வெற்றியை விதைதிடுவோம்.வீழ்ச்சியை வென்றிடு! எழுச்சியாய் நின்றிடு!! வலையைக் கிழித்து வெளியேறுங்கள்.
>> Tuesday, April 20, 2010
வெற்றி அடைய வேண்டுமா? அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது
1.வெற்றியை விதைதிடுவோம்
படியேற பயந்தேன். ஏறிய பின் வியந்தேன். வெற்றியின் தூரம் வெகு தூரம் இல்லை என்று.
நம்மிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதை அடைவதற்கான முயற்சியின் முதல் படிதான் நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்துவது. விதையை விதைக்கும்போது அந்த விதை விதைப்பதற்கு ஏற்றதா என்பதை எப்படி பரிசீலிக்கும் அனுபவம் முக்கியமோ அதுபோல கிடைக்கின்ற வாய்ப்புகளை சரிதானா என்பதை பரிசீலித்து விட்டு விதையை சரியாக உழவு செய்யப்பட்ட நிலத்தில் பயிரிடுவது போல நமது உள்ளத்தில் விதைத்துவிடவேண்டும்.
நிலத்திற்குள் உள்ள விதைக்கு எப்படி நல்ல தண்ணீரும், அதை பராமரிக்கும் ஒரு தோட்டக்காரனும் முக்கியமோ, அதேபோல் நமது உள்ளத்தை நல்ல அனுபவமிக்கவர்களின் புத்தகத்தின் மூலமாகவும், நல்ல நண்பர்கள் மூலமாகவும், மனதில் உள்ள விதைக்கு உரமூட்ட வேண்டும். வளர்ந்து வருகிற மரம் நிச்சயம் காய் கொடுக்கும் என்ற நம்பிக்கை எப்படி வெற்றி பெறுகிறதோ, அதே போல் நமக்குள் இருக்கும் இந்த தாக்கத்திற்கு வெற்றி கிடைத்தே தீரும்.
ஏழ்மையாக உள்ளவர்கள்கூட எளிதாக வெற்றி பெறவேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தனக்கு ஏற்படுகிற தடைகளை கண்டு தயங்காமல் தனது பயணத்தை துவங்க வேண்டும். அந்த பயணத்தில் வரக்கூடிய இடையூறுகள், எதிர்ப்பு, ஏளனம், எதிர்பார்ப்பு ஆகிய மூன்றும்தான். ஒவ்வொரு மனிதனும் இந்த மூன்றையும் கடந்துதான் வெற்றி பெறமுடியும்.
இதை வெல்வது சுலபமா, சிரமமா?
நிலத்தில் விதைத்த விதை காய்க்குமா? காய்க்காதா? என்ற சந்தேகம் இல்லாமல் நிச்சயம் காய்க்கும் என்ற நம்பிக்கை எப்படி சாத்தியமோ அதே போல் நமது இலக்கை நோக்கி செல்லக்கூடிய இடத்திற்கு இதுபோன்ற தடங்கல்களை தகர்ப்பது என்பது மிக சாதாரணமாகிவிடும்.
பிரச்சினைகளை கண்டு நாம் ஓடத் துவங்கினால் அது நம்மை துரத்த ஆரம்பிக்கும். அதே பிரச்சினையை எதிர்நோக்கி இருந்தால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சுலபமாக தீர்வு காண முடியும்.
ஏழ்மையாக இருந்த ஒரு இளைஞன் ஒரு ஓட்டப் பந்தயத்தில் பங்கு பெற நினைத்து தன்னை தயார்படுத்துவதற்காக தினமும் அதற்கு தேவையான பயிற்சியை மிக நேர்த்தியாக செய்து வருகிறான். தனக்குள் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை ஆழமாக பதிய வைத்துக்கொண்டு பயிற்சியை தொடர்கிறான்.
போட்டியின் தேதி அறிவிக்கப்படுகிறது. அந்த போட்டியில் கலந்து கொள்ள தனது பெயரை பதிவு செய்யும்போது அனைவரும் அவரின் தோற்றத்தைப் பார்த்து உனக்கெல்லாம் இந்த போட்டி தேவைதானா, வேண்டாம் என்று எதிர்த்தவர்கள் பலர்.
அதையும் மீறி பெயர் பதிவு செய்தாகிவிட்ட பிறகு “இவனுக்கு எல்லாம் ஆசையை பார், எவ்வளவு நாள் விளையாட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஓடும்போது இவன் போய் அவர்களோடு சேர்ந்து ஓட நினைக்கிறான் பாரு” என்று ஏளனமாக பேசுபவர்களையும் தாண்டி, போட்டியின் நாளை எதிர்நோக்கி இருந்தவனுக்கு போட்டியில் ஓட வாய்ப்பு கிடைத்தது.
அப்பொழுதுகூட இவனுக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லை. அதையும் மீறி வெற்றி பெறுவது மட்டுமே தனது இலக்கு என்பதைத் தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அவனுக்கு அருகில் இருந்தவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் இவன் ஓடுகிறான் வெற்றி பெறுவானா என்றே இருந்தது. ஆனால் போட்டி ஆரம்பித்தவுடன் “மடை திறந்த வெள்ளம்” போல் ஓடுகிறான். மிகப்பெரிய வெற்றியை அடைகிறான்.
வெற்றிக்குப் பிறகு ஏராளமானோர் பாராட்டுகிறார்கள், மாலை போடுகிறார்கள், வெற்றி பெறுவாய் என்பது எங்களுக்குத் தெரியும் என்று வாய் கூசாமல் பொய் சொல்லும் கூட்டம். இவைகள் எப்படி சாத்தியம் ஆகியதோ, அதே போல்தான் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும்.
நமது இலக்கு எதை நோக்கி இருக்கிறது என்பதுதான் முக்கியமே தவிர நம்மை நோக்கி வீசப்படுகிற எதிர்ப்பு, ஏளனம், எதிர்பார்ப்புகள் முக்கியம் அல்ல.
விதையை விதைத்திடுவோம்
விழிப்புடனே இருந்திடுவோம்!
மரமாய் வளரும் வரை
மகிழ்ச்சியாய் இருந்திடுவோம்!
பூக்கள் பூக்கும் வரை
பூரிப்பாய் இருந்திடுவோம்!
காய்களாய் மாறும் வரை
கவனமாய் இருந்திடுவோம்!
காத்திருந்த காலமெல்லாம்
கனவாக போகாமல்
கனிகளை நாம் பெறுவோம்
நலமாய் நாம் வாழ்வோம்!
2.வெற்றிக்கு வழிகாட்டும் விழிப்பணர்ச்சி
உங்கள் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையும், உடலின் ஒவ்வோர் அசைவும் உங்கள் வாழ்வை தீர்மானிக்கிறது.
ஒரு துளி விழிப்புணர்வை நம் வாழ்வில் சேர்க்கிறபோது அத்தனை பரிமாணங்களும் மாறிவிடும்.
ஓர் இளைஞன் இருந்தான். சுமாரான தோற்றம் உள்ளவன். எந்தப் பெண்ணும் காதலிக்கவில்லையென்ற வருத்தம் அவனுக்கு, அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து, அந்தப் பகுதியின் அழகான பெண்ணொருத்தி அழைத்து ஆறுதல் படுத்த ஒரு காபி க்ளப்பிற்கு சென்றாள். காபி ஆர்டர் கொடுக்கும்போது காபியில் எனக்கு உப்பு அதிகம் இடுங்கள் என்றான். சர்வர் திரும்பக் கேட்டான். ஆம், உப்பு நிறைய போடுங்கள் என்று திரும்பவும் சொன்னான்.
சர்வர் சென்றபின், அந்தப் பெண் கேட்டாள், “நீங்கள் ஏன் காபியில் உப்பு இடச் சொன்னீர்கள்” என்று. அதற்கு அவன், “நான் ஒரு கடற்கரை கிராமத்தில் பிறந்தேன், என் தந்தை ஒருநாள் மீன் பிடிக்கச் சென்றவர் அலையடித்துக் கொண்டு போய்விட்டது. பிறகு, என் தாய் நகரத்திற்கு அழைத்து வந்துவிட்டாள். நான் சிரமப்பட்டு படித்தேன். இன்னும் அந்த கடற்கரை நினைவுகள் அப்படியே இருக்கின்றன. ஒரு துளி உப்பு என் நாவில் படும்போதெல்லாம் நான் வாழ்ந்த அந்த சமுத்திரத்தின் காற்று என்னைத் தொட்டுவிட்டுப் போவது போல் உணர்கிறேன்! அதனால்தான் நான் காபியில் கூட உப்பு போட்டு சாப்பிடுகிறேன்” என்றான்.
இது அந்தப் பெண்ணின் மனதைத் தொட்டது. தன்னுடைய பழைய வாழ்க்கையை இவ்வளவு தூரம் நினைக்கக்கூடிய இவனோடுதான் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாள். ஒரு கோடீஸ்வர வீட்டுப் பெண்ணாக இருந்தாலும், அவனை திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்கிறாள். பார்க்க சராசரி, வசதியில்லாத போதும் திருமணம் நடக்கிறது.
திருமணத்திற்குப் பிறகு இளைஞனின் வாழ்க்கையே மாறுகிறது. ஐம்பது வருடம் சேர்ந்து வாழ்கிறார்கள். திருமணப் பொன்விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று இரவு தன் மனைவியிடத்தில் அவன், “நீ என்னை மன்னித்துவிடு”. எதற்கு? “ஐம்பது வருஷம் முன்னால் ஒரு பொய் சொன்னேன். கடற்கரையில் பிறந்தேன் என்பது பொய். உப்புக்காற்று படுகிறபோதெல்லாம் என் மனம் பழைய நினைவுக்குப் போகிறது என்பது பொய். எல்லாமே பொய்”. பிறகு ஏன் உப்பு போட்ட காப்பி கேட்டீர்கள் என்றாள் மனைவி.
“நான் காபியில், சர்க்கரை கொஞ்சம் அதிகமாக போடுங்கள் என்றுதான் கேட்க நினைத்தேன். உன்னோடு அமர்ந்திருந்த பதற்றத்தில் உப்பு என்று வந்துவிட்டது. எல்லோரும் கேலி செய்தார்கள். அதைக் கட்டமைப்பதற்கு ஒரு கதையைச் சொன்னேன். அதை நம்பி விட்டீர்கள்”.
ஒரு சின்ன சறுக்கல். உதட்டில் சொன்ன வார்த்தையிலிருந்து வந்ததை இவனுக்குள் படைப்பு மனம் திறந்து அதற்கென்று ஒரு காரணத்தை உருவாக்குகிறபோது அவன் வாழ்க்கையே மாறுகிறது. பதட்டத்தில் ஒரு சின்ன சறுக்கலில் இருந்து எழுகிறபோதுகூட விழிப்புணர்வோடு எழுந்தால் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெறலாம் என்பதைத் தான் இந்தக்கதை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்த அம்சம், படைப்பு மனம் இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் விடப்பட்டிருக்கிற சவால், அவன் செய்யக் கூடியதற்கும்., செய்து கொண்டிருப்பதற்கும் இருக்கிற இடை வெளி.
பெரிய பெரிய லட்சியங்களை எட்டினால்தான் உங்கள் வாழ்க்கை முழுமையடையும் என்றில்லை. மனதிற்குள் நீங்கள் பொத்தி வைத்த சின்ன விருப்பங்கள், சின்ன சின்ன லட்சியங்கள், குறிப்பிட்ட இளமையில் நிறைவேறாவிட்டாலும், எல்லா வயதிலும் முயற்சி செய்துகொண்டே இருங்கள். அப்போதுதான் நாம் தேங்கிப் போகமாட்டோம். இன்றைக்கும் நமக்கு உத்வேகம், உற்சாகம் இருக்கிறது. புதியதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். வாழ்க்கை வாழ்கிறபோதுதான் முழுமையான வாழ்க்கையாக அது மாறுகிறது.
ஒரு மனிதரைப் பற்றி எதிர்மறையாக சிந்திக்க சிந்திக்க உங்கள் முழு சக்தியையும் நீங்கள் அவருக்கு கொடுக்கிறீர்கள். எதிரியை பலசாலியாக்குவதற்கு ஒரே வழி சதா சர்வகாலமும் அவனை நினைத்துக் கொண்டேயிருப்பது. ஒரு மனிதர் மேல் கோபம் இருந்தால், ஒரு காகிதத்தில் அவர் மேல் என்ன கோபம் என்று எழுதுங்கள் சாபம் இடாதீர்கள். இவ்வளவு சிரமங்களை ஏற்படுத்திய மனிதனை மன்னித்துவிட்டேன். அவனை கடந்து போகிறேன் என்று எழுதுங்கள்.
ஒரு மனிதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அவரைத் தாண்டிச் செல்லுங்கள். நீங்கள் அவர் மேல் கோபம் கொள்வதின்மூலம் அவரை நீங்கள் தாண்டிச் செல்லவில்லை. உங்கள் தோளிலே சுமந்து கொண்டு செல்கிறீர்கள்.
இதனால் உங்கள் நடை தாமதமாகும், சக்தி வீணாகும்.
உணர்ச்சி களுக்கு அவ்வளவு பலமிருக்கிறது. உணர்ச்சியை எதற்குப் பயன்படுத்த வேண்டுமென்பதில் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். பார்க்கிற ஒவ்வொரு மனிதர்களிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது. இதனால் நம் சக்தி கூடுகிறது.
ஒரு மனிதரை திட்டுகிறபோது சக்தி செலவாகிறது. அது மட்டுமல்ல. அந்தக் கோபத்தோடு இருக்கிறோம்.
உணர்ச்சிகளை சிலபோது தடை செய்து வைத்திருக்கிறோம். இது பெரிய ஆபத்தில் கொண்டு போய்விடும். கோபமோ, அன்போ எதையும் அடக்கி வைத்தால் அது நம் சக்தி வட்டத்தில் அடைப்பாய் நிற்கிறது. அது நமக்குத் தெரியாமல் வேண்டாத இடத்தில் வெளிப்படுகிறது.
கோபத்தைக்கூட வெளிக்காட்டுகிறோம். ஆனால் அன்பை வெளிக்காட்ட வாய்ப்பே தரப்படுவதில்லை.
வெறுப்பைக்கூட வெளிக்காட்டிவிட்டு மன்னிப்பு கேட்டுவிடலாம். ஆனால், வெளிக்காட்டாத அன்புக்கு மறுபடியும் வாய்ப்பே இருக்காது. தயவு செய்து இதை மறந்து விடாதீர்கள்.
சக மனிதர்களோடான உறவு வட்டம் விரிய விரிய உங்களுக்கு நிறைய பலம் கிடைக்கிறது. உங்கள் தனித்தன்மையை எந்த நேரத்திலும் இழக்காதீர்கள். நம்மை காப்பாற்றப் போவது தனித்தன்மைதான். அதை நாம் அடகு வைத்தால், சமரசம் செய்தால் சராசரி மனிதனாக்கிவிடும்.
ஒரு புலவர் இருந்தார். இன்றைக்கு நிறைய வசதிகள் இருக்கின்றன. இந்தப் புலவருக்கு பெரிய வசதி இல்லை. ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். கந்தல் உடை. சிலர் ஒரு ராஜாவைப் பார்த்து பாட்டுப் பாடினால் பரிசு கொடுப்பார் என்றார்கள். ராஜாவிற்கு அன்றைக்குப் பிறந்த நாள். நிறையக் கூட்டம். கூட்ட நெரிசலில் பிச்சைக்காரர்கள் பக்கம் போய் சேர்ந்துவிட்டார் புலவர். பிச்சைக்காரர்கள் நெருக்கியதில் முன்னால் போய் விழுந்துவிட்டார்.
இவ்வளவு கூட்டத்தைப் பார்த்த எரிச்சலிலிருந்து ராஜா, “டேய், பறக்காதே! இரு” என்றான்.
விழுந்த இந்தப் புலவர் எழுந்தார்.
“கொக்குப் பறக்கும்; புறா பறக்கும்; குருவி பறக்கும்
குயில் பறக்கும்; நக்குப் பொறுக்கிகளும் பறப்பர் - நான் ஏன் பறப்பேன் நராதிபனே”
என்றதும் ராஜா மிரண்டு போய் ஒரு புலவரை இப்படி அவமதித்துவிட்டோமே என்று வருத்தப்பட்டு புலவரின் கையைப் பிடித்தான். மீண்டும் புலவர் பாடலைத் தொடர்ந்தார்.
“திக்கு விஜயம் செலுத்தி உயர் ஆட்சிசெலுத்தும் அரங்கா - உன்
பக்கம் இருக்க ஒரு நாளும் பறவேன் - பறவேன் - பறவேனே”
வசைக் கவியையே வாழ்த்துக் கவியாக மாற்றினார். உங்கள் அடையாளம் அற்றுப் போகிற இடத்திலேகூட தன்னுடைய தனித்தன்மையை அந்தப் புலவர் இழக்கவில்லை.
எத்தனை பேரிடம் வியாபாரத்திற்கோ, ஏதேனும் உதவி கேட்டோ செல்கிறபோது நம்மை முதலில் அறிமுகப்படுத்திக் கொள்ள முடிகிறதா. தட்டுத்தடுமாறுகிறோம்.
என்னுடைய தனித்தன்மையை எப்படி வெளிப்படுத்திக் கொள்வது. நான் யார்? என்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்வது என்றால் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்குள்ளே பார்க்க வேண்டும். எது என் தனித்தன்மை? எப்படி நான் ஜெயிக்கிறேன். இதை நாம் பார்க்க வேண்டும்.
நாம் குறுகிய வட்டத்திற்குள் வாழப் பிறந்தவர்கள் அல்ல. நம்முடைய சக்தி வட்டம் என்ன என்பதை உணர்கிறோம். அதன் மூலம் நம் அன்பு வட்டத்தை பெருக்கிக் கொண்டே போகிறோம். அதன் மூலம் புதுமைமிக்க செழுமை மிக்க ஒரு சமுதாயத்தை நாம் படைக்கிறோம்.
3.வீட்டுக்குள் வெற்றி
குழந்தை வளர்ப்பு என்பதே குழந்தைகளை படிக்க வைத்து நல்ல மதிப்பெண் பெறவைப்பது என்றாகிவிட்டது. குழந்தைகளை படிக்க வைப்பதற்கு பெற்றோர்கள் படாதபாடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
என்னதான் பிரம்ம பிரயத்தனம் எடுத்தாலும் படிக்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை.
உங்கள் குழந்தைகள் தானாகப் படிக்காததற்கு அல்லது மதிப்பெண் எடுக்காததற்கு படிக்கப் பிடிக்காதது மட்டும் காரணமில்லை.
‘ஏன் மாணவர்கள் படிக்க மறுக்கிறார்கள்?’ ‘எதனால் எல்லாம் படிக்கப் பிடிக்கவில்லை?’ இதையெல்லாம் முதலில் புரிந்து கொண்டால்தான் படிப்பின் மேல் அவர்களுக்கு உள்ள வெறுப்பை அகற்றி விருப்பை ஏற்படுத்த முடியும்..
மாணவர்கள் படிப்பை தவிர்க்க காரணங்கள்:
1. தேர்வு பயம்
2. பாடங்கள் புரியவில்லை என்றால் படிப்பு வராது என்று எண்ணி குற்ற உணர்ச்சி அடைவது.
3. எவ்வளவு படித்தாலும் மனதில் பதிவதில்லை என்பதால் நினைவாற்றல் இல்லை என்று எண்ணுவது.
4. பாடங்கள் அதிகம் என்றும் அதிக வேலைப்பளு என்றும் எண்ணுவது.
5. போரடிப்பதாக நினைப்பது.
6. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதம் பிடிக்கவில்லை. அல்லது தன்னை நடத்தும் விதம் பிடிக்கவில்லை.
7. பெற்றோர்கள் நடத்தும் விதம் அதாவது எப்போது பார்த்தாலும் படி படி என்று சொல்வது.
8. தள்ளிப்போடும் மனப்பான்மை.
9. அலட்சியம்…. என பல காரணங்கள் இருக்கலாம். இது தவிரவும் கூட ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம்.
சரி காரணங்களை தெரிந்து கொண்டாகிவிட்டது. இனி அவர்களிடம் படிப்பில் ஆர்வத்தை கொண்டு வருவது எப்படி என்று பார்ப்போம். முதலில் தேர்வு பயத்தை அகற்றுவது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.
தேர்வு பயம்:
புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ள ‘தீண்டாமை ஒரு பாவச் செயல்; தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;’ என்பதை ஒரு மாணவன் தீண்டாமை என்பதை அடித்து அதற்குப் பதில் இப்படி மாற்றியிருந்தான். ‘காலாண்டு என்பது ஒரு பாவச்செயல். அரையாண்டு என்பது மனிதத் தன்மையற்ற செயல். முழு ஆண்டு என்பது ஒரு பெருங்குற்றம்.’
இதிலிருந்தே உங்களுக்கு புரிந்திருக்கும். பெரும்பாலான மாணவர்கள் கற்பதை வெறுக்கவில்லை. தேர்வுகளைத்தான் வெறுக்கிறார்கள்.
நம் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்கிறபோது எந்த விதமான போட்டியும் சரி, தேர்வும் சரி நமக்கு கலந்து கொள்ளும் ஆர்வத்தையே தரும். ஆனால் பள்ளியில் நடத்தும் தேர்வுகள் மட்டும் நன்றாகப் படிக்கும் நம் குழந்தைகளுக்குக் கூட பயத்தை ஏற்படுத்துவது ஏன்?
தேர்வு பயம் என்பது நம்மால் மதிப்பெண் பெறமுடியாது என்ற எண்ணத்தால் வருகிறது. அதாவது பாடங்களை முழுமையாகப் படிக்காதபோதுதான் நம்மால் சிறப்பாக எழுத முடியுமா? என்ற சந்தேகம் வருகிறது.
பாடங்களை முழுமையாகப் படிக்காததற்கான காரணங்களுள் ஒன்று தள்ளிப்போடும் மனப்பான்மை. அன்றைய பாடங்களை அன்றே படித்திருந்தால் தேர்வு நேரத்தில் படிப்பதற்கு ஒன்றும் இருக்காது.
தேர்வுக்கான தேதி அறிவித்ததும் செய்ய வேண்டியது பாடங்களை திருப்புதல் அதாவது ரிவிஷன் மட்டுமே. ஆனால் பல மாணவர்கள் தேர்வு தேதி அறிவித்தால்தான் படிக்கவே தொடங்குகிறார்கள். அதனால் குறுகிய காலத்திற்குள் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால்தான் பதட்டம், பயம் போன்றவை ஏற்பட்டு படிப்பது பிடிக்காத விஷயமாகி விடுகிறது.
பாடங்களை முழுமையாகப் படிக்காததற்கு மற்றொரு காரணம் மாணவர்கள் பலரும் இன்று அறிவை வளர்த்துக்கொள்வதற்காக அல்ல… மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே படிக்கிறார்கள்.
இதனால் பாடங்களை தேர்வுக்கு வருவது, தேர்வுக்கு வராதது என இரண்டாகப் பகுத்து தேர்வுக்கு வருவதை மட்டும் படிக்கிறார்கள். இதனால் நன்றாக படித்திருக்கிறோம் என்ற நிறைவே வராது. இப்படி அரைகுறையாக தேர்வுக்கு செல்வதால்தான் மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை வருவதில்லை.
ஒன்றாவது படிக்கும் சிறுவனுக்கு அவன் வளர்க்கும் செல்ல நாயே உலகமாக இருந்தது. ஒரு நாள் பள்ளிவிட்டு வந்தபோது அது அசைவில்லாமல் கிடக்க அதிர்ச்சியானான். அது இறந்து விட்டதாக எல்லோரும் சொல்ல, அவன் அழுத அழுகைக்கு அளவேயில்லை. அவனை சமாதானப்படுத்த அந்த நாய்க்கு இறுதி ஊர்வலம் நடத்த ஏற்பாடாயிற்று.
பக்கத்து வீடுகளில் இருந்த நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடினர். மெல்ல மெல்ல அழுகை குறைந்து இறுதி ஊர்வலம் பற்றிய உற்சாகம் அவனிடம் அதிகமாகியது. குட்டி பல்லக்கு ஒன்று வரவழைத்து நாய் ஏற்றப் பட்டபோது இறந்ததாக கருதப்பட்ட அது லேசாக அசைந்தது. உடனே சிறுவன் குரல் கொடுத்தான், “அந்த நாயைக் கொல்லுங்கள்” என்று.
மாணவர்களின் இம்மனநிலையை விளக்க ஒரு குட்டிக்கதை.
பல நோக்கங்கள் இப்படித்தான் திசை மாறிவிடுகின்றது. தேர்வு என்பது ஒரு மாணவன் எந்த அளவிற்கு பாடங்களை புரிந்து வைத்திருக்கிறான் என்பதை சோதிப்பதற்கான ஒரு முறை. ஆனால் பாடங்களை புரிந்து கொள்வதற்கான முக்கியத்துவம் குறைந்து வெறும் மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதும் என்றாகிவிட்டது, மேலே சொன்ன கதையைவிட சோகமான விஷயம்.
ஒரு மாணவன் வாங்கும் மதிப்பெண்ணுக்கும் அவன் உண்மையான கல்வியறிவிற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயம். சரி. இதையெல்லாம் எப்படி மாற்றுவது… தேர்வு பயத்தை எப்படி போக்குவது? என்று பார்ப்போம்.
மாணவர்களுக்கு தேர்வு பயமே நல்ல மதிப்பெண் வாங்கி பெற்றோரை திருப்திப்படுத்த முடியவில்லை என்பதால்தான் வருகிறது. மதிப்பெண்ணைவிட அறிவிற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை பெற்றோர்கள் உணர்த்திப் பாருங்கள். தேர்வு பயம் தன்னால் நீங்கிவிடும்.
அறிவுக்கே முதலிடம்:
மதிப்பெண்ணுக்கு பதில் அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தருவதால்தான் காப்பியடித்தல் பிட் அடித்தல் போன்ற தேர்வறைத் தவறுகள் அதிகமாகின்றன.
அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் யாருக்கும் இப்படிப்பட்ட தவறுகள் செய்ய வேண்டும் என்று தோன்றவே தோன்றாது. தகுதியடைய ஆசைப் படாமல் தகுதி இருப்பதாக காட்டிக்கொள்ள மட்டும் ஆசைப்படும் இந்த அசிங்கத்தை பெற்றோர்கள்தான் மாற்றவேண்டும்.
மதிப்பெண் பட்டியலுக்கு பதில் ஒவ்வொரு நாளும் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
பதில் எழுத அல்ல கேள்வி கேட்க பழகுங்கள்:
பதில் எழுதுவதல்ல, கேள்வி கேட்பதே கல்வி. தவளை நீரிலும் நிலத்திலும் வாழும் என்ற பாடத்தை படிக்கும்போது அந்த பதிலை மனப்பாடம் செய்வதல்ல கல்வி. ஏன் தவளை நீர் நிலம் இரண்டிலும் வாழ்கிறது? என்று கேள்வி கேட்பதுதான் கல்வி.
நம் குழந்தைகளுக்கு, கேள்வி கேட்கிற பழக்கம்தான் அறிவை வளர்க்கிற பழக்கமாக மாறும். எனவே படித்த பாடத்தில் பதிலை தேடாமல் புதிய கேள்விகளை கேட்டு அதற்கான பதிலை பாடம் தாண்டிய புத்தகங்களிலும் தேடி பதிலை கண்டறியச் சொல்லுங்கள்.
பயத்தைப் போக்க உற்சாகப்படுத்துங்கள்:
ஒருவன் எப்படி இருக்கிறானோ அப்படி நடத்தினால் அவன் அப்படியேதான் இருப்பான். ஒருவன் எவ்வாறு இருக்க வேண்டுமோ அவனை அவ்வாறு நடத்தினால் அவன் அவ்வாறு உயர்கிறான். என்ன தலைசுற்றுகிறதா? இதைப் புரிந்து கொள்ள எளிய ஓர் உதாரணம் பார்ப்போம்.
35 மதிப்பெண் வாங்கும் மாணவனை 35 மதிப்பெண் எடுத்தவனைப் போல நடத்தினால் அவன் 35 மதிப்பெண் எடுப்பவனாக மட்டுமே இருப்பான். 35 மதிப்பெண் வாங்கும் உங்கள் குழந்தை 50 மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் 50 மதிப்பெண் எடுத்தவனைப்போல அவர்களை நடத்துங்கள். அப்போது அவர்கள் உற்சாகம் பெற்று 50 மதிப்பெண் பெறுவார்கள். 50 மதிப்பெண் எடுப்பவர்கள் 75 மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் 75 மதிப்பெண் எடுத்தவனைப்போல் அவர்களை பாராட்டுங்கள். நிச்சயம் 75 மதிப்பெண் பெறுவார்கள்.
ஆனால் உண்மையில் நாம் அவர்களை எப்படி நடத்துகிறோம். யோசித்துப் பாருங்கள். 50 மார்க் எடுத்திருந்தால்கூட அவர்களை ஃபெயிலான மாணவர்கள் போலத்தான் நடத்துகிறோம். 50ஐ விடுங்கள் 80 எடுத்தால் கூட ஃபெயிலானவர்கள் போல நடத்தும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இதனால் ‘என்ன படித்து என்ன, நிச்சயம் இவர்கள் பாராட்டப் போவதில்லை’ என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது.
எனவே, எதற்கும் திட்டாதீர்கள். திட்டும்போது மனம் சோர்வடைகிறது. செயலற்ற நிலைக்கு சென்றுவிடுகிறது. இதுவே பாராட்டும்போது மனம் உற்சாகமடைகிறது. சுறுசுறுப்புடன் செயலாற்ற தயாராகிறது.
உங்கள் குழந்தை தேர்விலேயே தோல்வியடைந்திருந்தால்கூட நீங்கள் அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். நீ ஒன்றும் முட்டாள் அல்ல… உன் மதிப்பெண்கள் உன் முயற்சியைத்தான் குறிக்கிறதே தவிர. உன் அறிவை அல்ல… உன் முயற்சிகூடக் கூட உன் மதிப்பெண்ணும் கூடும் என்று பேசுங்கள்.
நாம் செய்த முயற்சி தான் மதிப்பெண்ணாக வருகிறது. எனவே மதிப்பெண் குறைந்தால் முயற்சியை கூட்ட வேண்டும் என்பதை உங்கள் குழந்தைக்கு உணர்த்த வேண்டும்.
40% உழைப்பு ‘ 40% மதிப்பெண்
60% உழைப்பு ‘ 60% மதிப்பெண்
80% உழைப்பு ‘ 80% மதிப்பெண்
90% உழைப்பு ‘ 90% மதிப்பெண்
100% உழைப்பு ‘ 100% மதிப்பெண்
இதையே ஒரு பேப்பரில் எழுதி குழந்தைகள் அறையில் அவர்கள் கண்ணில் படுகிறமாதிரி ஒட்டச் செய்யுங்கள்.
இந்த வகை முயற்சி உழைப்பை அதிகரிக்கச் செய்வதோடு ஏன் செய்யவேண்டும் என்கிற அறிவை ஏற்படுத்தி அவர்களை கண்டிப்பாக மாற்றமடையச் செய்யும்.
தள்ளிப்போடும் மனப்பான்மையை மாற்ற:
நன்றாக படிக்கும் மாணவர்களுக்கே கூட உள்ள பிரச்னை இது. நாளைக்கு செய்துகொள்ளலாம் என்று தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு பிறகு தள்ளிப்போடுவது என்பதே பழக்கமாகிவிடுகிறது.
பிறகு நாய் போர்வை வாங்கிய கதை போலத்தான் ஆகிவிடும். நாய் ஒன்று இரவில் குளிரும்போது முடிவெடுக்கும். நாளை காலை, முதல் வேலையாக போர்வை வாங்கிவிட வேண்டும் என்று.
மறுநாள் காலை வெயிலில், இரவில் குளிரடித்ததோ போர்வை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்ததோகூட ஞாபகம் இருக்காது. அன்று இரவு மறுபடி குளிரடிக்கும்போது மறுபடியும் நாளை கண்டிப்பாக போர்வை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுக்கும். ஆனால் மறுநாள் மறுபடி வெயிலில் எல்லாவற்றையும் மறந்துவிடும்.
நம் மாணவர்கள் கதையும்கூட இதுதான். ஒவ்வொரு முறை ஆண்டுத் தேர்வின் போதும் அளவுக்கதிகமான டென்ஷனால் அடுத்த வருடத்திலிருந்து வருட ஆரம்பத்திலிருந்தே படிக்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள். ஆனால் பள்ளி துவங்கியதும் ‘இப்பத்தானே லீவு முடிஞ்சிருக்கு…. இப்பத்தானே ஸ்கூல் ஆரம்பிச்சிருக்கு’ என்று ஒவ்வொரு நாளும் படிப்பதை தள்ளிப்போட்டுக்கொண்டே போவார்கள்.
இதை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் எழுந்திருக்கும் பழக்கம் தொடங்கி எந்த ஒரு வேலையையும் தள்ளிப்போடக்கூடாது என்று அறிவுறுத்துங்கள். உதாரணத்திற்கு காலையில் எழுவதை ஐந்து நிமிடம் தள்ளிப்போடுவதிலிருந்து அன்றைய தோல்விகள் ஆரம்பமாகின்றன என்ற வரிகளை அவர்கள் எழும் அறையில் ஒட்டிவைத்து உற்சாகப்படுத்தலாம்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியது.
வேலைகளை தள்ளிப்போட்டு தள்ளிப்போட்டு கடைசி நேர வேலைக்கு எல்லோரும் பழக்கப்பட்டு விட்டோம்.
தேர்வு பயத்தைப் பற்றி எழுதுவதைக்கூட, ‘இப்போது என்ன அவசரம் இன்னும்தான் தேர்வுகள் வரவில்லையே’ என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கும் எல்லாவற்றையும் கடைசி நேரத்தில் செய்து பழக்கமாகிவிட்டது என்று அர்த்தம்.
ஒரு செயலை செய்வதற்கு தேவைப்படும் நேரம் செயலை செய்வதற்கு கையிலிருக்கும் நேரம் ஆகும் என்பது போல ஒரு பாடத்தை படிப்பதற்கான நேரம் தேர்வுக்கான தேதி அறிவிக்கும் வரை என்ற எண்ணத்தை முதலில் உங்கள் குழந்தைகளிடமிருந்து எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாத தேர்வையும் ஆண்டுத்தேர்வு போல நினைத்து அக்கறையாக எழுதச் சொல்லி உற்சாகப்படுத்துங்கள்.
தேர்வை நினைத்து மட்டுமல்ல… தேர்வு நாளாகவே இருந்தால்கூட நீங்கள் முதலில் பதட்டமடையாமல் இருங்கள். ஏனெனில் உங்கள் பதட்டம் உங்கள் குழந்தைகளையும் அதிகம் பதட்டமடையச்செய்யும்.
தேர்வுக்கு முதல் நாள்கூட தாராளமாக விளையாட அனுமதியுங்கள். குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது. விளையாடும்போது மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு அதிகமாகிறது. இதன் மூலம் உற்சாகமாகவும் பதட்டமின்றியும் அவர்களால் இருக்க முடியும்.
நம்பிக்கையான வார்த்தைகளை மட்டும் சொல்லுங்கள். நிச்சயம் நீ நன்றாக தேர்வெழுதுவாய்… உன்னைத் தவிர வேறு யாரால் நன்றாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டுங்கள்.
பிறகு பாருங்கள், உங்கள் குழந்தைகள் ஜாலியாக படிப்பார்கள். ஈஸியாக ஜெயிப்பார்கள்.
4.வீழ்ச்சியை வென்றிடு! எழுச்சியாய் நின்றிடு!!
அலைகள் உள்ள இடம் தாண்டி அமைதியான இடம் நோக்கி படகை விடுவதால் மீனவர்கள் தொழிலும் நடக்கிறது. தொல்லைகளும் தீர்கிறது.
அலைகள் ஓயும்வரை கடலுக்குள் செல்வதில்லை என்று கரையிலேயே நின்றுவிட்டால், கடமையையும் செய்திருக்க முடியாது, காலத்தையும் வென்றிருக்க முடியாது.
அனைவரின் வாழ்க்கையும் ஏதாவது ஒரு அலையில் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறது. அலைகளிலிருந்து மீண்டு வர வேண்டுமா? அலைகளை கடந்து வர வேண்டுமா? அலைகளே இல்லாத கடல் இருக்க வேண்டுமா?
கடல் ஒன்று இருந்தால் அதில் அலை என்பது இருந்தே தீரும். அது போலத்தான், நன்மைகள், தீமைகள் அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை. தீமைகள் வரும்போது அதில் மாண்டு போகாமல் மீண்டு வாழ்வது எப்படி?
எப்படி கடலில் பல செல்வங்கள் இருப்பினும் அவரவர் தேடலுக்கு தகுந்தாற்போல் செல்வங்கள் கிடைப்பது போல, நமக்கு தேவையானவை இவ்வுலகில் எங்கே கிடைக்கின்றன என்பதை தேடிக் கண்டடைய வேண்டும்.
தேடல் எதை நோக்கி என்பதை தீர்மானிக்க வேண்டும். இன்று உலகின் வளர்ச்சி மிக வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. எதையும் மிக எளிதாக அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு மிக அருகிலும், மிக அதிகமாகவும் இருக்கிறது. ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி. அதற்கான படிப்பு. பயிற்சி, உழைப்பு, உண்மை, ஒழுக்கம், உயர்வான சிந்தனை, உயர்வேன் என்ற நம்பிக்கை இவைகளோடு புறப்படும்போது பயணமும் பாதையும் தெளிவாகின்றன.
சோர்வு இல்லாத ஒருவன் தேர்வு அடைவது எளிதா இல்லையா?
எனது அலுவலகத்திற்கு நல்ல விற்பனைத்திறன் உள்ள நண்பர் வந்திருந்தார். எங்களால் எந்தப் பொருளையும் உற்பத்தி செய்வது எளிதாகிறது. ஆனால் அதை விற்பனை செய்வது என்பது கடினமாக உள்ளது. அதற்கான வழிகளை கூறுங்கள் என்று அவரிடம் கேட்ட போது மிக எளிதாக ஓர் உத்தியை கூறினார்.
ஒரு அலுவலகத்திற்கு உள்ளே சென்றால் மூடியுள்ள கதவை தட்டினால் எப்படி உள்ளே வருமாறு அழைப்பு வருகிறதோ, அதுபோல ஒவ்வொரு இடமாக போய் நாம் தட்டுவதற்கு தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயணத்தை துவங்கினால் வெற்றி பெறுவது எளிது என்றார். இதைக் கேட்டவுடன் எனக்குள் மிகப்பெரிய ஆற்றல் வந்ததுபோல் உணர்ந்தேன்.
ஊதியத்திற்காகத்தான் அனைவரும் உழைக்கின்றோம். ஆனால் ஊதியத்துக்குத் தகுந்தாற்போல் தான் உழைப்பேன் என்று மனதுக்குள் ஒரு வேகத்தடை போட்டு வைத்துக் கொண்டால், உனக்குள்ளே போடப்பட்ட தடை உயரவிடாமல் செய்துவிடும். ஆகவே தடையில்லாமல் சென்றால் அடைய வேண்டிய தூரம் எளிதாகி அதனால் மகிழ்ச்சி கிடைக்கிறதோ அதுபோல் சிந்துகின்ற வேர்வையின் அளவைவிட கிடைக்கின்ற வெற்றியின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். வெற்றியின் வேகக் காற்று வேர்வைத் துளிகள் மீது பட்டு சோர்வை நீக்கிவிடும்.
கட்டாயக் கல்வி - காமராஜர்
கனவு காணுங்கள் - அப்துல்கலாம்
இத்தகைய கருத்துக்களை வேறு யார் கூறியிருந்தாலும் இவ்வளவு வலிமை இருந்திருக்காது. அது போலத்தான் இன்றைய தலைமுறையினரை வழிநடத்திச் செல்ல வந்த பெருந்தலைவர்களும், இளம் மந்திரிகளும், இன்றைய இளைஞர்களுக்கு நல்ல பல வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். அவர்கள் வாய்ப்புகளைத் தருவார்கள் என்று நம்புவதோடு மட்டுமல்லாமல் வாய்ப்பை வசப்படுத்திக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.
“உலக வீழ்ச்சியினை வென்றிடுவோம்
உவமையாய் நாமும் நின்றிடுவோம்.”
5.வலையைக் கிழித்து வெளியேறுங்கள்.
அத்தனை வெற்றிகளுக்கும் ஆரம்பப்புள்ளி, அதிருப்திதான் என்றார் ஒருவர். உண்மைதான்!
நாம் ஒவ்வொருவரும் தன்னிடம் இருக்கும் அடிப்படைத் திறமையே அபாரம் என்று நம்புகிறோம். ஆனால், அந்த அடிப்படைத் திறமை மீது நமக்கே அதிருப்தி தோன்றும் போதுதான், அந்த அடிப்படைத் திறமையை மேலும் வளர்க்கிறோம். அது அசாத்தியமான திறமையாக - அசைக்க முடியாத திறமையாக - வளர்ச்சி பெறுகிறது.
” என்ன செய்ய வந்தோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்” என்ற கேள்வியை எப்போதும் எழுப்பிக் கொண்டே இருப்பது நல்லது. ஒரு தனி மனிதனிடம் இருக்கிற ஆற்றலின் குணம் விசித்திரமானது. வேகமும் வெறியும் இல்லையென்றால், இது வேண்டிய அளவு வெளிப்படுவதில்லை. வெற்றிகரமான கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் வாழ்க்கை இதைத்தான் சொல்கிறது.
முதல் வாய்ப்பில் அவர்கள் முத்திரை பதித்துக் காட்டியதும், ரசிகர்கள் அவர்கள் மீது கவனம் செலுத்துகிறார்கள். உடனே எதிரணிக்கு அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்கிற வேகம் வந்துவிடுகிறது. ஆடுகளத்தில் மட்டையுடன் இறங்கும்போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரம், விளையாட்டு வீரர்களை உசுப்புகிறது. அவர்களை வீழ்த்த வேண்டுமென்பதில் எதிரணி காட்டும் தீவிரமோ அவர்களை வெளியேற்றி விடுகிறது. கடுமையான பயிற்சியும், தன்மேல் குவியும் கவனமும், அவர்களை இதுவரை அளித்திராத அளவுக்கு, திறமையை வெளிக் கொணர்கிறது.
எட்டிவிட்ட வெற்றிகள் அவர்களுக்கு ஒருபோதும் நிறைவைத் தருவதில்லை. “இன்னும், இன்னும்’!” என்கிற வேகத்தில்தான் அவர்கள் வீறுகொண்டு எழுகிறார்கள். “இதுபோதாது” என்ற எண்ணத்தில்தான் தங்கள் இலக்குகளை நீடித்துக் கொண்டே போகிறார்கள். கழுதையின் முன்பு நீட்டப்படும் காரட் மாதிரி, நீட்டப்படும் இலக்குகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
நாம் குழந்தைகளாக இருந்தபோது, நம் சக்திக்கு உட்பட்டதை செய்யத் தொடங்கிறோம். சுற்றியிருப்பவர்கள் நமக்கு உற்சாகம் தருவதற்காகப் பாராட்டுகிறார்கள். ஒரு குழந்தையை, குறிப்பிட்ட செயலுக்காகப் பாராட்டினால், குதூகலத்துடன் திரும்பத் திரும்ப அதையே செய்யும்.
இந்த குணம், வளர்ந்த பிறகும் வருவது தவறு. எது நமக்கு எளிதோ, அதையே திரும்பத் திரும்பச் செய்வது, பாதுகாப்பானதாக இருக்குமே தவிர, நம் செயல் திறனைப் பெருக்குவதாக இருக்காது. அப்படியானால், செயல்திறனின் உச்சத்தை பெருவதற்கு சிறந்தவழி, நம் பலவீனங்களிலிருந்து தொடங்குவதுதான்.
தேர்தல் நேரத்தில் தலைவர்கள் தங்களுக்கு சாதகமான தொகுதியில் போட்டியிடுவதை விரும்புவார்கள். ஆனால் மற்ற நேரங்களில், கட்சி எங்கெல்லாம் பலவீனமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை பலப்படுத்தவே விரும்புவார்கள். அதற்கான முயற்சிகளில், முனைப்புடன் இறங்குவார்கள்.
இது, தலைவர்களுக்கு மட்டுமல்ல, தலைவர் பண்புள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான இயல்பு.
இதற்கு அடுத்தபடி நிலை, ஏற்கனவே இருக்கிற திறமையை இன்னும் மேம்படுத்துவது. அன்றாட அலுவலகப் பணிகளில் இருந்து, ஆர்வமுடன் நீங்கள் வளர்த்துக் கொள்ளும் தனித்திறமைகள் வரை எல்லாவற்றிக்கும் இது பொருந்தும். வலிமையான விலங்குகளுக்கும் வலை விரிப்பார்கள். காட்டுக்குள், எங்கிருந்தோ பாய்ந்து வருகிற பலம்பொருந்திய விலங்குகள் அந்த வலையில் வீழ்ந்துவிடும்.
சாதனையாளர்களுக்கும் அப்படியொரு வலை, வழியெங்கும் விரிக்கப்படுகிறது. அது சதிவலையல்ல, சந்தோஷ வலை. நம்மில் பலருக்கு மிகவும் பிரியமான வலை. அதுதான் பாராட்டு என்னும் பெரிய வலை. குழந்தைப் பருவத்தில், எதற்காக நாம் பாராட்டப்படுகிறோமோ அதையே திரும்பத்திரும்ப செய்வது என்கிற குணம், வளர்ந்த பிறகும் நம்மில் படிந்து விடுகிறது. இதைத் தாண்டி வரவேண்டும்.
உங்கள் வெற்றிக்கான கரவொலி அடங்கும் முன்னே அடுத்த வெற்றிக்கான ஆயத்தங்களில் இறங்கி விட வேண்டும். அடுத்ததாய் என்ன செய்வார்கள் என்று அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதுதான், சாதனையாளர்களின் பொது இலக்கணம். அப்படி உங்களை மேம்படுத்திக் கொள்ள ஒவ்வொரு நாளும் படிப்புக்கும் - பயிற்சிக்கும் போதிய நேரம் ஒதுக்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். மிக உறுதியாய், ஒவ்வொரு நாளும் உங்கள் திசையில் முன்னேறிக் கொண்டே இருங்கள்.
SOURCE: NAMADHU NAMBIKKAI.
1.வெற்றியை விதைதிடுவோம்.
2.வெற்றிக்கு வழிகாட்டும் விழிப்பணர்ச்சி
3.வீட்டுக்குள் வெற்றி.

0 comments:
Post a Comment