**Followers.அன்பர்கள்.** தாங்களும் இணையலாமே!!!

உடலையும் மனதையும்..ரெப்ரெஷ் REFRESH செய்யுங்கள்..

>> Thursday, March 26, 2009

கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் அவ்வப்போது ரெப்ரெஷ் செய்து டேட்டாவை அப்டேட் செய்கிறோம்.

அதே போல உங்கள் உடலையும் மனதையும் ரெப்ரெஷ் செய்தீர்களா?

இதென்ன புதுசா இருக்கு? இங்கு ரெப்ரெஷ் செய்திட எந்த மெனுவிற்குச் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

கம்ப்யூட்டருடன் முறையாகச் செயல்படுகிறீர்களா? என்ன கேள்வி இது என்று எண்ணுகிறீர்களா?

ஆம் நாள் ஒன்றின் பல மணி நேரத்தை கம்ப்யூட்டருடன் தானே கழிக்கின்றீர்கள். வீட்டில் அலுவலகத்தில், கல்வி நிலையங்களில் என எங்கு சென்றாலும் கம்ப்யூட்டரை நம்பித்தான் பல வேலைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.

காரில், ஸ்கூட்டரில் தினந்தோறும் செல்கையில் அதில் எப்படி அமர வேண்டும் என ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து பலரின் அறிவுரை கேட்டு நடக்கிறோம். ஆனால் கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்கையில் நம் உடல்நிலையைக் கவனிப்பதே இல்லை.

இது தொடரும் நாட்களில் நிச்சயம் நமக்கு தீராத உடல் பிரச்னையைக் கொண்டு வந்து சேர்க்கும். எனவே அடிப்படையில் என்னவெல்லாம் நாம் கவனமாகக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

நிச்சயம் இதனை உணர்ந்திருப்பீர்கள். கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கையில் உடலின் பின் பகுதியில் வலி இருக்கும். இது பஸ்ஸில் வந்ததனால், ஸ்கூட்டரில் சரியாக அமர்ந்து வராததால் என்று ஏதேனும் ஒரு காரணத்தை நமக்கு நாமே சொல்லி சமாதானப்படுத்திக் கொள்வோம். கண்கள் கொள்ளும் பார்வை சற்று வெளிறத் தொடங்கும்.

வயதாயிற்று அதனால் என்று எண்ணுவோமோ ஒழிய கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்ப்பதால் என்று எண்ண மாட்டோம்.

சரி, கம்ப்யூட்டரில் பணியாற்றுவதால் தான் இந்த வலிகள், பார்வைக் கோளாறு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்கிறீர்களா?

இதோ மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் காணலாம்.

1.முதலில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது உங்கள் கம்ப்யூட்டர் அதன் டேபிளில் எப்படி வைக்கப்பட்டிருக்கிறது என்பது தான்.

முதலில் உங்கள் நாற்காலி. உங்கள் பாதம் இரண்டும் தரையில் தட்டையாகப் பட்டு அமர வேண்டும். உங்கள் முழங்கால்கள் இரண்டும் 90 டிகிரி கோணத்தில் இருக்குமாறு நாற்காலியை அட்ஜஸ்ட் செய்து அமர வேன்டும்.

இந்த நிலையில் உங்கள் தொடைகள் இரண்டும் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். இல்லையேல் மாற்றி இணையாக இருக்கும்படி நாற்காலையைச் சரி செய்து அமர வேண்டும். உங்களுடைய இடுப்பும் 90 டிகிரி கோணத்தில் மடங்கி நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.

2. அடுத்ததாக உங்கள் மவுஸும் கீ போர்டும் எப்படி செட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பார்ப்போம். இவை இரண்டும் உங்கள் முழங்கைகள் இருக்கும் நிலைக்கு நேராக அமைந்திருக்க வேண்டும். சிறிது கீழாகக் கூட இருக்கலாம்.

இதனால் உங்கள் தோள்கள் சற்று தளர்வாக இருக்க முடியும். அடுத்ததாக மானிட்டர். மானிட்டரில் உள்ள வரிகள் உங்கள் கண்களின் நேர் பார்வைக்குச் சற்றுக் கீழாக அமையும்படி வைக்க வேண்டும். எப்போதும் மானிட்டரை நேர் கோணத்தில் பார்க்கும் நிலையில் இருக்க வேண்டும்.

மானிட்டரில் இருந்து குறைந்தது 16 அங்குல தூரத்தில் நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் தலை நேராக இருக்க வேண்டும். சற்று குனிந்தவாறாகவோ அல்லது நிமிர்ந்த வாறாகவோ இருந்தால் கண் மற்றும் கழுத்துப் பகுதியில் வலி தொடங்கும்.

3. மேலே சொன்னபடி அனைத்தையும் செட் செய்துவிட்டீர்கள். இனி எப்படி பணியாற்றலாம் என்று பார்ப்போம். முதலில் மேலே குறிப்பிட்டுள்ளபடி அமர்ந்திடுங்கள். அந்த நிலையிலேயே உங்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மாறாக ஒரு நிலையை எடுத்தால் நிச்சயம் அது எதிர்காலத்தில் பிரச்சினையைத் தரும். கம்ப்யூட்டரில் டைப் செய்கையில் மிக மிகக் குறைந்த சக்தியைப் பயன்படுத்துவதை உறுதி செய்திடுங்கள்.

கீ போர்டினை பெரிய அளவில் முயற்சி எடுத்து இயக்குவதாக இருக்கக் கூடாது. மிகவும் எளிதாகவும் மெலியதாகவும் கீ களை இயக்கப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கரங்களில் ஏற்படும் வலிகள் முழுமையும் போக்கலாம்.

4. கம்ப்யூட்டரில் தொடந்து செயல்படுவதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறீர்களா? கீ போர்டிலிருந்து எழாமல் வேலை பார்த்தேன் என்று மார் தட்டிக் கொள்கிறீர்களா?

இங்கு தான் தவறு செய்கிறீர்கள். கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் அதனை நிறுத்திவைத்து சற்று பிரேக் கொடுக்க வேண்டும்.

எழுந்து வெளியே வந்து நடக்கலாம்; கரங்களை எளிதாகச் சுழற்றிப் பார்க்கலாம். முக்கியமாக உங்கள் விரல்கள் அமைந்திருக்கும் பகுதியில் சிறிய அளவில் மசாஜ் கொடுத்துப் பார்க்கலாம். 30 நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து வேலை செய்யக் கூடாது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே எழுந்து வந்து கைகள் மற்றும் கால்களை மடக்கி நீட்டிப் பார்க்கவும். கரங்களை நீட்டுகையில் மூச்சுக் காற்றினை ஆழமாக உள்ளிழுத்து விடவும். அலுவலகத்தில் கிடைக்கும் இடத்தில் ஒரு சுற்று நடந்து வந்து பின் பணியைத் தொடரலாம்.

இது நம் உடம்பிற்கும் சற்று உற்சாகத்தைத் தரும்.

அடுத்ததாகக் கவனம் செலுத்த வேண்டியது கம்ப்யூட்டரைச் சுற்றி அமைந்திருக்கும் வெளிச்சம். மிகவும் பிரகாசமான வெளிச்சம் உங்களைச் சுற்றி இருப்பதனைத் தவிர்க்கவும்.

ஏனென்றால் அது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும்.

ஆனால் நீங்கள் படிப்பதற்குத் தேவையான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

படிப்பதற்குச் சிரமப்படும் வகையில் வெளிச்சம் இருந்தால் அது கண்களுக்குப் பிரச்சினை அளிப்பதுடன் கம்ப்யூட்டர் பணியையும் பாதிக்கும்.

கம்ப்யூட்டரில் மட்டும் தானே வேலை பார்க்கிறோம். எந்த குறிப்பையும் படித்து அதனைப் பயன்படுத்தவில்லையே என்று எண்ணும் சிலர் மானிட்டர் வெளிச்சம் போதும் என்று முடிவு செய்து இருட்டில் அமர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்வார்கள்.

இது முழுக்க முழுக்க தவறு. இருட்டில் நிச்சயம் மானிட்டரின் ஒளி பிரகாசமாக இருக்கும். அதை மட்டுமே கண்கள் பார்த்து பணி செய்வது கூடாது.

தொடர்ந்து கம்ப்யூட்டர் கீ போர்டில் மட்டுமே பணியாற்றும் வகையில் உங்கள் வேலை இருக்கிறதா?

அப்படியானால் உங்கள் விரல்களுக்கு நீங்கள் தனிக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பணி புரிபவர்களுக்கு விரல்கள் அவ்வப்போது உணர்வற்று போவதை உணர்ந்திருப்பார்கள்.

இதற்கு அடிக்கடி சிறிய உடல் பயிற்சியில் ஈடுபடுவது அவசியம்.

விரல்களை எவ்வளவு நீளம் நீட்ட முடியுமோ அந்த அளவிற்கு நீட்டி அப்படியே பத்து விநாடிகள் வைத்திருக்க வேண்டும்.

பின் விரல்களை மூடி மீண்டும் முன்பு போல நீட்ட வேண்டும். இதே போல உங்கள் தலையை இரண்டு பக்கமும் எவ்வளவு கோணத்தில் திருப்ப முடியுமோ அந்த அளவிற்கு திருப்பி 10 விநாடிகள் வைத்திருந்து பின் மீண்டும் நேராகக் கொண்டு வரும் பயிற்சியை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

தோள்களில் வலி தொடங்குவதாகத் தெரிந்தால் அதனை ஒரு சுழற்சிக்குக் கொண்டுவரும் வகையில் எதிர் எதிர் திசைகளில் கொண்டு வரும் பயிற்சியை அவ்வப்போது செய்திட வேண்டும்.

இறுதியாக பின் இடுப்பு. தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்கள் அவ்வப்போது எழுந்து கைகளை இடுப்பின் இருபுறமும் வைத்து இடுப்பை முன்புறமாகவும் தோள்களை பின்புறமாகவும் கொண்டு செல்வது போல பயிற்சி செய்திட வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு முறை நீட்டுகையில் அதே நிலையில் பத்து விநாடிகள் வைத்திருந்து பின் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இதனால் இடுப்பு மட்டுமின்றி முழு உடம்பிற்கும் உற்சாகம் கிடைக்கும்.

வழக்கமான கம்ப்யூட்டர் டிப்ஸ்களுக்கு இடையில் இது என்ன உடற்பயிற்சி டிப்ஸ் என்று யோசிக்கிறீர்களா? உடல் வலி வருகையில் அது கம்ப்யூட்டர் பணியினால் அல்ல என்று எண்ணுபவர்களே ஏராளம்.

ஆனால் அது தான் அடிப்படைக் காரணம் என்று வலி அதிகமான பின்னர் தான் நாம் உணர்கிறோம். எனவே தான் பன்னாட்டு அலுவலகங்களில் கம்ப்யூட்டர்களில் பணி புரிபவர்களுக்கு இது போல உடலையும் மனதையும் அவ்வப்போது உற்சாகப்படுத்த இடமும் வசதிகளும் நேரமும் தருகின்றனர்.

ஏனென்றால் சுவரை வைத்துத்தானே சித்திரம் வரைய முடியும்.

computermalar 03-10-09

2 comments:

seik mohamed March 26, 2009 at 4:52 PM  

good tips,
thanks

கிளியனூர் இஸ்மத் March 27, 2009 at 3:38 PM  

நல்ல செய்தி கவனம் தேவை வாழ்த்துக்கள்

இஸ்லாமிய வரலாற்றில்

இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.
பலஸ்தீன் வரலாறு

.

.

About This Blog

***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.

Labels

Lorem Ipsum

ISLAM HISTORY.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP