**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

நீங்களா பாபர் மசூதியை இடிக்க சொன்னீர்கள்? . சு.அறிவுக்கரசு. PART 3.

>> Friday, June 12, 2015

நீங்களா கொலை செய்ய சொன்னீர்கள்? நீங்களா முஸ்லீம் பெண்களை மானபங்க‌ப்படுத்த சொன்னீர்கள்? பாபர் மசூதியில் இருட்டில் திருட்டு ராமன். சு.அறிவுக்கரசு. PART 3.


இடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா? இந்து மக்கள் விருப்பம் என்றான். உன்னை கேட்டானா?
பௌத்தத்தையும் சமணத்துவத்தையும் தனக்கு பிடிக்காத அனைவரையும் ஈவிரக்கமில்லாமல் கொன்றொழிழத்த கும்பல்தான் பாபர் மசூதியை தகர்த்திருக்கிறது. இந்த காலித்தனத்தை கொலை பாதகத்தை பெரும்பான்மை இந்துக்களின் விருப்பம் என்று சொல்லி விடுகிறது.

டிசம்பர் 6 1992 பாபர்மசூதி இடிக்கப்பட்டு உலக அரங்கில் இந்தியா அவமானத்தால் தலை குனிந்த தினம்.

1992 ஆம் ஆண்டு திசம்பர் 6 ஆம் நாள் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்ட நிகழ்வு இந்திய அரசமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கை என்பது நடைமுறையில் இல்லை என்பதை உலகில் அம்பலமாக்கிய ஒன்றாகும்.

மசூதியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னதாக மசூதிக்கு போகும் வழிகளில் வசித்த இசுலாமியர்கள் வம்படியாக சண்டைக்கு இழுக்கப்பட்டனர்.

மசூதி அருகில் இருந்த இசுலாமியர்களின் மயானம் கைப்பற்றப்பட்டு அது தோண்டி சுத்தம் செய்யப்பட்டது.

இசுலாமியர்களின் பிணங்களை அங்கு புதைக்க விடாமல் தடுத்து, பக்கத்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இதுபற்றி நகர நீதிபதிக்கும், மாவட்ட நீதிபதிக்கும் புகார்கள் தரப்பட்டன. இந்து மகா சபையின் தீவிர ஆதரவாளர்களான நீதிபதிகள் இருவரும் புகார்களை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்தார்கள்.

அப்போதைய உத்திர பிரதேச முதல்வராக இருந்த கோவிந்த வல்லப பந்த் தீவிர வலதுசாரி, குறிப்பாக இந்து மதவெறியின் ஆதரவாளர்.

அயோத்தியில் அப்போது மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்த சோசலிஸ்டு ஆச்சார்யா நரேந்திர தேவ்-ஐ வீழ்த்த, ‘நரேந்திர தேவ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்‘ எனப் பிரச்சாரம் செய்து இந்துக்களின் ஓட்டைக் கைப்பற்ற முனைந்தார் பந்த். அதோடு காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினரான பாபா ராகவ் தாசும் இந்து மகா சபைக்கு தனது ஆதரவை அளித்தார்.

அரசு அதிகாரிகளும் ஆதரவாக செயல்பட்டதால் இந்து மகா சபைக்கு தன் காரியத்தை முடிப்பது எளிதாக இருந்தது.

இசுலாமியர்களோ அரசும், அதிகாரிகளும் கைவிட்ட நிலையில் பீதியில் உறைந்து போய் இருந்தனர்.

இந்து மகா சபை இன்னும் வேகமாக வேலை பார்த்தது. பாபர் மசூதியே ஒரு ஆக்கிரமிப்புக் கட்டிடம் என பிரச்சாரங்கள், துண்டறிக்கைகள், கூட்டங்கள் அயோத்தி முழுவதும் நடத்தப்பட்டன.

பாபர் மசூதியை காப்பாற்றும் இசுலாமியர்களின் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகின.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு முன்பிருந்தே இரண்டு பொய்களை பா.ஜ.க தொடர்ந்து சொல்லி வருகிறது.

ஒன்று, பாபர் மசூதியில் எப்போதுமே தொழுகை ஏதும் நடைபெற்றதில்லை;

இரண்டாவது, மசூதியினுள் ராமர் சிலை தன் பிறப்பிடத்தில் சுயம்புவாக தோன்றியது.

இந்த இரண்டு பொய்களும் திட்டமிட்டு இந்து மகா சபையினரால் உருவாக்கப்பட்டன.

இந்து மதவெறியின் செல்வாக்கினால் இந்துக்களின் வாக்குகள் கிடைக்கும் என்பதால் காங்கிரசு கட்சி, பா.ஜ.க.-க்கு போட்டியாக இத்தகைய சதி வேலைகளுக்கு மறைமுகமாக ஆதரவாகவே இருந்தது.

எனவே பாபர் மசூதி இடிப்பையும், ராமர் சிலை திணிப்பையும் ஏதோ இந்துமத வெறியர்களின் செயலாக மட்டும் நாம் புரிந்து கொள்ள முடியாது.

அவர்களுக்கு துணையாக ஊடகங்கள், நீதிமன்றங்கள், அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம் என அனைத்தும் இருக்கின்றன என்பதே இந்துமத வெறியர்களின் பலம்.

இந்த பலத்தை தகர்த்து, உழைக்கும் மக்களுக்கு உண்மையினை உணர்த்தாத வரையிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பது வரலாற்றில் கருப்பு தினமாகவே தொடரும். -ஆதவன்

பாபர் மசூதியில் இருட்டில் திருட்டு ராமன்.- சு.அறிவுக்கரசு. PART 3.

அன்றே அரசு நிருவாகத்தில் நுழைந்த இந்துத்துவா!-

நாயர் அய்.சி.எஸ். அதிகாரி. இந்திய விடுதலைக்கு முன்பே இந்துமத வெறித் தன்மையுடன் அரசுப் பணியில் இருந்தவர். கலெக்டர் பதவியில் இருந்து கொண்டே தன் மத வெறியுடன் கடமை ஆற்றிய கயவர்.

கோண்டா மாவட்டத்திலிருந்து பைசாபாத் கலெக்டராக 1.6.1949இல் மாறுதல் செய்யப்பட்ட இவர், மசூதியைக் கைப்பற்றிட இந்து மகா சபாக்காரர்களுக்குப் பெருமளவில் நேரடியாகவே உதவிகளைச் செய்தவர். அதன் காரணமாக அரசு இவரை நீண்டகால விடுப்பில் செல்லுமாறு உத்தரவிட்டது. விடுப்பு முடிந்ததும் ஓய்வு பெற்று வீட்டுக்குச் செல்லுமாறு அரசு ஆணையிட்டது.

அரசுப் பணியைத் தன் மதவெறியால் இழந்தாலும் பைசாபாத் கலெக்டராக ஒன்பதரை மாத காலம் பணி செய்தபோது ஏராளமான நன்செய், புன்செய் நிலங்களைச் சம்பாதித்துவிட்டார். அதைப் பற்றிய விவரம் பின்னால் தரப்படும்.

தென்கோடிக் கேரளத்தில் ஆலப்புழையில் பிறந்து வடகோடிக்கு அயோத்யாவில் (பைசாபாத் மாவட்டத்தில் அடங்கியதுதான்) மதவெறியுடன் பணிபுரிந்தவர் மலையாளி கே.கே.கே.நாயர்.

காந்தியாரைக் கொலை செய்யவேண்டும் என்று தில்லியில் கன்னாட் பிளேசில் கூட்டம் ஒன்றில் பேசியது மகந்து திக்விஜய் நாத். காந்தியார் கொலையில் சாவர்க்கரைப் போலவே கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர். என்றாலும், ஜஸ்டிஸ் ஜீவன் லால் கபூர் தலைமையிலான விசாரணைக் கமிஷனால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்.

1934இல் நடந்த ஒரு கலவரத்தின்போதுகூட பாபர் மசூதி தாக்கப்பட்டுச் சேதமடைந்துள்ளது, ஷாஜஹான்பூர் எனும் பக்கத்துக் கிராமத்தில் பசு மாட்டை வெட்டிச் சாப்பிட்டனர் எனக்கூறி இசுலாமியர் மீது தாக்குதல். அதைச் சாக்காக வைத்து பாபர் மசூதி சேதப்படுத்தப்பட்டது. அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசு மசூதியைச் சீர்செய்து தந்தது. அவ்வப்போது இம்மாதிரித் தாக்குதல்களுக்கு மசூதி ஆளானது உண்டு. ஆனாலும் பெரிதாக எதுவும் நடக்கவில்லை ஆங்கிலேயர்ஆட்சியில்.

சுதந்திர இந்தியாவில்...

ஆனால் 1949இல் நிலைமை வேறு. இந்தியா, இந்துக்களிடம் இருந்தது. சோமநாதபுரத்தில் இந்துக் கோவிலை இந்திய அரசு புதிதாகக் கட்டித் தந்தது. ஜுனாகத் சிற்றரசில் இருந்தது இந்தக் கோவில். ஜுனாகத் அரசர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார். ஆனால் சுதந்திர இந்திய அரசு, ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்தியாவுடன் இணைத்துக் கொண்டது. இதனை ஏற்பாடு செய்ய ஜுனாகத்திற்கு வருகை தந்த வல்லபாய் படேல் இந்துக் கோவிலைப் புதிதாகக் கட்டித்தர 12.11.1947இல் இந்திய அரசு ஏற்பாடு செய்யும் என்று அறிவித்தார். அரசுப் பணத்தை இதற்காகச் செலவிடவும் முன்வந்தார். ஆனால், காந்தியார் தலையீட்டால் அது தவிர்க்கப்பட்டு, நன்கொடைகள் வசூலிக்கப்பட்டுக் கட்டப்பட்டது.

கோவில் கட்டும் பணியைக் கவனிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. கே.எம்.முன்ஷி எனும் குஜராத்திப் பார்ப்பனர் அதன் தலைவர். இவர் 1941ஆம் ஆண்டில் காங்கிரசிலிருந்து ராஜிநாமா செய்து இந்து மகா சபாவில் சேர்ந்தவர். என்றாலும், 1946இல் மீண்டும் காங்கிரசுக்குத் திரும்பி வந்த இந்துமத வெறியர். இந்திய அரசமைப்புச் சட்டம் எழுத அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றிருந்த ஆறுபேரில் ஒருவர். நான்கு பார்ப்பனர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் இவர் ஒருவர். மீதி மூன்று பேர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, என்.கோபால்சாமி அய்யங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்பவர்கள்.

சதிக் கும்பலில் பார்ப்பனர்

பாபர் மசூதியை இடிப்பதற்கும் ராமன் கோவில் கட்டுவதற்கும் தீட்டப்பட்ட திட்டத்திற்குத் தோன்றாத் துணையாக இருந்து பலவகையிலும் உதவிகளைச் செய்தவர் உத்திரப் பிரதேச முதலமைச்சராக இருந்த பார்ப்பனர் கோவிந்த் வல்லப பந்த் என்பவர். அம்மாநிலத்தில் அவருக்கு எதிரியாக விளங்கியவர் மிகப் பிரபலமான சமதர்மவாதியான ஆசார்ய நரேந்திர தேவ் என்பவர்.

இவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனைப் பின்பற்றியவர். சீரிய பகுத்தறிவாளர். அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். என்றாலும் இந்திய விடுதலைக்குப் பிறகு மாறிய அரசியல் சூழ்நிலையில் பதவியில் நீடிப்பது தார்மீக ரீதியில் சரியல்ல எனக் கூறிப் பதவியை விட்டு விலகி, மீண்டும் தேர்தலை எதிர்கொண்டார். காங்கிரசுக் கட்சி இப்போது போலவே, அப்போதும் பல்வேறு கோஷ்டிகளுக்குப் பெயர் பெற்றது. நரேந்திர தேவ் தலைமையிலான கோஷ்டி சோஷலிசக் கொள்கை கொண்டது. ரஃபி அகமது கித்வாய் கோஷ்டி மதச்சார்பின்மையை வலியுறுத்தியது. முதலமைச்சராகிவிட்ட கோவிந்த் வல்லப பந்த் கோஷ்டி பிற்போக்குக் கொள்கைகளையும் மதவெறிச் சக்திகளின் ஆதரவையும் கொண்டது.

காங்கிரஸ் கோஷ்டிச் சண்டை

பந்த் கோஷ்டி கித்வாய் கோஷ்டியை ஓரங்கட்டிவிட்டு, நரேந்திர தேவ் கோஷ்டியை எதிரியாகப் பார்த்தது. இடைத்தேர்தலை எதிர்கொண்ட நரேந்திர தேவுக்கு எதிர்ப்பாக வேலைசெய்து தோற்கடித்தது. நரேந்திர தேவுக்கு எதிராக பந்த் நிறுத்திய ஆள் பாபா ராகவ் தாஸ் எனும் இந்து சாமியார். சமதர்மிக்கு எதிராக சாமியார். நரேந்திர தேவுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதையே தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் திரும்பத்திரும்பப் பேசி மதவெறி கொண்ட மக்களைத் திருப்பி வெற்றி கண்டார். ராமனை மதிக்காத மனம் கொண்டவர் நரேந்திர தேவ் என்பதைப் பற்றிப் பேசினார். இந்துக்கள் வைத்துக் கொள்ளும் குடுமியை வைத்துக் கொள்ளாமல் கிராப் வெட்டிக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டினார். சமக்கிருதம் கலந்த இந்தி மொழிக்குப் பதிலாக உருது கலந்ததும் மக்களால் பேசப்படுவதுமான இந்துஸ்தானி மொழியை விரும்புவதைக்கூட ஒரு குற்றச்சாற்றாகப் பிரச்சாரம் செய்தனர்.

காங்கிரசு வேட்பாளர் பாபா ராகவ் தாஸ், வாக்காளர்களுக்குத் துளசிப் பிரசாதம் கொடுத்து மத உணர்ச்சியைத் தூண்டினார். பாபாவும் முதலமைச்சர் பந்த்தும் பார்ப்பனர்கள் என்பதை எல்லா வகையிலும் வெளிப்படுத்தினர். ஜாதியும் மதமும் வென்றன. நேர்மையும் தூய கொள்கையும் தோற்கடிக்கப்பட்டன.

இந்து மதத்தவரின் வேட்டைக்காடாக அயோத்தியா மாற்றப்பட்டது. பாபர் மசூதியை அழிப்பதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சி இருந்தவரை வெற்றிபெற முடியாதவர்கள் விடுதலை பெற்ற இந்தியாவில் வாலாட்டம் காட்டி வெற்றிப் பாதையில் நடக்கத் தொடங்கினர். காங்கிரசுக் கட்சியும் ஆட்சியும் நிகழ்த்திய சாதனை இது!

ராமாயண மகா சபா

ராமஜென்ம பூமி என்ற பிரச்சாரம் வலுவாக்கப்பட்டது. இதற்கெனத் தனியான அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. அகில இந்திய ராமாயண மகாசபா எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்துமகா சபாக்காரர்களே பொறுப்பாளர்கள் ஆயினர். ஒன்பது நாள் உற்சவமாக ராமாயணப் பிரசங்கம் நடத்தப்பட்டது. அனுமன் பிறந்த நாள் எனக் கூறப்பட்ட கார்த்திகை மாதத் தேய்பிறை 14ஆம் நாளில் தொடங்கியது. கடைசி நாளான 28.10.1949இல் பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. பாபா ராகவ் தாஸ், மகந்து திக்விஜய நாத் மற்றும் சாமியார் கர்பாத்ரி ஆகியவர்கள் பேசினர். ராமனின் கல்யாணம் நடந்த நாள் எனப்படும் நவம்பர் 24இல் ராமச்சந்திரபுதாராவில் வைக்கப்பட்டு இருந்த குழந்தை ராமனின் பொம்மையை பாபர் மசூதிக்குள் வைத்துவிட வேண்டும் என்ற கருத்து பேசப்பட்டது. ராமன் பிறந்த இடம் பாபர் மசூதிக்குள்தான் இருக்கிறது என்பதுதான் அவர்களின் பிரச்சாரம்! இதனை ஆரம்பித்து வைத்துப் பேசியவர் பாபா ராகவ் தாஸ். காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் ஆன பார்ப்பனர்.

5.3.1950இல் பிரதமர் நேரு, உத்திரப் பிரதேச உள்துறை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரிக்கு எழுதி பாபர்மசூதி விசயத்தில் காங்கிரசுக்காரர்களாகிய ராகவ்தாஸ் மற்றும் விஷாம்பர் தயாள் திரிபாதி (இருவரும் பார்ப்பனரே). இதில் ஈடுபாடு காட்டுவதையும் கவலையோடு சுட்டிக் காட்டினார். இது காங்கிரசுக் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டினார். பலன் என்ன? எதுவுமே இல்லை!

அடித்தளம் அமைத்தனர்

அயோத்யா நகரில் ராமன் பிறந்த இடம் இதுவே என்று சத்தியம் செய்து பணவசூல் செய்யும் இடங்கள் நிறையவே உள்ளன. என்றாலும், மாற்று மதத்தினரின் மசூதியை அப்புறப்படுத்த வேண்டும் என்கிற கெட்ட உள்நோக்கத்துடன் பாபரிமசூதிக்கு 100 அடி தூரத்தில் மேடை ஒன்றை அமைத்தனர். ஆறு அடி உயரத்தில் அமைக்கப்பட்ட மேடை 21 அடி நீளமும் 17 அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டது. மசூதிக்கு வடக்குப் பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் கூட்டம் நிற்பதற்கு வாய்ப்பாக உள்ள இடத்தில் மேடையை அமைத்தனர்.

இதேமாதிரி பாபர் மசூதிக்குப் பக்கத்தில் உயரமான, நிரந்தர மேடை அமைப்பது 1949இல் மட்டும் புதிதாக நடந்தது அல்ல. 1858இல் சிப்பாய்க்கலகம் முடிந்த பிறகு கட்டப்பட்டது. இதனை அப்போதே முசுலிம்கள் எதிர்த்தனர். ஒட்டகம் மூக்கை மட்டும் உள்ளே நுழைத்துக் கொள்ள அனுமதிகேட்ட கதை போல, இந்துக்கள் மேடை கட்டினர். எதிர்த்து இசுலாமியர்கள் வழக்குப் போட்டனர். மவுலவி முகமது அஸ்கர் என்பவர் 30.11.1858இல் மாஜிஸ்திரேட்டிடம் புகார் மனு கொடுத்தார். இவர் பாபரி மசூதியின் பொறுப்பாளரும் காப்பாளருமாக இருந்தவர். 1860, 1879, 1883, 1884 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ந்து முறையீடுகள் தரப்பட்டன.

1885ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ரகுபர்தாஸ் எனும் இந்து ஒருவர் பைசாபாத் சப்ஜட்ஜ் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தொடுத்தார். சப்ஜட்ஜ் பெயர் பண்டிட் ஹரிகிஷன். இவர் வழக்கைத் தள்ளுபடி செய்து ஆணையிட்டார். 1885 டிசம்பர் 24இல் தீர்ப்பு வழங்கினார். ஆறுமாதம் கழித்து, தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யப்பட்டது. அதுவும் 1886 நவம்பர் 1ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

சட்டரீதியாகத் தோற்றுப் போனவர்கள் சட்டரீதியாக அல்லாத வழிகளில் இடத்தைக் கைப்பற்ற முயன்றனர். இது எப்படி நியாயம்?

அதிகாரிகளின் துரோகம்

நீதிமன்றங்களின் தீர்ப்புப்படி, அந்த இடத்தில் எந்த மாறுதலோ, கட்டடம் கட்டுவதோ தடை செய்யப்பட்டது. 1886இல் இருந்த நிலை நீடிக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனைக் கண்காணிக்க இரண்டு மாவட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஒருவர் மாவட்ட மாஜிஸ்திரேட் எனப்படும் கலெக்டர். மற்றவர் பைசாபாத் நகர மாஜிஸ்திரேட். மாவட்ட மாஜிஸ்திரேட் பதவியில் 1.6.1949இல் வந்தவர் கே.கே.கே.நாயர். நகர மாஜிஸ்திரேட் ஆக இருந்த குரு டட் சிங் என்பவர் நாயரின் கீழ் பணிபுரிபவர். மேலும் நாயரின் இந்து மத வெறிச் செயல்களுக்கு ஆதரவு தந்தவர். காங்கிரசுக் கட்சியில் உள்ள மதச்சார்பற்ற தலைவர்களால் இந்து மதத்திற்குக் கேடு விளைவதாகக் கருதிய பிற்போக்காளர். 60 ஆண்டுக்காலமாகக் கட்டிக் காக்கப்பட்ட நீதிமன்றக் கட்டளைகள் காற்றில் பறக்க விடப்பட்ட கேவலம் நடந்ததற்கு இந்த இரண்டு அரசு அதிகாரிகளுமே காரணம்.

முறைகெட்டுப் பணியாற்றிய இந்த இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். என்றாலும், அவர்கள் செய்த தீங்கு இந்திய நாட்டையே இன்றளவும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

கோவில் ஒன்றைக் கட்ட அனுமதி கோரி இந்துக்களால் தரப்பட்ட விண்ணப்பத்தின் மீது அறிக்கை தருமாறு மாவட்ட மாஜிஸ்திரேட் நாயர் கேட்டார். 10.10.1949இல் குருடட் சிங் அறிக்கை தருகிறார்:

பகவான் ராமச்சந்திரஜி பிறந்த இடத்தில் அழகான, பெரிய கோவில் கட்டப்பட வேண்டியது அவசியமே என அறிக்கை தந்தார். ராஜஸ்தானத்தைச் சேர்ந்த சத்திரியர் குருடட் சிங். இந்த இருவருடன், நெருக்கமாகப் பழகத் தொடங்கியவர் கோபால் சிங் விசாரத் எனும் இந்துமகா சபாவின் மாவட்டத் தலைவர்.

ராமனுக்குக் கல்யாணமாம்


ராமன் கல்யாண உற்சவ நாள் நெருங்கியது. அயோத்தியா நகரமே பதற்றம் அடையத் தொடங்கியது. முசுலிம்கள் வீட்டை விட்டு வெளியேவரப் பயந்தனர். தங்கள் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்யவும் பயந்து கடைகளை மூடிவிட்டனர். ராமன் கல்யாண நாளன்று, பாபர் மசூதி இந்துக்கள் வசமாகிவிடும் எனப் பரவலாக நம்பப்பட்டது. ராமன் கல்யாண உற்சவம் 24.11.1949இல்தான் தொடங்க வேண்டும். அதற்கு முன்னதாக நவம்பர் 5இல் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு சரயு நதியில் புனித நீராடுதல் தொடங்கியது. மூன்று முசுலிம்கள் பாபர் மசூதிக்குப் போனபோது இந்து பைராகிகள் அவர்களைத் தடுத்தனர். மீறி உள்ளே போக முயன்றவர்களை அடித்துத் துரத்தினர். இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர். இந்து பைராகிகளிடம் சிக்கிக் கொண்ட அவரின் கை,கால்களை உடைத்து அடித்து நொறுக்கிவிட்டனர். அவருக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையின் பெயர் சிறீராம் மருத்துவமனை என்பதுதான் வேடிக்கை!

பிணக்குழிகள் தோண்டப்பட்டன

பாபர் மசூதியில் கப்ர்ஸ்தான் இருந்தது. இறந்தவர்களைப் புதைக்கும் இடம். அங்கே பைராகிகள் மண்ணைத் தோண்ட ஆரம்பித்தனர். அதுபற்றி மாவட்ட மாஜிஸ்திரேட் நாயரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் கொடுக்கப்பட்ட நாள் 9.11.1949. நகர மாஜிஸ்திரேட் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாயர் தாக்கீது பிறப்பித்தார். நகர மாஜிஸ்திரேட் குருடட் சிங் சாவகாசமாக 12.11.1949இல்தான் இடத்துக்குப் போனார். அதற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட சவக்குழிகளைப் பைராகிகள் தோண்டிவிட்டனர். கனட்டி மசூதி எனப்படும் சிறிய மசூதியையும் இடித்துத் தரைமட்டம் ஆக்கிவிட்டனர். யாக குண்டங்கள் அமைக்க குழிகள் தோண்டப்பட்டு விட்டன. சனாப் கித்வா சாகிப் என்பவரின் சமாதி இடிக்கப்பட்டு விட்டது. ஷா ஹட்டா சமாதியும் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் இந்துப் பண்டாரம் தன் படுக்கைக்கான விதானமாக, சமாதியின் மேல்பகுதியை அமைத்துக் கொண்டான்.

கலெக்டரின் நடத்தை

என்றாலும் குரு டட், நாயர் என்ற இரு அதிகாரிகளும் தடுப்பு நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் இந்துக்களுக்கு ஆதரவு காட்டி நடந்து கொண்டனர். மாவட்ட காங்கிரசுத் தலைவராக இருந்த அட்சய பிரம்மச்சாரி என்பவர் இதுபற்றி எழுதினார். மாவட்ட மாஜிஸ்திரேட் நாயரை நேரில் சந்தித்துப் பேசி விவாதித்தார். விளைவு என்ன தெரியுமா? அன்றிரவு அவரது வீட்டுக்குள் மூன்று பேர் நுழைந்து அவரை நையப் புடைத்தனர். நாயரிடம் அவர் கூறிய வாசகங்களை அப்படியே திருப்பிக் கூறிச் சொல்லிச் சொல்லி அடித்தனர் என்பதுதான் கொடுமை! இவரும் அவரும் பேசிக் கொண்டதை மூன்று நபர்கள் ஒப்பித்தது எப்படி? நாயர் அப்படியே கூறி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.- சு.அறிவுக்கரசு

SOURCE:Unmaionline 2013 ஆகஸ்ட் 01-15


பாபர் மசூதி இடிப்பு காவிக் கும்பலின் திட்டமிட்ட சதியே!- சு.அறிவுக்கரசு. PART 4.


***பாபர் மசூதிக்குள் இருட்டில் திருட்டு ராமன் - PART 2. - சு.அறிவுக்கரசு.***

***பாபர் மசூதியில் இராமன் நுழைந்தது எப்படி? PART 1. - - சு.அறிவுக்கரசு. ***

மீண்டும் வாருங்கள்.(தொடரும்)

***வாஞ்ஜுர்***
அனைத்து பதிவுகளும்
>>>> *** இங்கே*** <<<<


**************************

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP