவேற்கின்றனர்.
இந்நாட்டிலேயுள்ள இஸ்லாமியர்கள் சிறுபான்மையான மைனாரிட்டி சமூகமாக உள்ளவர்கள்; மற்றவர்கள் பெருவாரியான எண்ணிக்கையுள்ளவர்கள். இந்த இரு மார்க்கத்தாரிடையேயும் ஒற்றுமை நிலவ – அவர்களிடையே நல்ல தொடர்பும், சகோதரபாவமும் ஏற்பட இப்படிப்பட்ட திரு நாட்களை, பலரையும் அழைத்து நடத்துவது நல்லதாக அமையும்.
தென்னாட்டை பொறுத்த வரையில் இந்த ஒரு சமூகத்தாரிடையிலே என்றும் பகை ஏற்பட்டதில்லை. இரு சாராரிடையேயும் நல்ல தொடர்பு தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் பார்த்தால் அங்குள்ள முஸ்லிம்களும் மற்ற சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பி என்று முறை வைத்துப் பேசிக் கொள்வதைப் பார்க்கலாம்.
வடநாட்டிலே இந்து – முஸ்லிம் கலகம் கொலை வெறியாட்டம் நடந்த போது கூடத் தென்னாட்டில் நல்ல தோழமை நிலவியது. அப்படிப்பட்ட தோழமை உணர்ச்சியும் ஒற்றுமைப் பண்பாடும் வளரச் செய்வது தி.மு.கழகப்பணிகளில் ஒன்றாகும்.
நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அவர் பிறந்த நாடு, அவர் காலத்திலிருந்த சூழ்நிலை, மத நம்பிக்கைகள், பிற்போக்கான சீர்கேடான நிலை, மூடநம்பிக்கைகள், பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றிய துணுக்குகளை, நண்பர்கள் இங்கு உங்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
முகம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார்.
மிகுந்த நெருக்கடியான – ஆபத்தான காலத்திலேயே வெற்றிகரமாக தமது இலட்சியங்களை நிறைவேற்றிக் காட்டினார்.
அதே போல் தி.மு.கழகமும் மூன்று துறைகளில் பணியாற்றி வருகிறது; இதை நான் சொல்வதால் தி.மு.கழகத்தையும் இஸ்லாத்தையும் ஒன்றாக்கிக் காட்ட முயலுவதாகக் கருதவேண்டாம்!
ஏனென்றால், தி.மு.கழகம் இக்கருத்துக்களை விஞ்ஞானமும் கல்வியறிவும் நன்கு பரவியுள்ள இக்காலத்தில் சொல்லி வருகிறது. இந்தக் காலத்தில் நல்ல கொள்கைகளை எடுத்துச் சொல்ல அதிகத் தைரியம் தேவையில்லை.
நபிகள் நாயகம் அவர்களுடைய காலத்தில் சொல்ல வேண்டுமானால், நெஞ்சுரம் அதிகம் தேவையாக இருந்தது! “பூமி உருண்டையானது; சூரியனை பூமி சுற்றி வருகிறது” என்கின்ற உண்மைகளையெல்லாம் அறியாத – விஞ்ஞானத் தெளிவு இல்லாத காலம் அது!
மக்கள் பய உணர்ச்சியும் காட்டுமிராண்டித்தனமும் கொண்டிருந்த காலம்!
இருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முகம்மது நபி. அந்த ஒளியின் வெளிச்சத்தை எடுத்துக் காட்டிபவர்கள்தான் நாங்கள்.
சீர்திருத்தவாதிகள் செய்கின்ற காரியத்துக்கே இந்தக்காலத்தில் எத்தனையோ தொல்லைகள் ஏற்படும்போது, உலகத்தில் நபிகள் நாயகம் போன்றவர்கள் அந்தக் காலத்தில் எத்தனை இன்னல்களைத் தாங்க நேர்ந்திருக்கும்?
நம்மில் சிலர் நம் கொள்கைகளைப் பரப்ப அதைரியம் ஏற்படுகிற நேரத்தில் அவர்களுக்கு நபிகள் நாயகத்தினுடைய நினைவு வரவேண்டும்.
ஆரம்ப காலத்திலே முகம்மது நபியினுடைய கொள்கைகளை அங்குள்ள மக்கள் இலகுவிலே ஏற்றுக்கொண்டார்களா என்றால் இல்லை.
அரேபிய பாலைவனத்திலே வசித்த மக்கள் 360 உருவங்களை ஆண்டவர்களாக வைத்து ஒரு நாளைக்கு ஒன்றாக வணங்கி வந்தனர் என்று சொல்லப்படுகிறது.
அப்படிப்பட்ட மக்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் “360 உருவங்களும் ஆண்டவனல்ல” என்று எடுத்துச் சொல்ல எப்படிப்பட்ட ஆற்றல் படைத்தவராக இருந்திருக்க வேண்டும்; எப்படிப்பட்ட ஆபத்துக்களையெல்லாம் அவர் ஏற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்த்தால் நமக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்வதிலே ஏற்படக்கூடிய பயம் ஓரளவு நீங்கும்.
பொது வாழ்விலே உள்ள சந்தேகங்களையெல்லாம் நபிகளை நினைத்தால் பறக்கும். அவர் காலத்தில் ஏற்பட்ட ஆபத்துகளை நினைத்தால் இக்காலத்து ஆபத்துக்கள் வெறும் துரும்புக்குச் சமானம் ஆகும்.
நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று!சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு!
வேண்டாம் அற்புதங்கள்!
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார்.
யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். உடனே அவர் தானம் கொடுத்து விட்டாராம். அதன் பிறகே அவர் காட்டுவழியே செல்லுகையில் கள்வரிடம் சிக்கிக்கொண்டாராம். அந்தச் சமயத்தில், முன்பு தான் தானம் கொடுத்த கைத்தடியும் செருப்பும் வந்து, கள்வர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றினவாம்.
அந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஏனக்கு அருகிலிருந்த முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களிடம் இக்கதையைப் பற்றிக் கேட்டேன் – இந்தக் கதை குர்ஆனில் இருக்கிறதா? முஹம்மது நபி இதைச் சொல்லியிருக்கிறாரா? என்று. அதற்கு அவர் – அதெல்லாம் ஒன்றுமில்லை. குர்ஆனுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பிற்காலத்தில் யாராலோ கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை அது என்றார்.
அதன்பிறகு நான் பேசுகையில், இதைப்பற்றிக் குறிப்பிட்டு கட்டுக்கதை என்பதை விளக்கி, இப்படிப்பட்ட அற்புதங்களை காட்ட வேண்டுமென்பது ஐயன் கட்டலையல்ல என்பதையும் எடுத்துச் சொன்னேன்.
காயல்பட்டினத்து மக்கள் அதனாலே என்னை எதிர்க்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரபுக்கல்லூரி ஒன்றும் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பே அங்குள்ள மக்கள் நான் எடுத்துச் சொன்ன உண்மையை உணர்ந்தார்கள் என்றால், இன்று ஒப்ப மறுத்து விடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
இந்த நேரத்தில் இஸ்லாமிய சமூகத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்வேன்! அற்புதங்களைக் காட்டி, அதனாலே இஸ்லாம் சிறந்தது என்று நீங்கள் வாதாடினால் உங்களிடமுள்ள அற்புதங்களுக்கு அப்பன், பாட்டன் என்று சொல்லும்படியான அற்புதங்களெல்லாம், எங்களுடைய மதம் என்று வர்ணிக்கப்படும் இந்து மதத்திலே இருக்கின்றன.
உலகத்தில் இஸ்லாம் கடைசி வரை நிலைத்து நிற்கும் என்று ஜார்ஜ்பெர்னாட்ஷா கூறியதற்குக் காரணம், அந்த மதத்தில் அற்புதங்கள் குறைவு – அறிவுக் கருத்துக்கள் நிறைவு என்பதால்தான்!
அறிவுக்கொவ்வாத அற்புதக் கதைகள் இந்துக்களிடத்திலே ஏராளமுண்டு. நமது தாய்மார்களைக் கேட்டுப்பாருங்கள் பிரகலாதன் கதையை விடவா அற்புதக் கதை ஒன்று இருக்கிறது? என்பார்களே! அற்புதங்களை விற்பனை செய்தவர்களே நாங்கள் – அற்புதங்களின் பிறப்பிடமே நாங்கள் – என்று சொல்லிக்கொள்ளும்படியான எண்ணற்ற கதைகளை இந்துக்கள் எடுத்துச்சொல்வார்கள்!
எனவே, அற்புதங்களைக் காட்டி இஸ்லாமிய கொள்கைக்கு அருமை பெருமை தேடாதீர்கள்! நபிகள் நாயகத்தின் அஞ்சா நெஞ்சுருதியாலும், அவர் செய்த அறப்போரினாலும் தான் இஸ்லாம் பரவியது.
அடிக்கடி ஆண்டவன் அவதாரம் எடுக்காமலே இஸ்லாத்தில் அரிய கருப்பொருள்கள் ஏராளமாக இருக்கின்றன!
இஸ்லாத்தின் மாண்பைப் போற்றுவதற்குக் காரணம் அந்த மார்க்கதிலே “இதை நம்பு” என்று ஆண்டவனால் கட்டளை பிறப்பிக்கப்படவில்லை, காரணம் கூறுவதால் தான் நம்பப்படுகிறது.
சீனாவுக்குச் சென்றேனும் (தொலைவுகருதி) கல்வி கற்கவேண்டும் என்று அந்த மார்க்கத்திலே சொல்லப்படுகிறது.
இன்றைய இஸ்லாமியச் சமுதாயத்திலே பெரும்பாலோர் கல்வியறிவு பெறாமலிருக்கின்றனர். அந்த மார்க்கத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற கட்டளை – கருப்பொருள் – கல்வியறிவு பரப்பப்படவேண்டும்.
சொல்லும் செயலும்!
மதத்தைப் பற்றிச் சில பொதுவான கருத்துக்ளை கூற விரும்புகிறேன்.
யார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை. சற்று ஆராய வேண்டும்.
இன்றைய சூழ்நிலை என்ன, நல்ல தத்துவம் ஏன் நம்பிக்கை இழக்கிறது? ஆராயவேண்டும். யார் பேரிலோ பழிபோடுவதிலே பயனில்லை. நம்பிக்கை குறைவதற்குக் காரணம் என்ன?
கருத்துப் பரப்பும் இயந்திரம் பழுதுபட்டிருக்கிறது.
அச்சடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது, எட்டாம்பக்கத்தில் மட்டும் கொஞ்சம் எழுத்துப் படாமலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன?
அச்சுப்பொறியிலே பழுதா, அல்லது பழுத்துக்கோர்த்தவர் தவறா என்று பார்த்தால், எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அச்சடிக்கையில் எல்லாப் பக்கமும் பட்டு, எட்டாம் பக்கத்தில் மட்டும் கொஞ்சம் படவில்லை. அதற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆனாலும் பழுது எங்கே இருக்கிறது? அதைக் கண்டு பிடித்தால் தான் சரியாக அச்சாகும்.
இதற்கு யாரைக் கேட்பது? ஜோதிடரையா கேட்பது?
ஜோதிடரைக் கேட்டால் உனக்கு அஷ்டமத்திலே சனி. அதனாலே எட்டாம் பக்கம் அச்சாகவில்லை என்பார். அச்சுத் தொழில் நுணுக்கம் தெரிந்தவரிடம் சொன்னால், அவர் நன்கு ஆராய்ந்து பார்த்து விட்டுப் பிறகு சொல்லுவார் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அச்சுப்பொறியிலோ, அச்சுக்கோத்ததிலோ பழுதில்லை,
ஆனால் எட்டாம் பக்கம் அச்சாகும் இடத்தில் ஒரு நூலிழை எழுத்தின் உயரம் குறைந்திருக்கிறது. அதை உயர்த்தினால் சரியாக எழுதப்படும் என்று கூறி கையாலே எழுத்தைத் தடவிப் பார்க்கச் சொல்லுவார். தடவிப்பார்த்தால் அப்பொழுது நமக்கு உண்மை விளங்கும். அதைப் போல பழுது இருக்குமிடத்தைக் கண்டு பிடிக்கவேண்டும்.
மார்க்கத் துறையிலுள்ள தூய கருத்துக்கள் சரியான வழியில் சரியான நோக்கத்தில் பரப்பப்பட வேண்டும்.
கருத்தை உபதேசிப்பவர்கள் உபதேசித்தபடி நடந்து காட்ட வேண்டும். உபதேசிக்க என்று ஒரு கூட்டம், உபதேசித்தபடி நடப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கக்கூடாது.
நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார். அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.
சொல்லுபவர்கள் உயர்ந்தவர்களாகவும், நடப்பவர்கள் கீழ்த்தரத்திலுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
சமத்துவ மார்க்கம்
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது. முதுகுளத்தூரில் ஒருவர் தலையை ஒருவர் சீவிக்கொள்ளும் தேவர், தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது, இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது.
இதையெல்லாம் அறிந்து தான், எதையும் துருவித்துருவி ஆராயும் பண்பு படைத்த அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், ‘உலகில் கடைசிவரை நிலைத்திருக்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் ஒன்றுதான்’ என்று எழுதியிருக்கிறார்.
நபிகள் நாயகத்தை மகான் என்று ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால்,
1957 ஆம் ஆண்டில் சமுதாய ஒழிப்பு வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னால் எங்களை ஒடஒட விரட்டுகிறார்கள் என்றால்,
1400 ஆண்டுகளுக்கு முன்பு, பல்வேறு தெய்வங்களை வணங்கிய மக்களிடம் நீ வணங்கும் கடவுள் இதுவல்ல, நீ செல்ல வேண்டிய கோயில் இதுவல்ல என்று கூறியவரை விட்டு வைத்தார்களே அதுவும்,
அந்த மக்களிடம் தன் கொள்கையை நெஞ்சுறுதியோடு எடுத்துச் சொன்னதே அதுவும், அவரை ‘மகான்’ என்று கொண்டாடக்காரணம். இப்பொழுது நபிகள் கொடுத்த நெஞ்சுரம் தான் இப்பொழுது அவரது மார்க்கத்தைத் தழுவியிருப்பவர்களுக்கு இன்றும் இருக்கிறது என்றால் அது ஆச்சரியமில்லை.
மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது, மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது, மக்களை ஒற்றுமைப்படுத்துவது, அரிய பந்தங்களை ஏற்படுத்துவது, நல்ல தோழமையை வளர்ப்பது, சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. அது, ‘மதம்’ எனச் சொன்னால், அது மக்களை மதமதப்பில் ஆழ்த்தும், அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்க நெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்.
மதத்தின் பயன் எத்தகையதாக இருக்கவேண்டும் என்பது பற்றி நமக்குள் வேறுபாடு இருக்கலாம். ஆகையினாலே, யாராவது சிலர் நாஸ்திகர் என்றும், சிலர் ஆஸ்திகர் என்றும் கருதப்பட்டால் அந்தப்பட்டம் ஆஸ்திகர் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள்,
தங்களுக்கு அவர்களைப் பிடிக்காத காரணத்தால், அவர்களுக்கு இட்டப்பெயர்தானே தவிர வேறொன்றுமில்லை, அதைத் தவிர நாஸ்திகம் என்பது இருந்ததுமில்லை. இனி இருக்கவேண்டிய அவசியமுமில்லை.
அப்படி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை இப்புனித நாளில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஏனென்றால் ஆஸ்திகம் என்பது இயற்கை. இயற்கைக்கு மாறுபட்டு யாரும் இருக்கமாட்டார்கள்.
இஸ்லாம் மார்க்கத்தின் மாண்புகளை வேறுநாடுகளில் மேலேயிருப்பவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்வார்கள்.
ஆனால் நமது நாட்டில் அப்படியிக்கக்கூடாது. நமது நாட்டைப் பொறுத்த வரையில் கீழேயிருப்பவர்கள் தான் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்யவேண்டும்.
அப்பொழுது தான் கடவுள் தன்மையை எல்லோரும் அறிந்தவர்கள் ஆவார்கள்.
ஏன் அவ்வாறு சொல்கிறேன் என்றால்,
புகைவண்டி நிலையத்திலிருந்து நாம் குதிரை வண்டியில் வீடடு வருகிறோம், நாம் முதலில் இறங்கிவேண்டிய இடத்தைச் சொல்லி, வண்டிக்காரனிடம் வாடகை பேசுகிறோம். வண்டிக்காரன் நாம் குறிப்பிட்ட தூரம் வந்ததும் அவன் தான் நினைத்ததை விட தூரம் அதிகமாக இருப்பதாகக் கருதி வாடகையைக் கொஞ்சம் அதிகம் கேட்கிறான்.
அப்பொழுது பலர் இயற்கையாகவே என்ன கூறுகிறார்கள்? ‘ அப்பா கடவுளுக்குப் பொதுவாக நட!’ என்கிறார்கள். ஆனால் உண்மையாகவே அதிக தூரம் வந்து நாம் வாடகையைக் குறைத்துக் கொடுத்தால், அப்பொழுது அவன் ‘ஐயா கடவுளுக்கு பொதுவாக நடங்கள்’ என்றால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்? உங்களை மனதார எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்’ – கடவுளுக்குப் பொதுவாக’ என்பதை எத்தனை பேர் பின்பற்றுகிறோம்?
ஆகையினாலே தான், நமது நாட்டைப் பொறுத்தவரையில் கீழேயிருப்பவர்கள் மேலேயிருப்பவர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்கிறேன்.
மதத்தின் மார்க்கத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. ஆனால், மார்க்கம் நடைமுறையில் வரும்போது அது மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்குச் சுற்றுச் சார்பும், சூழ்நிலையும் அமைய வேண்டும். சூழ்நிலையை மனிதன் உண்டாக்குகிறான்.
ஆனால் சுற்றுச் சார்பு எப்படி இருக்கிறதோ, அப்படியே – அதன் வழியே செல்பவர்கள் கொஞ்சம் கூற்றுச் சார்பு அறிந்தவர்கள். ஆனால் சுற்றுச் சார்புக்கு மாறாற நாம் நடந்தால் தனக்குத் தீமையை அளிக்கும் என்பதைத் தெளிவாக அறிந்தும், கெட்டிருக்கின்ற சுற்றுச் சார்புகளை அழிந்து நல்ல சுற்றுச்சார்புகளை ஏற்படுத்துகிறானோ அவனைத் தான் ‘மகான்’ என்று சொல்லுகின்றோம்.
ஆனால் அவர்கள் எப்பொழுதும் நமக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர் நபிகள் நாயகம். அவரைப் போன்ற மகான்கள் நம்மிடையே அடிக்கடி தோன்றுவதில்லை.
ஆகையினால் அத்தகையவரின் சிறந்த கருத்துக்களை நாட்டில் பரப்ப நல்ல சுற்றுச் சார்புகள் உருவாக வேண்டும். சுற்றுச் சார்பு நல்லமுறையில் அமைய மக்களிடத்திலே நல்ல அறிவுத்தெளிவும், அத்தெளிவு ஏற்பட நல்ல கல்வி முறையும், நல்ல கல்விமுறை ஏற்பட நல்ல ஆட்சியும், நல்ல ஆட்சிமுறை ஏற்படுவதற்கு நல்ல ஆட்சியாளர்களும் வேண்டும். நல்ல ஆட்சியாளர்களை ஏற்படுத்த நல்லவர்களை வாழவிடவேண்டும்.
நபிகள் போதித்த இஸ்லாம் மார்க்கம் வைரம் போன்றது. நல்ல வைரத்தைப் பட்டைதீட்டி, அதைக் கையிலே மோதிரமாகவும் செய்து போட்டுக்கொள்ளலாம்.
காதில் கடுக்கனாகவும் அணிந்து கொள்ளலாம். அதே வைரத்தை விற்று, கிண்டி குதிரைப்பந்தயத்தில் வைத்தும் ஆடலாம்.
ஆனால் வைரத்தைப் பயன்படுத்துவதிலிருந்து தான், அந்தப் பயனின் தரத்தை அறிந்துகொள்ள முடியும். ஆதைப் போல இஸ்லாம் மார்க்கம் என்ற வைரம் யாருக்கு, எந்த இடத்ததிலே, எப்படி பயன்படுகிறது என்பதிலே தான் அதன் மாண்பு உணரப்படும்.
இதை எண்ணும் போது நல்லவர்கள் கிடைப்பது என்பது கூட எளிதாகி விடும். ஆனால் அவர்கள் சொல்லி சென்ற கருத்துக்களை பயன்படுத்துவதிலே தான் மதிப்பு உயரும்.
இஸ்லாத்தின் உயர்ந்த மாக்கம் இன்று யாருக்கு பயன்படுகிறது?
இதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஆதிக்கக் காரர்களுக்குப் பயன்படுமானால், ஏழையை ஐயோ என்று கதற வைப்பவர்களுக்குப் பயன்படுமானால் அதில் இந்த உயரிய மார்க்கத்தின் பலன் இல்லை.
இவ்வுயரிய மார்க்கம் அக்கிரமத்தை அழிக்கப்பயன்படவேண்டும். உலகத்தில் நல்ல தோழமையை உண்டாக்குவதற்குப் பயன்படவேண்டும். என்றைக்கு இந்நோக்கங்களுக்கு இம்மார்க்கம் பயன்படுகிறதோ அன்றைக்குத் தான் மார்க்கத்தின் முழுப்பலன்களை அடைய முடியும்.
திருத்தொண்டு
கடவுள் தத்துவத்தை யார் யார் பயன்படுத்துகிறார்கள், எப்பொழுது பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆராய வேண்டும். எதையும் கண்டு மருளவோ, மயங்கவோ அச்சப்படவோ கூடாது.
யார் என்ன சொன்னாலும், எவர் எப்படி ஆராய்ந்தாலும் அத்தனையையும் தாண்டி ஒரு மார்க்கம் இருக்குமானால் அது தான் நிலைத்து நிற்க முடியும்.
சாமான்யர்களின் பேச்சுக்கே ஒரு மதம் நிற்காது என்றால் என்ன அர்த்தம்?
நல்ல பொன் என்றால் அது எத்தனை முறை உரைத்துப் பார்த்தாலும் மாற்றுக் குறையாது நிற்கும். அதைப் போல இஸ்லாமிய மார்க்கம் யாரால் எப்படி எப்படி ஆராயப்பட்டாலும் நிற்கிறது.
எனவே எங்களை இந்த விழாவுக்குத் துணிவுடன் அழைத்துப் பேசச் செய்கிறார்கள்.
வேண்டுமானால் நவாராத்திரி விழாவுக்கு எங்களைக் கூப்பிட்டுப் பார்க்கட்டுமே! அதற்குத் தைரியம் இருக்கவேண்டும். இதை நீ யார் நிறுத்துப்பார்க்க என்று கூறக்கூடாது. யார் நிறுத்தாலும் எடை சரியாக இருந்தால் தான் அது சரியானதாக இருக்க முடியும்.
சிறந்த மார்க்கம்
இஸ்லாத்தின் உரிய பண்புகள் இதற்கு முன் உலகுக்கு எவ்வளவு அவசரமாகத் தேவைப்பட்டதோ அதைவிட இப்பொழுது தத்துவக் காட்டுக்குள் ஒளி தேடி அலையும் இந்த உலகுக்கு மிக அவசரமாகத் தேவைப்படுகின்றன.
இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல. ஒரு சிறந்த மார்க்கம். இஸ்லாமிய மார்க்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடுகிறார்கள்.
இஸ்லாமிய மார்க்கம் சிறந்ததொரு மார்க்கமாக இருப்பதால் உலகில் உள்ள பெருங்குணவான்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகக் கொள்ளாமல் ஒரு மார்க்கமாகவே கருதுகின்றனர்.
நான் மதத்தைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துக்கும் இங்கு நடைபெறும் நபிகள் நாயகம் விழாவிற்கும் முரண்பாடு இல்லை. இஸ்லாத்தை ஒரு மார்க்கமாகக் கருதி நான் இவ்விழாக்களில் கலந்து கொள்கிறேன்.
இஸ்லாமிய மார்க்கம் ஏன் சிறந்ததெனப் போற்றப்படுகிறதென்றால், மனிதனுக்கு என்னென்ன ஐயப்பாடுகள் ஏற்படுகின்றனவோ அதையெல்லாம் நீக்கக் கூடிய வகையில் அதில் நல்ல கொள்கைள் இருக்கின்றன.
நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, “ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது” என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.
ஏன் நான் இந்தப் போதனையைச் சிறப்பாகக் கூறுகிறேன் என்றால், இப்போதனை மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. “ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது. ஏன் இணை வைத்தல் ஆகாது? ஆண்டவன் எப்படி இருக்கக் கூடும்? என்றெல்லாம் சிந்தனைக்கு வேலை கொடுத்து ஆண்டவன் இப்படியிருக்கக்கூடும் என்று சிந்தனை முடிவடைவதில்லை.
எனவேதான், பழந்தமிழர் மக்கள் “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்”. “பார்த்தவர் சொன்னதில்லை. சொன்னவர் பார்த்ததில்லை” என்று கூறியிருக்கிறார்கள்.
கடவுள் தன்மையின் தத்துவமே இதுதான். ஆண்டவனுக்கு இணை வைத்தால் ஆண்டவனுக்கு முன் ஒருவரை வைக்க வேண்டும்.
அந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும்? யாருக்குத் தெரியும்! அதனால்தான் ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது என்ற போதனையை நபிகள் நாயகம் கூறியிருக்கின்றார். மற்ற மார்க்கத்தில் இணைவைத்துக் கூறிய காரணத்தால்தான், எங்களைப் போன்றவர்களுக்கு ஏராளமான மாற்சரியங்கள் தோன்றின.
கடவுள் தூதரை அனுப்பியதற்குக் காரணம், தன்னை நேரடியாக “நான்தான்” கடவுள் என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும்.
ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், “நான் அனுப்பியதாகச் சொல்லு!” சொன்னால்தான், மக்கள் “கடவுள்தான் அனுப்பினாரா?” என்று சிந்தித்துப் பார்ப்பார்கள், எண்ணிப் பார்ப்பார்கள் என்று.
ஒன்றே குலம், ஒருவனே தேவன்
தத்துவக் காட்டிலே சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக இஸ்லாத்தை நாங்கள் கருதுகிறோம்.
மதம் என்று சாதாரணமாக உணரப்படுவதை போன்றதல்ல இஸ்லாமிய மதம். எனவே இஸ்லாத்திலுள்ள மேலோர் இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர்.
இஸ்லாத்திலுள்ள ஒளியும், அந்த ஒளியிலுள்ள மாண்பும் வரவேற்கத்தக்கது.
மனித சிந்தனை வளர்ச்சியுறாத காலத்திலே மனிதர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்கவே தூதர்கள் தோன்றினார்கள். நபிகள் நாயகம் இறுதி நபியாகத் தோன்றியதால் அவர்களுக்கு பின்னரும் பலர் நானும் நபிதான் என்று சொல்லி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முடியவில்லை.
ஆண்டவன் மனிதனுக்குச் சிந்தனையை அருளியதே அவனுடைய தன்மையை அறிந்து கொள்ளத்தான்.
இஸ்லாத்திலே இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது. என்று கூறப்பட்டிருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் ஆண்டவனுக்கு ஒன்றை இணைவைப்பது என்றால் அதைப் பற்றி முன்னரே அறிந்திருக்கவேண்டும்.
ஆண்டவனுக்கு இணைவைப்பதால் தான், அவனைக்காட்ட எட்டணா தரகு வேலையும் ஆரம்பமாகிறது. இஸ்லாமிய மார்க்கம், மனிதனைப் பூரண மனிதனாக்கத்தக்க மார்க்கமாய் விளங்குகிறது.
ஆண்டவன் தானாகத் தோன்றி உபதேசிக்காமல் தூதர்களை அனுப்பியதேன் என்றால் மனிதர்களுக்கு வெறும் நம்பிக்கையை யூட்டுவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஐயங்களைத் தெளிவாக்கி அவர்கள் பின்பற்றுவதற்கு வழிகாட்டிகளாகவே அனுப்பியிருக்கிறான்.
இஸ்லாமிய மார்க்கம் கூறும் ஆண்டவன் தான், உருவத்திற்குள்ளே தன்னை அடக்கிக்கொள்ளாத ஆண்டவனாக இருக்கிறான். அந்த ஆண்டவனும் சிந்தித்து உணரத் தூண்டுகிறான்.
இஸ்லாத்தின் மிகச்சிறந்த மாண்பு அதன் சமுதாய அமைப்பாகும்.
சாதிப் பீடையை அது ஒழித்துக்கட்டுவதாகும்.
முதுகுளத்தூரிலே இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும் தேவரும் அப்துல்சத்தாராகவோ, அப்துல் சமதாகவோ மாறிவிட்டால் இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.
இம்மாதிரியான கூட்டங்களிலே இஸ்லாமிய வரலாறு அறிந்தோர் வாயிலாக நபிகள் நாயகத்தின் வீர வரலாற்றை கேட்க விரும்புகிறேன்.
ஏங்களைப் போன்றோரைப் பேசச் செய்து, இஸ்லாத்தைப் பற்றிய எங்கள் ஞானத்தைச் சோதிப்பதைவிட எங்களைப் போன்றோரை கூட்டிவைத்து இஸ்லாமிய தத்துவ விளக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
காட்டுமிராண்டி காலமான அக்காலத்தில் 1400 ஆண்டுகளுக்கு முன்னே நபிகள் நாயகம் அவர்கள் தன்னந்ததனியாக அக்காலத்து மக்கள் வணங்கிய தெய்வங்கள் பொய்யானவை என்றும்
அவர்கள் சென்று வழிபட்டக் கோவில், இறைவனின் உண்மையான உறைவிடமல்ல என்றும் எடுத்துக்கூறித் திருத்தினார்கள் என்றால் அதற்காகவாவது சுயமரியாதைக்காரர்கள் அவரை மகான் என்று கொண்டாடுவார்கள்.
அக்கால மக்கள் ஈடுபட்டிருந்த கோட்பாடுகளையெல்லாம் இடித்துரைக்க எவ்வளவோ நெஞ்சுரம் வேண்டும். நபிகள் நாயகத்தின் நெஞ்சுரம் இறுதி வரையிலே கொஞ்சமும் மாறாததாக இருந்தது. அது மாத்திரமல்ல.
அந்த நெஞ்சுரத்தை இஸ்லாமியருடைய பரம்பரைச் சொத்தாக அவர்கள் விட்டு சென்றுள்ளார்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நெறி தழிழ்நாட்டில் பரவி இருந்தது.
ஆனால் பாதகர்களாலும் காதகர்களாலும் அந்த நெறி மறைக்கப்பட்டிருந்த நேரத்தில் இஸ்லாம் அந்த நெறியை எடுத்துரைத்தது. எனவே காணாமல் போன குழந்தையைத் தாய்ப்பாசத்துடன் கட்டிணைப்பதைப் போன்றே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.
இதைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்.
மார்க்கத்தைப் பயன்படுத்துவதைப் பொறுத்து அதன் மாண்பும் உணரப்படுகிறது.
இஸ்லாம் சிறந்த மார்க்கம். அது உலகத்தில், அக்கரமத்தையும் அநியாயத்தை அடக்கப் பாடுபடவேண்டும்.
மேலே இருப்பவர்கள் கீழே இருப்பவர்களுக்கு உபதேசிப்பதாக மார்க்கம் இருந்து வருகிறது. கீழே உள்ளவர்களால் மேலே உள்ளவர்களுக்கும் உபதேசிப்பதாக மார்க்கம் இருக்கவேண்டும்.
பிறரிடமிருந்து பணம் பறிக்கவோ, பேரம் பேசிப் பயனடையவோ அன்றி, அக்கரமத்தை ஒழிக்க, மக்களிடையே அன்பை வளர்க்க மார்க்கம் பயன்படவேண்டும்.
எங்களை நாஸ்திகர்கள் எனக்குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் உருவமற்ற ஒரு தெய்வத்தை நாங்கள் என்றும் மறந்ததில்லை.
ஆஸ்திகர்கள் எனத் தன்மைத் தாமே அழைத்துக் கொள்வோர் தங்களுக்குப் பிடிக்காதவர்களுக்குச் சூட்டிய பட்டம் தான் ‘நாஸ்திகர்கள்’ என்பது உண்மையிலேயே உலகத்தில் நாஸ்திகள் என ஒரு கூட்டத்தார் இருந்ததில்லை. அப்படி ஒருவேளை இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்களல்ல.
ஆண்டவனை ஐயப்படும் அளவுக்கு ஈனப்பிறவிகளாக அந்த ஆண்டவனால் படைக்கப்ட்டவர்களல்ல நாங்கள் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.
அறப்பணி
என்னுடைய பொதுவாழ்வில் மதங்களின் ஆராய்ச்சியிலும் அவற்றிலுள்ள குறை நிறைகளை ஒரளவு ஆராய்ச்சியில் கவனம் காட்ட முனைந்ததே சந்தர்ப்பத்தின் சந்திப்புக்களால் சமைந்ததுதான்.
என்னுடைய பொதுவாழ்வின் துவக்கக் காலத்தில் நான் மேடையைத் தேடிப் பிடிக்க வேண்டியவனாயிருந்தேன். வலிய வரும் அழைப்பெல்லாம் பொதுவாக மதாச்சார மேடைகளாகவே இருந்தது.
சில சமயம் அம்மாதிரி மேடைகளில் நிர்ப்பந்தத்துக்காக்கூட ஏறுவதுண்டு. சில நேரம் அதிலுள்ள குறைநிறைகளைக் கூறவும் ஏறுவதுண்டு. இந்த சந்தர்ப்பம், என்னை மத ஆராய்ச்சியில் வலியவே தள்ளிவிட்டது.
ஒன்றினை அறிய, அதில் எழும் ஐயங்களுக்காக – மற்றொன்றை தேடிப்பிடித்து படிக்கும் ஆர்வம் ஏற்பட்டு – படிப்படியாக அம்மதங்களின் முக்கிய நூல்களைப் படித்து முடித்து விடும் நிலைக்கே கொண்டு வந்து விட்டது.
எனக்கும் இஸ்லாத்துக்கும் ஏற்பட்ட பிணைப்பு இந்த வகையில் ஏற்பட்ட பிணைப்பல்ல!
நான் வசிக்கும் காஞ்சீபுரம் ஒலி முஹம்மது பேட்டை இஸ்லாமிய நண்பர்களுடனும், மார்க்க பேரறிஞர்களான ஆலிம்களுடனும் என் இளமை முதல் உற்ற நண்பர்கள் என்கிற போழ்து,
குடும்பத்தோடு குடும்பமாய்க் கலந்து சகோதர வாழ்க்கை நடத்தியவன் நான். இஸ்லாத்தைப் பற்றியும் அதன் இன்னிலக்கியமான, இறைமறை திருக்குர்ஆனைப் பற்றியும் நான் அறிந்து கொள்ளும்வாய்ப்பு என் இளமைக்காலத்திலேயே என் இதயத்தில் இடம்பிடித்து விட்டது.
திருக்குறளை நான் தெரிந்து கொண்ட காலத்திலேயே திருக்குர்ஆனையும் நான் தெரிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றிருந்தேன் என்று நான் துணிந்து சொல்வதில் பெருமை கொள்கிறேன்.
என்னுடைய பொதுவாழ்வு சுடர்விட என்னுடைய இதயமூச்சின் இலட்சிய மேடையான திராவிடக் கழக மேடையுடன் நபிகள் நாயக மீலாது மேடையும் எனக்குக் கைக்கொடுத்ததை நான் மறந்து விட முடியாது. ஏறத்தாழ முந்நூற்றுக்கதிகமான மீலாது மேடைகளில் நான் பேசியிருக்கிறேன்.
நானும் எனது கொள்கையும் சொல்லி வந்த சமுதாய சீர்திருத்த பிரச்சார பலத்துக்கு பெருமான் நபிகள் நாயகத்தின் ஏகதெய்வக்கொள்கை எங்கட்டு பெரிதும் பிரச்சாரத்துணை நின்றது.
கல்லையும் மண்ணையும் பூசிக்காதீர்,
கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் உண்டு மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் இல்லை என்று நபிகள் நாயகம் வலியுறுத்திய அதே கொள்கையைக் கொண்டிருந்த எங்கள் இலட்சியப்பணி, மீலாது மேடையின் மூலம் சுடர்விட நல்லவாய்ப்பு இருந்தது.
ஏகதெய்வக்கொள்கையை “ஒன்றே குலம் ஒருவனேதேவன்” எனும் உண்மை தாத்பரியத்தை, மக்களை ஏற்கச் செய்ய எவ்வளவோ பிரச்சாரம் தொடுத்தும், முழுப்பயனும் எட்ட முடியாமல் உள்ளம் வெதும்பும் நம்முடைய பிரச்சாரத்தையும்,
1400 ஆண்டுகட்கு முன்பு எந்த வித நவயுக பிரச்சார சாதனமும் இல்லாத அந்த நாட்களில் திரும்பும் திசைதோறும் கடவுளின் சிலை வடித்து தினமொரு இறைவனை உண்டு செய்த அறிவாற்றலற்ற அந்த மக்களை –
நபிகள் நாயகத்தின் 23 வருட பிரச்சார பலம் எத்துனை வெற்றிக்கு இழுத்து வந்து, ஒரே இறை, ஒரே மறை என்ற கருத்தை உள்ளத்தால் ஒத்துக்கொள்ளச் செய்து, அதுவும் உலகின் மூலை முடுக்குக்கெல்லாம் பரவி, பண்புடன் வாழச் செய்திருக்கிறது என்றால்,
அந்த மனிதப் புனிதரின் நாவன்மைக்கிருந்த நல்ல மதிப்பீட்டை, மகத்துவத்தை எண்ணிப் பூரித்து நன்னயத்திற்கு துணைபோக வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இத்துணை மகத்துவம் அந்த மாநபிக்கு இருக்கக் காரணமே, அந்த பெருமகன் தன் உயிரினும் மேலாக கட்டிக் காத்து வந்த பொறுமையும், சொல்லும், செயலும் இணைந்த வாழ்வும், நடைமுறை வாழ்க்கையில் தடையின்றிச் செல்லத்ததுணை நின்ற சட்டமும், தன்னையும் தன்னை பின்பற்றுவோருள் ஒருவராக்கி சொன்னதோடல்லாமல் செய்து காட்டும் செம்மலாமல் செம்மலாகவே இருந்ததும் மூல முதல் காரணமாகும்!
மற்றெல்லா மதங்களிடையேயும் இல்லாதிருக்கும் இணையற்ற மதிப்பு, அதன் சட்டத்திட்டங்கள் மனிதனின் நடைமுறை வாழ்க்கைக்கேற்ற நல் அமைப்பாகும்.
நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீசும் இஸ்லாத்தின் இணையற்ற இலட்சிய பொக்கிஷமான இறைமறை திருக்குர்ஆனும் மனிதன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் நடைமுறை வழிகளைக் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன, இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய தூண்டுகோலாகும்!
எழுச்சி இதயம் என்பது அறிவைத் தேடி அலையும் ஆற்றல் உள்ளதாக அமைதல் வேண்டும். நான் இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன் இப்போதும் சொல்கிறேன்.
நல்லவை எங்குதென்படுகிறதோ அங்கெல்லாம் நான் பழந்தோட்டத்தை நாடி பறவையினங்கள் பறந்தோடுவது போல, ஏற்புடைய என் இதயத்துக்கு இனியவைகளை, வல்லவைகளை – அவை இருக்கும் இடம் பற்றி கவலைப்படாமல் எடுத்து வந்து விடுவதுண்டு.
அப்படி இஸ்லாத்தில் நான் எடுத்துக் கொண்டவைகளுள் மிக முக்கியமானது பொறுமை. அந்தப் பொறுமையின் உரிமையை நான் மிகப் பெருமையாக அனுபவித்து வருகிறேன்.
வாய்மையில், வளர்க்கும் மனத்தூய்மையில் சிறக்கும் பொருமை ஒன்றில் தான் உலகம் அளப்பரிய சாதனைகளைக் காண முடிந்தது.
அந்த சாதனைகள் இஸ்லாமிய வரலாறெங்கும் வளர்ந்து நிற்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது.
வாளேந்தி, வன்சமர்புரிந்து சாதிக்க முடியாத சாதனைகளைக் கூட நபிகள் பிரானின் இன்சொல்லும், புன்முறுவலும் தனக்கே உரிய தனித்த ஆயுதமான பொறுமையினாலும் வெற்றி கொண்டு இருக்கிற சக்தி அண்ணலின்பால் எனக்கு அளப்பரிய பக்தியை உண்டாக்கி விட்டது.
இஸ்லாம் என்பது ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பாகும்.
இத்துணை சம்பிரதாய சடங்குகள் கொண்டதா இஸ்லாம் என்று அதனைப் பற்றி புரிந்து கொள்ள அஞ்சுபவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால் எவ்வாறு இஸ்லாத்தை புரிந்து கொள்ளமுடியும்.?
பலாப்பழத்தின் மேலுள்ள முள் குத்துமே என்று அஞ்சுபவர்களுக்கு அதன் உள்ளே உள்ள சுவையான கனிகளை உண்ணும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்?
அதே போன்றே இஸ்லாம், சம்பிரதாயம் என்ற முள்கூட கையிலே குத்தி, குருதியைக் கொண்டு வந்து விடுவதில்லை.
தெரிந்துகொள்ளும் ஆவலுடன் உள்புகுந்து அறிந்தால், தோல் நீக்கிய கனி கிடைப்பது போல், நல்ல சுவையுள்ள கனி கிடைக்கும் சுந்தரமார்க்கம் இஸ்லாமாகும்.
பெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கமும் ஒலிக்கச் செய்வதற்குப் பட்டதுயர்கள், தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல.
அண்ணல் நபிகள் நாயகத்தின் அறப்பணி, அகிலத்தை தரமுடையதாக்கவும், திறமுடையதாக்கவும் கிடைத்த திருப்பணி, இப்பணியை எண்ணி பூரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்களாவோம்.
THANKS TO SOURCE: http://vapuchi.wordpress.com/
கட்டுரை புத்தக வடிவில்:
அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா
வெளியீடு:
காஜியார் புக் டிப்போ
முஸ்லிம் தெரு, மானம்புச்சாவடி
தஞ்சாவூர்
**********
இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும்,
பகுத்தறிவின் பரிச்சைக்குவிட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாகச் சொல்லுகிறார்கள்.
அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை?
எனெனில் திரு. முகம்மது நபி கொள்கைகள் அனைத்தும் அநேக விஷயங்களால் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கிதையுடையதாய் இருக்கின்றது. - குடி அரசு. ஆக. 23, 1931.
*********
பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.
நந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.
நாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.
ஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.
இந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.
*****************************
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
1. முஸ்லிமான R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன்!!! . முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.
2. செங்கொடி தழுவிய இஸ்லாம். இஸ்லாம் ஈர்த்த செங்கொடி. புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! ஒரு செங்கொடியின் அறைகூவல்.
3. நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட டாக்டர் பெரியார்தாசன். நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்?
12 comments:
அன்புடன் வாஞ்சூர் இணைய தள நண்பர் அவர்களுக்கு, எனது பெட்டகம் வலைப்பூவில் தாங்கள் தாங்களைப்பற்றி தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்ணுற்றேன். தங்களின் இஸ்லாமியப்பணி சிறக்க வாழ்த்துக்கள். முஸ்லிம்கள் அனைவர்களும் இறை நம்பிக்கையுடன் ஒற்றுமை எண்ணும் கயிற்றை பற்றிப்பிடித்து இறைவனிடம் நாம் முறையிட்டால் அனைத்து தீமைகளினின்றும் இறைவன் நம்மை பாதுகாத்து அருள்புரிகின்றான். இது தான் உண்மை. இது சத்தியம் ஆகும் இந்தியா வளரட்டும் வல்லரசாக நல்லரசாகட்டும் இந்தியர்கள் ஆகிய நாம் அனைவர்களும் இஸ்லாம் கூறும் சகோதரத்துடன் இணைந்து வாழ்வோம் அன்புடன் A.S.முஹம்மது அலி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
அன்பின் A.S.முஹம்மது அலி ,
வருகைக்கும்,
ஆதரவுக்கும்,
வாழ்த்துக்களுக்கும்
நன்றி.
இந்தியா வளரட்டும் வல்லரசாக நல்லரசாகட்டும் இந்தியர்கள் ஆகிய நாம் அனைவர்களும் இஸ்லாம் கூறும் சகோதரத்துடன் இணைந்து வாழ்வோம்.
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
Assalamu Alaicum Mr. Vanjoor Sir,
Thanks for you and vapuchi.wordpress.com for sharing such new message from Arinjar Anna which we never heard before. This will help us to take this message to non-muslim and aethist brothers.
May Allah reward you both for this.
Mohamed Rafik.
WA ALAIKKUMMUSSALAM W.R.B.
DEAR MOHAMED RAFIK,
THANK YOU FOR YOUR ENCOURAGEMENT.
KINDLY PASS THE ARTICLE TO EACH AND EVERYBODY.
REGARDS.
VANJOOR
Salaam Brother,
Yes. I already did.
I also have noticed some meaning mistakes (porul pizhaigal). Kindly check and correct. Thanks.
Eg. one is given below.
இத்துணை சம்பிரதாய சடங்குகள் கொண்டதா இஸ்லாம் என்று அதனைப் பற்றி புரிந்து கொள்ள அஞ்சுபவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.
This supposed to be.
இத்துணை சம்பிரதாய சடங்குகள் கொண்டதா இஸ்லாம் என்று அதனைப் பற்றி புரிந்து கொள்ள அஞ்சுபவர்களால் அதன் உள்புகுந்து உயர் நோக்கறிய முனையாதவர்களால் இஸ்லாத்தைப் எவ்வாறு புரிந்துகொள்ளமுடியும் ?
asalamu alaikkum,
good job brother
WA ALAIKKUMMUSSALAM W.R.B.
DEAR SAKTHI,
THANK YOU FOR YOUR ENCOURAGING COMPLIMENT.
MUCH APPRECIATED.
REGARDS.
VANJOOR.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பின் முகம்மது ரஃபீக்
வாக்கிய பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
திருத்தப்பட்டுவிட்டது.
73ம் வயதை இன்னும் 3 நாட்களில் துடங்க இருக்கும் எனக்கு
தவிர்க்க முடியாத வயோதிகத்தின் தாக்கம் ஆட்கொண்டு வருவதால்
உங்கள் போல் உள்ளோரின் ஆதரவு மிகவும் உரித்தாகிறது.
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
===================
கட்டுரை புத்தக வடிவில்:
"அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா"
வெளியீடு:
காஜியார் புக் டிப்போ
முஸ்லிம் தெரு, மானம்புச்சாவடி
தஞ்சாவூர்
.
தங்கள் சமுதாய பணி மென் மேலும் வளர்ந்திட
இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அன்பின் கீழாயூரார்,
ஆதரவுக்கும்
கனிவான 'துஆ' க்கும்
நன்றி.
என் பதிவுகளை பலர் சிந்தனைக்கு அறிய தரவும்.
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
சலாம் சகோ. வாஞ்சூர், இந்த வயதிலும் நீங்கள் ஆற்றி கொண்டிருக்கும் இந்த அரும்பணி.. எங்களை போன்ற இளைஜர்களை நெகிழவைப்பது மட்டும் அல்லாமல் உத்வேகத்துடன் எங்கள் சொந்த வேலைகளுக்கு மட்டும் அல்லாமல் நீங்கள் செய்துகொண்டிருப்பது போன்ற இந்த இறை அழைப்பு பணிக்காகவும் உழைப்பதற்கு தூண்டுகிறது.
இந்த வயதிலும் நீங்கள் ஆற்றிக் கொண்டிருக்கும் இந்த அரும்பணிக்காக எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இம்மையிலும் மறுமையிலும் சிறந்த வெற்றியை தருவானாக ! ஆமீன்.
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
அன்பின் ரஃபீக்,
வருகைக்கும்
ஆதரவுக்கும்
"துஆ" க்கும்
எனது நன்றிகள்.
வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.
.
Post a Comment