**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

ஐ.நா.வின் இந்த அநாகரிக கொடுமையைக் கேட்டீர்களா?

>> Monday, April 15, 2013

ஆண்-பெண் பால் உறவுகளை மாசுபடுத்தி, விலங்குகள்போல் வாழலாம் என ஐ.நா. மன்றம் கூறுமானால், நாட்டைத் துறந்து காட்டுக்குப் போவதுதான் சரியாக இருக்கும்.

கொடுமை இழைத்தது யாரோ ஒரு தனி மனிதனோ ஒரு சர்வாதிகார நாடோ அல்ல. உலக நாடுகளில் நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா. சபை)தான்.

ஆம்! ஐ.நா. சபையின் பெண்களுக்கான ஆணையம் (Commission On the Status of Women-CSW 57) 2013 மார்ச் 4-15இல் ஒரு தீர்மானம் வெளியிட்டுள்ளது. ‘‘பெண்கள் மற்றும் யுவதிகளுக்கெதிரான அனைத்து வகைக் கொடுமைகளையும் தடுத்து நிறுத்தல்’’ (Elimination and prevention of all forms of violence against women and girls) என்பது அந்தத் தீர்மானம், அல்லது சட்டத்தின் (Act) பெயராகும்.

பெயரைப் பார்த்து ஏமாந்துபோகாதீர்கள். பொதுவாகவே ஐ.நா.வின் தலைப்புகள் கவர்ச்சியானவையாகவும் சமூக ஆர்வலர்களை ஆசுவாசப்படுத்துபவையாகவுமே இருக்கும். அப்படித்தான் இதுவும்.

உலக நாடுகளில் பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமைகளுக்கு ஐ.நா. சாவுமணி அடிக்கப்போகிறது என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துபோவீர்கள்.

போர்களில் எதிரிகளின் இராணுவ வீரர்கள் (ஆண்கள்) அந்த நாட்டின் பெண்கள்மீது நடத்தும் பாலியல் பலாத்காரங்கள், பெண்களைக் கடத்தும் சம்பவங்கள், விபசாரத்தில் ஈடுபடுத்தல், இயல்பான அடிப்படை உரிமைகளைக்கூட மறுத்தல் ஆகிய கொடுமைகளுக்கெதிரான தீர்மானம்தான் இது என்று எண்ணிவிடாதீர்கள்!

இன்று பாலஸ்தீனம், இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அந்நாட்டுப் பெண்களுக்கெதிராக அந்தியப் படைகள் இழைத்துவரும் வன்கொடுமைகள், மாலி, மியான்மர் போன்ற நாடுகளில் அப்பாவி முஸ்லிம் பெண்களுக்கெதிராக அந்நாடுகளின் தீவிரவாதிகளும் காவல்படையினரும் நடத்தும் அக்கிரமங்கள், வசதியான நாடுகளில் வீட்டு வேலைகள் பார்க்கும் ஏழைநாட்டுப் பெண்கள்மீது வீட்டு எசமானர்கள் செய்யும் கொடுமைகள் போன்ற எதையேனும் ஐ.நா. தீர்மானம் தடுக்கப்போகிறது என்று கனவிலும் நினைத்துவிடாதீர்கள்!

தீர்மானம் என்ன சொல்கிறது?

வேறு என்னதான் சொல்கிறது அச்சட்டம்? நீங்களே படியுங்கள் அந்தப் புனித (?) சட்டத்தை:

1. இளம்பெண்களுக்கு முழுப் பாலினச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்; ஒரு பெண் பெண்ணையோ, அல்லது ஒரு பெண் ஆணையோ வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். திருமண வயதை உயர்த்த வேண்டும்.

2. பருவ வயதை நெருங்கும் சிறுமிகளுக்குக் கர்ப்பத் தடை செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படுவதுடன் கருக்கலைப்புக்கு அனுமதியும் வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் பாலின மற்றும் மகப்பேறு உரிமை (விரும்பினால் பிள்ளை பெறலாம்; இல்லையேல் கலைக்கலாம் எனும் உரிமை) வழங்கல் வேண்டும்.

3. ஆசை நாயகியையும் மனைவிக்குச் சமமாக நடத்த வேண்டும்; விபசாரத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு, சட்டப்படி பிறந்த பிள்ளைகளுக்கு வழங்கும் எல்லா உரிமைகளையும் சமமாக வழங்க வேண்டும்.

4. விலைமாதுகளுக்கு எல்லாவிதமான உரிமைகள், பாதுகாப்பு, மரியாதை வழங்கப்பட வேண்டும். விபசார விடுதிகளில் வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

5. ஒரு பெண், தன்னை தன் கணவன் கற்பழித்ததாகவும் தன் விருப்பமின்றி பலாத்காரம் செய்ததாகவும் குற்றம்சாட்டுவதற்கு உரிமை உண்டு. அப்போது, அந்நியப் பெண்மீது பாலியல் பலாத்காரம் செய்தால் என்ன தண்டனையோ அதே தண்டனை கணவனுக்கும் வழங்கப்பட வேண்டும்.

6. ஆண்-பெண் இடையே பாகப்பிரிவினைச் சட்டத்தில் சமமான பங்கு அளிக்கப்பட வேண்டும்.

7. திருமணத்தைப் பொறுத்தவரை, பலதார மணம், ‘இத்தா’ மேற்கொள்ளல், ‘வலீ’யை ஏற்படுத்தல், ‘மஹ்ர்’ அளித்தல், ஆண் குடும்பத்தின் செலவுகளை ஏற்றல் ஆகிய நடைமுறைகளை அகற்ற வேண்டும்; ஒரு முஸ்லிம் பெண் முஸ்லிம் அல்லாத ஆணை மணமுடிக்க அனுமதிக்க வேண்டும்.

8. மணவிலக்கு அளிக்கும் அதிகாரத்தைக் கணவனிடமிருந்து பறித்து, நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும். மணவிலக்கு ஆனபின் எல்லா சொத்துகளையும் இருவரிடையே பங்கிட வேண்டும்.

9. ஒரு பெண், கணவனின் அனுமதியின்றியே வெளியே செல்லலாம்; பயணம் போகலாம்; வேலைக்குச் செல்லலாம்; கர்ப்பத் தடை சாதனங்களைப் பயன்படுத்தலாம்.


இவைதான் வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் ஐ.நா. சபையின் பெண்கள் ஆணையம் தீர்மானித்திருக்கும் சட்டங்கள்.

யாரைக் கேட்டு?

முதலில், இச்சட்டங்களையெல்லாம் அந்த ஆணையம் யாரைக் கேட்டு நிறைவேறியுள்ளது? அல்லது பரிந்துரை செய்துள்ளது? அமெரிக்காவும் ஐரோப்பாவும் விரும்பும், அல்லது சுதந்திரம் என்றும் நாகரிகம் என்றும் கருதும் ஒன்றை உலகப் பெண்கள்மீது திணிக்க ஐ.நா. சபைக்கு யார் உரிமை வழங்கினார்கள்?

மேலை நாடுகளின் கைப்பொம்மையாகச் செயல்படும் ஐ.நா.வும் அதன் துணை அமைப்புகளும் நினைத்ததை எல்லாம் சட்டமாக்குவதற்கு இறைவனே அனுமதி வழங்கிவிட்டானா? அல்லது வான்மறை ஏதேனும் இந்த அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கிறதா?

அவர்கள்தான், சமயக் கட்டுப்பாட்டிற்கோ சமூகப் பண்பாடுகளுக்கோ மனித நாகரிகத்திற்கோ கீழ்ப்படியாமல் காட்டுமிராண்டித்தனமான மிருக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால், புனித வான்மறையை, பரிசுத்தமான மார்க்கத்தைப் பின்பற்றும் உலக முஸ்லிம்கள் மீது ஐ.நா.வின் பேரால் அநாகரிகத்தைத் திணிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

ஐ.நா. சபை இயங்குவது அமெரிக்காவில்; ஐ.நா.வின் பட்ஜெட்டில் 60 விழுக்காடு நிதியை வழங்குவது அமெரிக்கா; வீட்டோ அதிகாரம் படைத்த ஐந்து நாடுகளில் மூன்று மேலைநாடுகள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு மேற்கத்திய நாடுகள் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில்தான் நாட்டாண்மைத் தனம் செய்கின்றன என்றால், கலாசாரம், பண்பாடு, சமயக் கட்டுப்பாடு, பெண் ஒழுக்கம் ஆகிய தனிமனித உரிமைகளிலும் தலையிடுவது மிகப்பெரும் ஆபத்தாகும். இவர்களின் அராஜகத்தை அடக்காவிட்டால் உலகம் பேரழிவையே சந்திக்கும்.

குடும்ப அமைப்பைச் சீரழிக்கவா?

இரண்டாவதாக, உலக அளவில் குடும்ப அமைப்புகளும் உறவுமுறைகளும் சீரழிவதற்கே ஐ.நா.வின் பெண்கள் அமைப்பு கூறும் தீர்மானங்கள் உதவும். குடும்ப அமைப்பு சிதைந்தால், உறவு முறைகள் அழிந்தால் மனித இனம், முன் எப்போதும் இல்லாத பேரழிவைச் சந்திக்கும் என்பதை ஏன் மறந்துவிட்டார்கள்?

திருமணம் என்பது, புனிதமானதொரு வாழ்க்கை ஒப்பந்தம். அங்கே இரு உள்ளங்கள் மட்டும் இணைவதில்லை; இரு குடும்பங்களே இணைகின்றன. ஒருவரின் இன்ப துன்பங்களில் மற்றவரும் பங்கெடுத்துக்கொண்டு, சுமைகளை -அவரவர் இயற்கைக்கேற்றவாறு- பகிர்ந்துகொண்டு, நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல தலைமுறைகளைப் பெற்றுக்கொடுக்கும் அற்புதமான வலைபின்னலே இல்லற வாழ்க்கை.

திருமணம் என்று ஒன்று இருப்பதால்தான் உலகில் மனித வாழ்க்கை எனும் சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது; மனித இனப் பெருக்கம் தடங்கலின்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது; மனித உள்ளங்களில் அன்பு, பாசம், மனிதநேயம் ஆகிய மலர்கள் பூத்துக்கொண்டிருக்கின்றன; அழுகையும் சிரிப்பும் மனித முகங்களில் தவழ்ந்துகொண்டிருக்கின்றன.

கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, தொழில், நிர்வாகம், ஆட்சி… என எந்த இயக்கத்தை எடுத்துக்கொண்டாலும் அவற்றுக்குப் பின்னால் குடும்ப வாழ்க்கை ஏதேனும் ஒருமுறையில் உந்துதல் சக்தியாக இருக்கும்.

திருமண வாழ்க்கையின் அடிவேர்களையே பிடுங்கி எறியும் வகையில், அதன் தளிர்களில் வெந்நீரை ஊற்றும் விதத்தில் ஆண்-பெண் பால் உறவுகளை மாசுபடுத்தி, விலங்குகள்போல் வாழலாம் என ஐ.நா. மன்றம் கூறுமானால், நாட்டைத் துறந்து காட்டுக்குப் போவதுதான் சரியாக இருக்கும்.

இஸ்லாத்தின் மீது தாக்குதல்

மூன்றாவதாக, உலக முஸ்லிம்களையும் அவர்களின் வளமான பண்பாடுகளையும் இஸ்லாம் மார்க்கத்தின் தனித்தன்மைகளையும் அழித்தொழிப்பதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இதுவரை கைகோத்திருந்தது போய், இப்போது ஐ.நா.வே அந்த வேலையைக் கையிலெடுத்திருக்கிறதே அது ஏன்? ஐ.நா. சபையின் இலக்கும் இலட்சியமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, அதன் பாரம்பரிய மாண்புகளை வெட்டி வீழ்த்துவதுதானா?

ஐ.நா. சபை மகளிர் ஆணையத் தீர்மானங்கள் அனைத்தும், குறிப்பாகக் கடைசி நான்கு (6,7,8.9) ஷரத்துகளும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் குறிவைத்தே சேர்க்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.

முஸ்லிம் சமூகத்தின் கூட்டுவாழ்க்கை முறை, மக்கட் தொகை அதிகரிப்பு, என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ‘இஸ்லாம்’ என்று வந்துவிட்டால் முஸ்லிம்கள் அனைவரும் ஐக்கியமாகிவிடுவது, மேலை நாட்டினரிடையே இஸ்லாம் வேகமாகப் பரவிவருவது முதலான அம்சங்கள் மேற்கத்திய உலகை அச்சுறுத்திவருகின்றன.

இதனால் முஸ்லிம்களின் குடும்ப அமைப்பைச் சீர்குலைத்து, வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என மேற்குலகம் நம்புகிறது. சட்டப் புறம்பான பாலியல் உறவுகள் மேலை நாடுகளில் பரவலானதால் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துபோனதைப் போன்றே, முஸ்லிம் உலகிலும் குறைப்பதற்கு அவர்கள் செய்யும் சதியே இது.

1995லிருந்து ஐ.நா. சபை அமைப்புகளையும் மாநாடுகளையும் வழிநடத்துவதில் சியோனிஸ்ட் லாபி திட்டமிட்டு வேலை செய்துவருகிறது. ஐ.நா. மாநாடுகளின் திட்டங்கள், தீர்மானங்கள் ஆகியவற்றை வரையறுப்பதில் சியோனிஸ்டுகளின் கரம் வலுவாக உள்ளது.

ஆனால், வரலாற்று உண்மை ஒன்றை இந்தத் தீய சக்திகள் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. உலக முஸ்லிம்கள் தம் உயிருக்கோ உடைமைக்கோ பங்கம் நேர்ந்தால்கூட பாராமுகமாக இருந்துவிடுவார்கள். ஆனால், எப்போதெல்லாம் இஸ்லாத்தின் மீதும் அதன் நம்பிக்கைகள் மற்றும் கலாசாரத்தின் மீதும் தாக்குதல் வருகிறதோ அப்போதெல்லாம் முஸ்லிம்கள் கொதித்தெழுந்துவிடுவார்கள்; உயிரைக் கொடுத்தும் தங்கள் மார்க்கத்தைப் பாதுகாத்துவிடுவார்கள்; அதில் பின்வாங்கமாட்டார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் பெண் ஆணையம் வெளியிட்டுள்ள இத்தீர்மானங்களை எகிப்து, ஈரான், கத்தர், நைஜீரியா, சூடான், ஹோன்டுராஸ், வாடிகன் போன்ற நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன; இந்த அறிவிப்புகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

எகிப்தில் இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பு இத்தீர்மானங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளது. சமூகக் கட்டமைப்பைத் தகர்க்கக்கூடிய தீர்மானங்கள் என அறிவித்துள்ளது.

பெண்கள் செய்யும் எல்லா பாலியல் குற்றங்களுக்கும் இத்தீர்மானங்கள் சட்ட அனுமதி கொடுப்பதை ஏற்க முடியாது என இக்வான்கள் அறிவித்துள்ளனர். - கான்பாகவி

நன்றி : அல்முஜ்தமா.

SOURCE: http://lankamuslim.org

1 comments:

சிவக்குமார் April 16, 2013 at 11:00 AM  

இதுல எது கொடுமைன்னு சொல்ல வர்றீங்கன்னு புரியல?

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP