பொய்களின் மறு உருவே புஷ் அரசு: ஆய்வு முடிவுகள்!
>> Thursday, January 24, 2008
வாஷிங்டன்: 2001 செப்டம்பர் நியூயார்க் இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின், திட்டமிட்டுப் பொய்களின் ஊர்வலத்தை நடத்திப் பொது மக்களைக் கடும் அச்சத்திலும் பீதியிலும் ஆழ்த்தி இராக் மீதான போர் ஏற்பாடுகளை புஷ் தலைமையிலான அரசு செய்ததாக அமெரிக்காவிலுள்ள இரு தன்னார்வ நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், சதாம் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்ததை மறுக்க இயலாது என்று மட்டும் தெரிவித்தார்.
2001ஆம் ஆண்டைத் தொடர்ந்து இராக்கைப் பற்றியும் சதாம் அரசைப் பற்றியும் மொத்தம் 935 ஆதாரமற்றப் பொய்கள் அறுதியிடப்பட்ட உண்மைகளாக உலகில் பரப்பப் பட்டன என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதில் புஷ் தலைமையிலமைந்த அரசு 532 சமயங்களில் இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும் சதாம் அரசு அல்காயிதாவிற்கு உதவி புரிவதாகவும் அறிக்கைகளிலும் ஆவணங்களிலும் தெரிவித்திருந்தது எனவும் அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
"இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பதும் சதாம் அரசிற்கு அல்காயிதாவோடுத் தொடர்பு இருந்திருக்கவில்லை என்பதும் தற்போது ஐயம் திரிபற நிரூபணமாகியுள்ளது. இந்த இரு காரணங்களைச் சொல்லியே இராக்கின் மீது போர் தொடுத்து அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை புஷ் அரசு அழித்துள்ளது" என்றும் அவ்வறிக்கை குற்றம் சாட்டுகிறது.
இப்பொய்களைப் புனைந்த பொய்யர்கள் பட்டியல் புஷ் முதல் தொடங்கி, டிக் செனி, கோண்டலீசா ரைஸ், டொனால்ல்டு ரம்ஸ்ஃபெல்டு, காலின் பவல், பால் உல்ஃபோவிட்ஸ் என நீள்கிறது.
இப்பொய்களை மக்கள் மத்தியில் பெருமளவு நிலைகொள்ளச் செய்ததில் பொறுப்பின்றிப் பக்கச்சார்புடன் செயல்பட்ட ஊடகங்களுக்கும் பெரும் பங்கு உள்ளது என்றும் அவ்வறிக்கை கவலை தெரிவிக்கிறது.
இவ்வறிக்கைகளின் முழுவடிவத்தையும் கீழ்க்கண்ட முகவரிகளில் படிக்கலாம்:
Center For Public Integrity: http://www.publicintegrity.org/default.aspx Fund For Independence in Journalism: http://www.tfij.org/
THANKS TO: http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=728&Itemid=130
0 comments:
Post a Comment