**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

கூடை கூடையாக குழந்தைகளைக் கடத்தும் பயங்கரம்

>> Friday, February 16, 2007

கூடை கூடையாக குழந்தைகளைக் கடத்தும் பயங்கரம்

இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு முன் சென்னயில் சின்னஞ்சிறுவனாகக் காணாமல் போன தன் மகனை இப்போது
நெதர்லாந்து நாட்டில் கண்டு பிடித்திருக்கிறார் ஒரு தாய். நெகிழ வைக்கும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னணியில் பதற வைக்கும் பல சங்கதிகள் உள்ளன. தத்தெடுப்பு என்ற போர்வையில் பிள்ளை பிடிக்கும் தனியார் நிறுவனங்கள் சென்னயிலிருந்து ஐரோப்பா கண்டத்துக்கு கூடை கூடையாக குழந்தைகளைக் கடத்தும் பயங்கரம் தெரிய வந்ள்ளது.

அந்தப் பெண்ணின் பெயர் மேரி. சென்னை வியாசர்பாடி பக்தவத்சலம் தெருவைச் சேர்ந்த அவருக்கு மொத்தம் ஏழு குழந்தைகள். கணவர் பிலிப் யாகப்பன். அவருக்கு மும்பை துறைமுகத்தில் தொழில் நுட்பப் பிரிவில் வேலை. 76ம் ஆண்டு மேரியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிலிப் யாகப்பன் குடும்பத்தைப் பிரிந்து விட்டார்.

ஏழு குழந்தைகளுடன் வாய்க்கும் கைக்கும் போதாமல் தவித்த மேரிஇரண்டு மகள்கள் உட்பட ஆறு குழந்தைகளை ஒரு ஹாஸ்டலில் சேர்த்தார். இரண்டு வயதான மகன் மாணிக்க ஏசுராஜை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டார்.

வாழ்க்கையை ஓட்ட வழி தேடிய அவருக்கு ஆறுதல் தர முன்வந்தவர் 'ஆறுதல்' மாதா தேவாலயத்தின் பாதிரியாரான பிரான்ஸிஸ் சுலூஸ். மூங்கில் கூடை பின்னும் வேலையை மேரிக்கு அவர் வாங்கித் தந்தார். வேலைக்குச் செல்லும்போது குழந்தை மாணிக்க ஏசுராஜை பாதிரியாரிடம் விட்டுவிட்டுச் செல்வார் மேரி.

இதற்குமேல் நடந்ததது இதோ மேரியே நம்மிடம் இப்படி விவரித்தார். 'அப்போது குழந்தை ஏசுராஜ் மிக அழகாக இருப்பான். அவனை பாதிரியார் பிரான்ஸிஸ் அடிக்கடி போட்டோ எடுப்பார். திடீர்னு ஒருநாள் குழந்தை காணாமல் போய் விட்டான். துடித்துப் போய் பாதிரியாரிடம் கேட்டேன். மழுப்பலாகப் பதில் சொன்னார்.

வியாசர்பாடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். இந்தப் புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் தினகரன் மாற்றலாக அவருக்குப் பிறகு வந்த இன்ஸ்பெக்டர் பாதிரியார் பக்கம் சேர்ந்து கொண்டு என்னை விரட்டியடித்தார். பைத்தியம் பிடித்தது போல மகனைத் தேடி அலைந்தேன்.

கடைசியாக இருபத்தொன்பது வருடங்கள் கழித்து அவன் நெதர்லாந்து நாட்டில் இருப்பதை இப்போது கண்டு பிடித்திருக்கிறோம். என் நிலைமை எந்தத் தாய்க்கும் வரக் கூடாது' என்று அந்த அறுபத்தாறு வயது மூதாட்டி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

'அதுசரி! மாணிக்க ஏசுராஜை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?' என்று கேட்டோம். இதற்குப் பதிலளித்தவர் மேரியின் மகள் லூர் மேரி. இவர் லண்டனில் நர்ஸாகப் பணிபுரிகிறார்.

'1988_ம் வருடத்திலிருந்தே தம்பியைத் தேடு தேடென்று தேடி வந்தோம். ஆறுதல் மாதா தேவாலய ஊழியர்கள் சிலரை நண்பர்களாக்கி பாதிரியாரின் தனியறையில் தேடச் செய்தோம். அதில் சில ஆதாரங்கள் கிடைத்தன.

அதில் தம்பி ஏசுராஜ் வெளிநாட்டுத் தம்பதிகளோடு இருக்கும் படமும் அடங்கும். 'இந்தக் குழந்தைக்கு உறவினர்கள் யாரும் இல்லை' என்று பாதிரியார் தயாரித்த கடித நகலும் கிடத்தது. போட்டோவின் பின்னால் புரியாத மொழியில் வாசகங்கள் இருந்தன. அது நெதர்லாந்து நாட்டு மொழி (டச்சு மொழி) எனக் கண்டு பிடித்தோம்.

நான் லண்டனில் இருந்தபடியே நெதர்லாந்து நாட்டுச் சேவை நிறுவனங்கள் தூதரகத்தில் உள்ள பழைய பைல்கள் மூலம் விசாரித்து தம்பியைக் கண்டுபிடித்தோம். அவன் டோனி பிளின் பெர்க் என்ற டீச்சர் வீட்டில் வளர்வது தெரிய வந்தது.

பாதிரியார் பிரான்ஸிஸ் என் தம்பியின் பாதுகாவலர் அவர்தான் என்பது போல கையெழுத்துப் போட்டு பாஸ்போர்ட் தயாரிக்க உதவியிருக்கிறார். நாங்கள் குடியிருப்பது வியாசர்பாடியில். ஆனால் பாஸ்போர்ட்டில் நுங்கம்பாக்கம் கிரீன்வேஸ் லேன் என போலியான முகவரி இருந்தது. அதுவே அப்பட்டமான மோசடி.

தம்பியை எங்களுடன் அனுப்பும்படி கேட்டபோது வெளிநாட்டுத் தம்பதியினர் மறுத்துவிட்டனர். இதனால் சட்டப்படி தம்பிய மீட்க மகாகவி பாரதியார் நகர் போலீஸ் உதவி கமிஷனர் விமலாவிடம் புகார் அளித்தோம். தம்பி இப்போது வணிகவியலில் பி.எச்.டி. முடித்து விட்டு வங்கியில் வேலை பார்க்கிறார். விரைவில் தம்பியை மீட்போம்' என்றார் அவர் நம்பிக்கையுடன்.

இதுபற்றி மாநகர போலீஸ் இணை கமிஷனர் ரவியிடமும் மேரி புகார் அளித்திருக்கிறார். 'இந்தப் பிரச்னையில் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறேன்' என அவர் வாக்குறுதியளித்திருக்கிறார்.

லூர்மேரியிடம் மேலும் பேசியபோது பல பகீர் தகவல்களை வெளியிட்டார். ''என் தம்பியைக் கடத்தியதுபோல தமிழ்நாடு கேரளா ஆந்திரா மாநிலங்களில் பிள்ள பிடிப்பதற்கென்றே ஆயிரக்கணக்கான தனியார் ஏஜென்ஸிகள் செயல்படுகின்றன. முக்கிய வி.ஐ.பி.களும் போலீஸ் அதிகாரிகளும் இதற்கு உடந்தை.

வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை இவர்கள் குறி வைப்பார்கள். அந்தக் குழந்தையை தங்கள் செலவில் படிக்க வைப்பதாகக் கூறி ஒரு பள்ளியில் சேர்ப்பார்கள்.

அந்தக் குழந்தையின் படத்தை இண்டர்நெட் மூலம் வெளியிடுவார்கள். இதைப் பார்க்கும் வெளிநாட்டினர் குழந்தையை வாங்க வருகின்றனர். பிரபல நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு ரூம் போட்டு குழந்தையின் நிறம் உருவம் அழகு வெளிநாட்டுக்காரரின் பாக்கெட் கனம் இவற்;றைப் பொறுத்து விலை தீர்மானிக்கப்படுகிறது.

அதன் பிறகு எமிக்ரேஷனில் பணத்தைக் கொடுத்து ஒரு வருட விசாவில் அந்தக் குழந்தையை நார்வே இத்தாலி ஜெர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்புகின்றனர். விசா முடிந்ததும் குழந்தைக்கு ஒரு வழியாகக் குடியுரிமை கிடைத்துவிடும். தத்தெடுப்பு என்ற பெயரில் ஒரு வெளிநாட்டவரின் வீட்டில் குழந்தை தள்ளப்படும். இதற்காக ஏஜென்ஸிக்குக் கிடைக்கும் தொகை பத்து லட்ச ரூபாயிலிருந்து ஐம்பது லட்ச ரூபாய் வரை.

இப்படி குழந்தைகளைக் கடத்தி விற்பதற்காகவே சென்னயில் எழும்பூர் சேத்துப்பட்டு பரங்கிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் ஏஜென்ஸிகள் உள்ளன. பல ஆயிரம் குழந்தைத் தத்தெடுப்பு வெப்சைட்கள் உள்ளன. இதுகுறித்த ஆதாரங்களும் உள்ளன!' என்றவாறு போலிச் சான்றிதழ்களைக் காட்டி நம்ம வியப்பின் விளிம்புக்குத் தள்ளினார் லூர் மேரி.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலரிடம் விசாரித்தோம். 'மாணிக்கம் ஏசுராஜனைப்போல பலநூறு குழந்தைகள் இப்படி மாயமாகி ஐரோப்பிய நாடுகளில் தலைகாட்டும் அவலம் உள்ளது. உதாரணமாக மேயர் பெயரைக் கொண்ட தெருவில் வீட்டு வேலைக்குப் போகும் ஒரு பெண்ணின் குழந்தயை இதே ஸ்டலில் ஒரு பங்களா வி.ஐ.பி. கடத்தி வெளிநாட்டிற்கு விற்றிருக்கிறார். குறிப்பாக தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்குப் பிழைப்புத் தேடி வரும் பெற்றோர்களின் குழந்தைகள் குறிவைத்துக் கடத்தப்படுகின்றன.

பெற்ற குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு கதறும் தாய்மார்களை அடியாட்களை வைத்து மிரட்டி அவர்கதளை வாயை அடக்கும் அநியாயமும் நடந்து வருகிறது. குழந்தைகளை இழந்து தவிக்கும் ஏழைபாழைகளின் புகார்கள் காவல் நிலையங்களில் கண்டுகொள்ளப்படுவதே இல்லை!' என்று அங்கலாய்த்தார்கள் அவர்கள்.

சென்னையில் உள்ள சமூகசேவை அமைப்பின் நிர்வாகி ஒருவர் வேறொரு தகவலை நமக்குத் தெரிவித்தார். 'இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மக்கள் தொகை மளமளவெனக் குறைந்து போனது. அதை ஈடுகட்டத்தான் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார்கள்.

குழந்தைகளைக் கடத்தும்போது எமிக்ரேஷன் அதிகாரிகளுக்கு 'கட்டிங்' கொடுத்தால் அவர்கள் குடையமாட்டார்கள். இங்கிலாந்து நாட்டைத் தவிர மற்ற நாடுகளில் அதிக கெடுபிடி கிடையாது.

ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவசப் படிப்புதான். அவர்கள் படித்து முடித்ததும் வளர்ப்புத் தாய்க்கு. லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொடுக்கிறார்கள். ஏசுராஜ் விஷயத்திலும் அதுதான் நடந்துள்ளது. இந்த மோசடி

ஏஜென்ஸிகளப் பிடித்துக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்!' என்று ஆவேசப்பட்டார் அவர்.

கடைசியாக நாம் பார்த்த புளியந்தோப்பு போலீஸ் துணகமிஷனர் சம்பத்குமார்.

'ஏசுராஜ் இப்போது மேஜர். அவர் இந்தியா வருவது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். பாதிரியார் பிரான்ஸிஸ் இறந்து விட்டார். ஏசுராஜ் காணாமல் போனது பற்றி 76_ம் ஆண்டு வியாசர்பாடி ஸ்டேஷன்ல மேரி புகார் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. தவறு நடந்திருந்தால் நடவடிக்கை உறுதி!' என்றார்.

'தத்தெடுப்பு என்ற போர்வையில் சென்னை;யில் இருந்து குழந்தைகள் கடத்தப்படுகிறதே?' என்றோம்.

''உண்;மைதான். 2005_ம் ஆண்டு ஓட்டேரி பகுதியில் காணாமல்போன ஒரு குழந்தையைப் பற்றி விசாரித்தபோது 'மலேசியன் சோசியல் சர்வீஸ்' என்ற அமைப்பின்மேல் சந்தேகம் ஏற்பட்டது. ஏழு குழந்தைகள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. சி.பி.சி.ஐ.டி. விசாரித்து குற்றவாளிகள் கைதானார்கள்.

'அடாப்ஷன்' விஷயத்தில் கடுமையான விதிமுறைகள் இருந்தாலும் யாரும் பின்பற்றுவதில்லை. தத்தெடுப்பு நடக்கும்போது உள்ளூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்த விதியையும் யாரும் கடைப்பிடிப்பதில்லை.

குழந்தை காணாமல் போனாலோ தத்துக்கொடுக்க விரும்பினாலோ சாட்சிகள் சரியாக விசாரிக்கப்பட வேண்டும். வருங்காலத்தில் தனியார் ஏஜென்ஸிகளில் அடிக்கடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்!' என்றார் அவர் தெளிவாக.

மேரியைப் போல இன்னும் எத்தனை ஏழைத் தாய்மார்கள் குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டுத் தேடுகிறார்களோ? அட தேவுடா!

படங்கள்: ஞானமணி
விஜயானந்த்
NANDRI: "REPORTER"

0 comments:

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP